மழையின் பெருமை!

மழையின் பெருமை!

  • By Magazine
  • |

கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம்

     கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ;

தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும்

     தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ;

ஒருதுளிதான் விசும்பின் நீர் வீழ்ந்திட்ட போதில்

     உலர்ந்திட்ட பாறையிலும் உயரும்புல் காடு ;

நெருப்பெனவே வெய்யோனால் வெந்திட்ட மண்ணும்

     நிமிடத்துள் தான் குளிர்ந்து சுகமுண்டு பண்ணும்!

அருமகிழ்தாய் மன்னுயிரை வாழ்விக்கும் மாரி

     அகத்துனவும் அரும்தாக நீருமென ஆகி

கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்வைக்

     காப்பதனால் அஃதே தான் முதற்கடவுளாகும் ;

பெரும்பஞ்சம் நீக்கி உயிர் பேணுகின்ற மழையே

     பேராற்றல் நிறைந்திட்ட பெருங்கடலின் கொடைகாண் ;

ஒருதுளி தான் விசும்பின் நீர் இல்லாது போயின்

     உலகத்தின் பெயர்மாறும் சுடும்பிணக்காடென்றே!

இருப்பதுவும் இல்லாமற் போவதுவும் எல்லாம்

     இயற்கையிறைப் பெருங்கொடையாம் மழைநிதியால் தான்காண்;

உருப்பெற்ற இவ்வுலகம் உருள்கின்ற மெய்யை

     உணர்த்துகிற ஆதார உயிர்மூச்சு மழையே;

பருகும் நீர் பாசனநீர் பன்னீரு மாகிப்

     பாரிதனைக் காப்பதனால் மழைமாண்பைப் போற்றித்

திருவள்ளுவருரைத்தார் வான்சிறப்பை அந்தத்     

தெய்வத்தின் வாழ்த்துக்குப் பின்னரெனக் காண்பீர்!

– கே.பி.பத்மநாபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *