தலையில் எழுதியபடி தான் நடக்கும். எல்லாமே எப்போதோ தீர்மானிக்கப்பட்டால் நமக்கு எதற்கு ஒரு வாழ்க்கை. ஈசலுக்கு இருபத்தி நான்கு மணிநேரமும், ஆமைக்கு நூற்றி இருபது ஆண்டுகள் என்பதும் சராசரி கணக்கே தவிர இறுக்கமான உண்மைகள் இல்லையே.
அந்திவானம் சிவப்பாய் உதிர்வதற்கு திங்கள் கொடைபிடித்து வர போகின்றான் என்பதைத் தானே கூறி செல்கின்றது. எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. அதற்குத்தானே கோழியை கூவ வைத்தான். எந்தப் பகலும் முடியாமல் போனதில்லை. இன்பத்திற்கே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்ற போது துன்பம் முடிவடையாத தொடர்கதை என ஏன் நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள்.
நாளை என்பதே கிடையாது. இன்றே இப்பொழுதே வாழ்ந்தாக வேண்டும் என்ற வெறித்துடிப்பில் எழுதப்பட்ட வைரவரிகளே அவைகள்.
இன்று நேற்றாகின்ற போது நாளை பிறக்கிறது. ஆகவே, நேற்று என்பது நாளை என்பது காலச்சக்கரச் சுற்றின் கணக்குகள் தானே. நமக்கு எல்லாமே இன்று தான். இன்று என்பது நேற்றின் நாளை. வாழ்வதை ஏன் நாளை வரை ஒத்தி வைக்க வேண்டும். பிறப்பிற்குத் தேதியை நம் கையில் குறித்துக் கொடுத்த கடவுள் மரணத்தின் தேதியை சித்திரபுத்திரனிடத்திலே கொடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார் என்று சொல்கின்றோமே அப்படி என்றால் சராசரி மனித ஆயுள் 33 வருடத்திலிருந்து 72 க்கு கைமாறி இருக்கிறதே. இது யாருடைய கைவண்ணம். நம் கையில் தான் நம் வாழ்க்கை உள்ளது. பள்ளத்தில் விழுவதும் வெள்ளத்தில் மிதப்பது நம் அறிவுக்கு எட்டியது. எந்த பள்ளத்தில் எந்த வெள்ளத்தில் என் ஆழத்தையும் வேகத்தையும் தீர்மானிக்கும் திறனை நம் மூளைக்குள் இயற்கை அளித்திருக்கிறது என்பதை திறனை மறந்து விடக் கூடாது.
– சஜிபிரபு மாறச்சன்
Leave a Reply