பற்காரை பொய் சொல்லுவதில்லை

பற்காரை பொய் சொல்லுவதில்லை

  • By Magazine
  • |

(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை)

– முனைவர் மோகனா, பழனி

நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை

ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன சாப்பிட்டீர்கள் என்றால் ஞே என்றுதான் விழிப்போம். ஆனாலும் கூட , கடந்த நூற்றாண்டில் எப்பவோ வாழ்ந்த மனிதன்? அவனின் பல்!. பல், அவன் அந்த காலத்தில்  சாப்பிட்ட உணவு பற்றிய தகவல்களை  பிட்டு பிட்டு வைக்கிறது என்றால்  ஆச்சரியமாக இல்லையா? ஆனால் உணவை அரைத்த பல் அவன் சாப்பிட்ட உணவை  சொல்ல முடியுமா? எப்படிச் சொல்ல ? முடியும் என சவால் விடுகிறது அறிவியல்..!!  அதுதாங்க தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் அதிசயம்.

 காரைப் பற்களும் உணவும்

பற்காரை பொய் சொல்லுவதில்லை.  2018-ஆம் ஆண்டின் , ஜூலை 17 -ஆம் நாள்  ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அது ஓர் அற்புதமான அறிவியல் உண்மையை நம் முன்னே பரப்பி வைக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வளைந்த மஞ்சள் நிறமுள்ள, காரை படிந்த ஒரு மனிதனின் பற்களை வைத்து,  அவனது காலத்தில் உள்ள செடி கொடிகளையும், அவன் சாப்பிட்ட உணவையும் கணிக்கின்றனர் என்றால் ஆச்சரியம் தானே. பொதுவாக பிரிட்டிஷ்காரர்கள் பல், மற்றவர்கள் போல பளிச்சென்ற வெள்ளையில் மற்றவர்களை கட்டிப்போடாதாம்!. அந்த பற்காரை படிந்த அசிங்கமான, மங்கலான  பற்களின் மேல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.   அந்தப் பற்கள் இருந்த மண்டையோட்டின் காலம் இரும்பு காலமாக இருக்கலாம் எனவும் அறியப்பட்டது.

 இரும்புக்காலத்தில் பிரிட்டனில் நாய்களை வைத்து வேட்டையாடினர்.  பார்லி, ஓட்ஸ் மற்றும் ரை என்ற தானியத்தாலான கஞ்சிவைத்தும் சாப்பிட்டு இருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள், மண்டையோட்டில் இருக்கும் பற்காரையை ஆராய்ந்ததில், ஓர் உண்மையை “டபால்” என்று போட்டு உடைத்து இருக்கின்றனர். அதாவது அவர்கள் புரதப் பொருட்களை உட்கொண்டது பற்றிய உண்மைத்தகவல்  நமக்கு இப்போது தெரியவந்துள்ளது. பற்காரை சொல்லும் கதை அதுதான். அப்போது வாழ்ந்த நமது மூதாதையர் மனிதன் 25 வயது வரைதான் வாழ்ந்தானாம்.

 பற்காரை உருவாக்கம்

பற்காரை எப்படி உருவாகிறது தெரியுமா?  நாம் சாப்பிடும் உணவு பல்லின் மேல் படிகிறது.  அதுவே பற்காரையாக உருமாறுகிறது. நீங்க என்னதான் பல் துலக்கினாலும்,  என்னதான் நீங்க நாக்கை வைத்து துடைத்தாலும், நாம் உண்ணும் உணவு கொஞ்சம் துண்டு,  பல்லின்  மேலே மெல்லிய  பசை போல உண்ணும் உணவு ஒட்டிக்கொள்ளும்.  (அந்த கால மனுஷங்க பல் தேய்ச்சு இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? அதுதானே ஐயம்..!) அதன்மீது வாயில் உள்ள உமிழ் நீர் கலந்து, படிந்து,படிந்து,பல்லில் படிந்துள்ள பொருள்  வேதி மாற்றம் அடைகிறது. பின்னர் இதுவே உறுதியாகி, கடினமான  பற்காரை ஆக மாறிவிடுகிறது. எனவே பல்லில் படிந்த உணவுத்துகள்கள், tartar என்னும் பற்காரை ( dental calculus) ஆகி விடுகிறது. இதுதான் ப ற்காரை உருவாக்கத்தின் வரலாறு.

 பற்காரை சொல்லும் பதில்

இங்கு மனிதவியல் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல், என்னவென்றால், அந்த கால மனிதனின் உணவுகளின் சான்றுகள், முக்கியமாக. என்ன வகையான தாவரங்கள் அப்போது இருந்தன, என்ன தாவரங்களை விவசாயம் செய்தான் என்பதே!. இங்கே அருங்காட்சியக பதிவு பற்றிய எவ்வித தகவலும் கிட்டவில்லை. அவர்கள் எவ்வித பதிவும் தருகிறாற்போல பொருட்கள் அங்கு கிட்டவில்லை. ஆனால் மண்டையோட்டுப் பல்லில் இருந்த கரடுமுரடான, பற்காரையின் புரத துணுக்குகள்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தாவரங்கள், அவர்கள் உண்ட உணவுகள் பற்றிய  தகவல்களை, ஆய்வாளர்கள் சந்தேகப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் துல்லியமாக படார் படார் என்று போட்டு உடைத்து பதில்  சொல்கின்றன.

பற்காரையில் பால் புரதம்

இதற்கு முன்பாக, அந்த பற்காரை என்பது, அதில் பால் புரதங்கள் உள்ளன என்ற தகவலை சொல்லி இருக்கிறது. ஆனால், உலக சர்வதேச ஆய்வில்,2018 ஆம்  ஆண்டு, ஜூன் மாத கண்டுபிடிப்புதான்,  அதன் மூலம் முதன் முறையாக தெரிய வந்த தகவல், இதற்கு முன் கண்டறிந்ததைவிட துல்லியமாக அந்த உணவின் உள்ள அதிக புரதங்கள், தாவரங்கள் போன்றவற்றையும் அறியவே முடிகிறது. அதிலுள்ள பலவகை புரதங்களை அறியமுடிகிறது.

மனித பரிணாம வளர்ச்சி சொல்லும் குட்டிப் பல்

இதன் மூலம் மனிதவியல் துறைக்கு ஒரு பெருமையும் கிட்டியுள்ளது. அது  என்னவென்றால், அந்தக்கால மனிதர்கள் பற்றிய புதிய உணவு முறைகள், அதில் கலந்துள்ளவை பற்றி எல்லாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்பதே.. துளியூண்டு பற்காரை உள்ள ஒரு சாதாரணப் பல், மனிதனின் இருப்பையும், மனிதனின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அது எம்புட்டு பெரிய விஷயம்,  இதன் மூலம் அந்தக்கால மனித உணவின் ஆராய்ச்சியில் புதிய முயற்சியைப் புகுத்த துவங்கியிருக்கிறது.

அந்த ஊர் தாவரங்களின் கதை சொல்லும் பற்காரை

                இந்த பற்காரைப் பற்றிய மேலும் ஒரு கருத்தையும், நியூயார்க்கின்  தொல்லியல் துறை மூத்த அறிஞரான Dr . காமில்லா ஸ்பெல்லர்  Dr. Camilla speller, சொல்லும் தகவலானது,  இந்த பற்காரை இன்னும் ஏராளமான கதைகளை சொல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார். . அதாவது அந்த காலத்தில், அந்த இடங்களில், அப்போது வாழ்ந்த பெரிய தாவர வகைகளின் மிச்ச சொச்சங்களுக்கான சான்றுகள் படிமங்கள் ஏதும் கிட்டவில்லை. ஆனால் இந்த பற்காரை மூலம், அப்போது பயிரிடப்பட்ட தாவர வகைகளை அறிவதற்கு உதவி செய்யும் என  எண்ணுகின்றனர். மேலும்  ஆதிகால தாவர வகை  DNA வுடன், ஒப்பிட, அல்லது அப்போது அவர்கள் என்ன புரதப் பொருட்களை பயன்படுத்தினர் என்று அறியவும் இந்த பற்காரை பயன்படும். அந்த புரதப் பொருட்கள் பால் பொருட்களா, பாலடைக்கட்டியா என்பதையும் அறிய முடியும் என்கின்றனர். 

விக்டோரியன் கால பற்காரையும் உணவும்

பிரிட்டனில் கிடைத்த 100 தொல்லியல் பொருட்களில், 14 வகைப் பொருட்கள், பல்லில் பிரச்சினையுள்ள நோயாளிகளின் பற்கள். அவைகளின் மூன்றில் ஒரு பகுதியிலிருந்தே அவர்கள் உண்ட புரதப் பொருட்களை அறிந்து கொள்வது எளிது என கணிக்கின்றனர்.

Dr.ஸ்பேல்லர் சொல்லும் சுவையான தகவல் என்ன தெரியும?.. அந்த கால பற்கள் மட்டுமல்ல, விக்டோரியன் காலத்தில் வாழ்ந்தவர்களின் பற்காறையிலிருந்தும் கூட, அவர்களின் உணவு, ஓட்ஸ், பட்டாணி, மற்றும் முட்டைகோஸ் வகை காய்கறிகளை என்றும் சொல்ல முடியும். இந்த பற்காரை அவர்கள் இந்த கஞ்சி வகைகளை உண்டதாலும் இருக்க கூடும் என்கிறார். மேலும் . இப்போதுள்ள  சான்றுகள் மூலம் பிரிட்டிஷ்காரர்களின் உணவான உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், நிலக்கடலை மற்றும் பால் புரதங்கள் என எளிதில் ஆய்வாளர்கள் தெரிவித்து விட்டனர்.

திறமைமிகு ஆய்வாளர் Dr. ஜெஸ்ஸிகா ஹெண்டியின் கருத்து

ஜெர்மனியின், மாக்ஸ் பிளான்க் நிறுவன தொல்லியல் துறை கண்டுபிடிப்பின் முதல் பிதாமகரான Dr. ஜெஸ்ஸிகா ஹெண்டி (Jessica Hendry) என்ன சொல்கிறார் தெரியுமா? “இவ்வளவு விஷயங்கள் நமக்கு ஒருசாதாரண பற்காரை மூலம் தெரிந்தாலும், கூட இதில் இன்னும் நமக்குத்  தெரியவேண்டியது. நிறையவே உள்ளது. ஆனால் இதில் நமக்கு மிக மிக வியப்பூட்டி உற்சாகப்படுத்தும் விஷயம், ஒரு சாதாரண தொல்லியல் பற்காரை,  எப்படிப்பட்ட அறிவியல் விஷயங்களை உள்ளடக்கியுள்ளது என்பதும், அதில், பொதுவாக தொல்லியல் துறை தடத்தில் கிடைக்காத உணவுப் பொருட்களை எல்லாம், எப்படி தன்னிடத்தில் இந்த பற்காரை சிக்க வைத்து தக்க வைத்துள்ளது என்ற அதிசயம்தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அத்துடன் அந்த பற்காரை அந்த காலத்தில் பதிவிடப்படாமல், இருந்த வாழ்ந்த தாவர உணவுகளைப் பற்றியும் நமக்குத் தெரிவித்தமைக்கும் நாம் இந்த பற்காரைக்கும் கூட அறிவியல் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்கிறார். மனித இனம் நன்றி சொல்ல வேண்டியது நவீன அறிவியல் ஆய்வுகளுக்குத்தான்.!

ஆல்ப்ஸ் மலையில் ஓரத்தில்

1991- ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் Otzi என பெயரிடப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான மனிதனின் உறைந்த, மம்மி செய்யப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ஷ்டசாலி என்று கருதினர். அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் வறண்ட குளிரால் நன்கு பாதுகாக்கப்பட்டன.அதில் அந்த மனிதன் உண்ட – கடைசி ஆட்டு இறைச்சியை வெளிப்படுத்தியது. மேலும் அவன் வயிற்றில்  மான் கறி மற்றும் கோதுமை போன்றவையும் இருந்தன. இவைகள் அவன் இறப்பதற்கு முன்னர் உண்டு இருக்கிறான் என்பதை நிரூபணம் செய்தது.

உண்ட உணவை காக்கும் பற்காரை

 ஆனால் பெரும்பாலும், நீண்ட காலமாக நமக்குக் கிடைப்பது. இறந்தவர்களின்  எலும்புகள் மற்றும் பற்கள் மட்டுமே. மாக்ஸ் பிளான்க் நிறுவன ஹெண்டியின் குழு பற்காரை பற்றிய ஆய்வை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறது. பற்காரை  உணவு மூலக்கூறுகளை  கட்டி இழுத்து பாதுகாக்கிறது” என்று அவர்கள் கூறினர். . “உணவுப் பொருட்களின் தடயங்கள் மனித வாயிலிருந்து நேரடியாகப் பெறப்படுகின்றன; குறிப்பிட்ட உணவுகளின் துல்லியமான ஆதாரங்களை தனித்துவமாக வெளிப்படுத்துகின்றன,” என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் எழுதினர். அவர்கள் ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி. (Proceedings of the Royal Society B) -யில் குறிப்பிட்டனர். புரோட்டியோமிக்ஸ் (Proteomics) எனப்படும் உயர் தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தினர், இது ஒரு மாதிரியில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை பகுப்பாய்வு செய்கிறது. 

சவாலான ஆய்வு

அவர்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இறந்தவர்களின் பற்களில் இருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய புதிய புரதம் பிரித்தெடுக்கும் முறையைப் பயன்படுத்தினர். அதே போல் இப்போது வாழும் அல்லது சமீபத்தில் இறந்தவர்கள். “பல் கால்குலஸின் மொத்தம் 100 தொல்பொருள் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன” என்று அவர்கள் எழுதி இருக்கின்றனர். . மனித புரதங்களை உணவுப் புரதங்களிலிருந்து பிரிப்பது ஒரு சவலான செயலாகும். அவர்கள் வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரே இறைச்சி மாதிரியானது மான் இறைச்சியின் ஒரு நிகழ்வு மட்டுமே. இறைச்சி அரிதாகவே உண்ணப்பட்டதா, அல்லது இயற்கையாகவே மனிதனின் வாயில் காணப்படும் மனித புரதங்களிலிருந்து விலங்கு புரதங்களைக் கூறுவதற்கு தற்போதைய முறைகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினம் என்பதனாலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பழங்கால மாதிரிகளில் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஓட்ஸ், பட்டாணி மற்றும் தாவரங்களில் இருந்து வரும் புரதங்களை ஹெண்டியின் குழு கண்டறிந்தது. நவீன மாதிரிகளில், உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ் மற்றும் வேர்க்கடலை ஆகியவை பொதுவானவை.

பால் புரதம் உண்ட மனிதர்கள்

“சுவாரஸ்யமாக, இந்த ஆய்வில் பால் புரதங்கள் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து கண்டறியப்படுவதையும், பண்டைய மற்றும் நவீன நபர்களில் ஒட்டுமொத்தமாக 20 % நபர்களில் கண்டறியப்படுவதையும் நாங்கள் கவனிக்கிறோம்” என்று ஹெண்டியின் குழு எழுதியது. வட ஐரோப்பியர்கள் பொதுவாக ஒரு மரபணு மாற்றத்தைக் கொண்டு செல்கிறார்கள். அது அவர்கள் பால் குடிக்கவும், இளமைப் பருவத்தில் நன்கு பொறுத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது. பால் குடிக்கும் திறன் மக்களுக்கு உயிர்வாழும் நன்மையைக் கொடுத்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மக்கள் என்ன சாப்பிட்டார்கள் மற்றும் உணவுமுறைகள் எப்படி மாறிவிட்டன என்பதைப் புரிந்துகொள்வது நீண்ட காலமாகப் போய்விட்ட கலாச்சாரங்களின் தெளிவான படத்தை வரைவதற்கு உதவும். கல்லறைகளில் உள்ள பீங்கான் சமையல் பாத்திரங்கள் மற்றும் அவற்றில் எஞ்சியிருக்கும் எச்சங்களை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்யலாம். சில வகை உணவுகளின் இரசாயன கையொப்பங்களைக் கண்டறிய அவர்கள் முடி மற்றும் எலும்புகளை பகுப்பாய்வு செய்யலாம். ஆனால் பற்களில் உள்ள கடினமான பற்காரைகளை பகுப்பாய்வு செய்வது என்பது உண்மையில் மக்களின் வாயில் உணவாக என்ன சென்றது என்பதற்கான தனித்துவமான படத்தை அளிக்கிறது, ஹெண்டியின் குழு ஆழமாகவே குறிப்பிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *