பேராசிரியர். முளங்குழி.பா.லாசர்
இந்திய நாட்டு விடுதலைப்போரில் வெள்ளையரை எதிர்த்து நின்று போரிட்டு, வெற்றி வாகை சூடி, இழந்த நாட்டை வெள்ளையரிடமிருந்து கைபற்றிய ஒரே வீரமங்கை வேலுநாச்சியார்.
இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும், முத்தம்மாள் நாச்சியாருக்கும் 1730- ஆம் ஆண்டு மகளாக பிறந்த வேலுநாச்சியார். பயமே தெரியாதவர். வீரம் நிறைந்தவர். கணவனைக் கொல்ல வந்த புலியுடன் போராடி அதனைக் கொன்ற வீரமங்கை. வீரத்தோடு விவேகமும் நிறைந்த பேரழகி.
வேலுநாச்சியார் தமிழ், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு ஆகிய எட்டு மொழிகள் அறிந்தவர். முறையாகப் போர்பயிற்சி பெற்றவர். நான்கு அடி நீளமுள்ள வளரியை வீசினால் அது 45 அடிவரை தூரத்தில் நிற்கும் எதிரியை வெட்டி வரும். அந்த வளரி வீச்சில் வல்லவர். குதிரையேற்றம், வாள்வீச்சு, அம்பு எய்தல், சிலம்பக்கலை போன்ற அத்தனைப் போர் பயிற்சிகளையும் பெற்றவர்.
காளையார் கோயில் ஆலயத்தில் வழிபாடு செய்து திரும்பிய சிவகங்கை சீமை மன்னன் முத்துவடுகநாத உடையாத்தேவரை பரங்கியார் வஞ்சகமாகக் கொன்று விட்டனர். கணவனது உயிரற்ற உடலைக் கண்ட வேலுநாச்சியார் ஒருகணம் தானும் உயிரை விடலாமா என்று எண்ணினார். ஆனால் மறுகணம் தன் கணவரை வஞ்சமாகக் கொன்ற வெள்ளையரை பழிக்குபழி வாங்கி அவர் ஆண்ட நாட்டை மீட்பேன் என வீர சபதம் செய்தார். அவர் இரத்தத்தை எடுத்து தன் நெற்றியில் திலகமாக இட்டார். தன் மக்கள் வெள்ளாச்சி நாச்சியார், மருது பாண்டியருடன் கொல்லங்குடியில் எட்டாண்டுளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
பின்னர் அனைவரும் கோபால் நாயக்கர் ஆட்சி புரிந்த விருப்பாட்சி பாளையம் சென்றனர். விருப்பாட்சி பாளைய கோபால் நாயக்கர் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ராஜ்ய பிரதான தாண்டவராயபிள்ளை, மருதுபாண்டியர் உடனிருந்தனர்.
சிவகங்கைச் சீமையை மீட்க வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஹதர் அலியை மருது சகோதர்களுடன் ஆண்வேடத்தில் நம்பிக்கையோடு சென்று சந்தித்தார்.
ஹதர் அலி உங்கள் அரசியார் எங்கே என்று வேலு நாச்சியாரிடமே கேட்டார். அவர் தன் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்து விட்டு நான் தான் வேலுநாச்சியார் என்று கூறிவிட்டு உருது மொழியிலே அவருடன் பேசத் தொடங்கினார்.
மாமன்னர் அவர்களே! இன்று சிவகங்கைச் சீமையும், இராமநாதபுரமும் சீரிழிந்து வருவதை அறிவீர்கள். என் கணவரை நயவஞ்சகமாய்க் கொன்றார்கள். அந்தப் பரங்கியர் தங்கள் பெயரைக் கேட்டால் மட்டும் பயப்படுகிறார்கள். எங்களிடம் துணிச்சலும், திறமையும் உள்ளது. ஆனால் நவீன ஆயுதங்களில்லை. எனவே தாங்கள் நவீன ஆயுதங்களையும், போர்ப்பயிற்சி பெற்ற வீரர்களையும் தந்துதவ வேண்டும் என்று உருது மொழியிலே பேசினாள்.
தன்னுடைய தாய்மொழியாம் உருது மொழியிலே, முஸ்லீம் மதப்போதகர்களை விட இலக்கண சுத்தமாக ஒரு இந்துமதத்தைச் சேர்ந்த பெண் பேசியதைக் கேட்ட ஹதர்அலி மெய்சிலிர்த்துப் போனார். அளவற்ற ஆனந்தம் அடைந்தார்.
வேலுநாச்சியார் கேட்டபடி 12 பீரங்கிகள், ஐயாயிரம் துப்பாக்கிகள், போர்வீரர்களையும் தன் மகன் திப்பு சுல்தான் மூலமாக விருப்பாச்சிக்கு அனுப்பினார். கடவுளை வணங்கி வழிபட ஒரு இந்து ஆலயத்தையும் கட்டிக் கொடுத்தார்.
வேலுநாச்சியார் பாதுகாப்பாக தங்கி படை திரட்ட ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். வேலுநாச்சியார் படைகளுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். விடுதலை விரும்பிய இளைஞர்கள் வேலுநாச்சியார் படையில் சேர்ந்தனர். சிவகங்கை செல்வந்தர்கள் வேலுநாச்சியாருக்குப் பண உதவிகள் செய்தனர். மக்கள் ஆதரவு அளித்தனர்.
படைவீரர்கள் மத்தியின் நின்று கொண்டு வேலுநாச்சியார் வீரவுரை நிகழ்த்தினார். தனக்கு உதவிய கோபால் நாயக்கர், ஹதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு நன்றி கூறினார். மக்கள் அலைகடலென வந்து வாழ்த்தி வழியனுப்பினர். படை வீறுடன் வைகைக்கரை, மானாமதுரையில் நடந்த போர்களில் வேலுநாச்சியார் வெற்றி பெற்றார். காளையார் கோயில் கோட்டையில் ஆட்சிபுரிந்த ஜோசப் ஸ்மித் வேலுநாச்சியார் படையைக் கண்டு அஞ்சி குதிரை மீதேறி தப்பி ஓடினான். அவன் வேலுநாச்சியாரால் கொல்லப்பட்டு காளையார் கோயில் வேலுநாச்சியார் வசம் வந்தது. திருப்பத்தூரில் நடந்த கடும் போரிலும் வேலுநாச்சியாரே வென்றார். மதுரை, மானாமதுரை, கோச்சடை, சிலைமான் பகுதிகள் வேலுநாச்சியார் போரிடாமலே அவர் வசம் வந்தது. இறுதியாக சிவகங்கையை கைப்பற்ற வீர ஆவேசத்துடன் சிலிர்த்தெழுந்த சிங்கம் போல் சென்றார். கடும் போர் மூண்டது. தன் கணவனை வஞ்சகமாய்க் கொன்ற கர்னல்பான் சோரோடு களத்திலே நேருக்கு நேராக மோதினார். அவன் பிடித்திருந்த துப்பாக்கியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.
கர்னல்பான் சோரை வெட்டி வீழ்த்த ஆவேசத்தோடு வாளை ஓங்கிய போது அவன் பயந்து கெஞ்சிக் கதறி உயிர்ப்பிச்சை கேட்டான்.
சிவகங்கையை விட்டுத் தருகிறோம். இனிமேல் சிவகங்கை மீது போர்தொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து உயிர்தப்பி ஓடினான். சிவகங்கையில் வெள்ளையர் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
தமிழ் பண்பாட்டுப்படி கணவனைக் கொன்ற கயவனையும் மன்னித்தார் வேலுநாச்சியார். வேலுநாச்சியார் முடிசூட்டு விழாவில் திப்புசுல்தான், கோபால் நாயக்கர் கலந்து கொண்டனர். கோபால் நாயக்கருக்கு தங்கத்தால் செய்த கரடி பொம்மையையும், திப்பு சுல்தானுக்கு தங்கத்தாலான புலி பொம்மையையும் நினைவுப் பரிசாகக் கொடுத்து நன்றி செலுத்தினார்.
இந்திய வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெற்றி பெற்ற ஒரே ஒரு பெண்ணரசி வீரமங்கை வேலுநாச்சியார் மட்டுமே. அவரை கண்டு அஞ்சி 65 வயதில் அவர் மரணமடையும் வரை வெள்ளையர் படை சிவகங்கைப் பக்கமே திரும்பிக் கூடப் பார்க்கத் துணியவில்லை.
ஆனால் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு இந்திய வரலாற்று நூல்களில் போதிய அளவு சிறப்பாக எழுதப்படவில்லை.
ஜாண்சிராணி லட்சுமிபாய் பிறப்பதற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பும், கிட்டூர் ராணி சென்னம்மாவுக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்பும் வெள்ளையரை எதிர்த்து களத்திலே நின்று போராடி வென்றவர் வீரமங்கை வேலுநாச்சியார். உலகிலேயே வெள்ளையர் கைப்பற்றிய நாட்டைப் போராடி மீட்டெடுத்த ஒரே பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ஒருவர் மட்டுமே. அவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும். ஜாண்சிராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் வேலுநாச்சியார் என்று எழுதப்பட வேண்டும்
Leave a Reply