நமது மூலிகை மருத்துவர்
மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும்.
மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் வரை வளரும். சிகப்புநிறத்தில் இருக்கும். இதில் சாயப்பொருள் உள்ளது.
இது இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், நேப்பாள், சைனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிறது.
மஞ்சிட்டி முக்கியமாக தோல் தொடர்பான நோய்களுக்கும், தோலுக்கு அழகையும், பொலிவையும் கொடுப்பதற்கும், உடல் நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் மற்றும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தாவரவியல் பெயர்: Rubia corddifolia
ஆங்கில பெயர்: Indian madder, Madder wort
வேறுபெயர்கள்
மஞ்சிஷ்டி, பூவத்து, மஞ்சூகம், பாண்டி
இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருட்கள்
Purpurin, Munjistin, Xanthopourin, Anthraquinone, Rubiprasin A,B,C, Ruberythric acid. Rubiadin போன்றவைகள்.
மஞ்சிட்டியின் மருத்துவப்பயன்கள்
1.முகம் பளபளப்பாக்குவதற்கு
சோற்றுக்கற்றாழை தோல் நோக்கி கழுவி எடுத்த சதைப்பகுதி, மஞ்சிட்டி பொடி இவைகளை சம அளவு எடுத்து பிசைந்து இத்துடன் சிறிது மஞ்சள் பொடி, பன்னீர் கலந்து கூழ்போன்று ஆக்கி, முகத்தில் தடவி, சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை தொடர்ந்து செய்யவும். மஞ்சள் சேர்வதால் பெண்கள் மட்டும் இதனை பயன்படுத்தலாம். தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி முகம் புதுப்பொலிவுடன் பளபளப்பாகும்.
2.முகத்தின் வெண்ணிற பொலிவிற்கு
மஞ்சிட்டி வேரை பன்னீரில் உரசி முகத்தில் 15 நிமிடங்கள் போட்டுவர முகத்தில் உள்ள கருநிற படைகள் மற்றும் கரும்புள்ளிகள் மாறி வெண்ணிற பொலிவு உண்டாகும்.
மேலும், மஞ்சிட்டி பொடியுடன் தேனும், பன்னீரும் கலந்து வாரம் இருமுறை முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவிவர மங்கலான தோல் நிறம் மாறி வெண்மை பொலிவு உண்டாகும்.
3. முகப்பருவிற்குமஞ்சிட்டி வேரை பொடித்து சலித்து, இத்துடன் சிறிது தேன் கலந்து முகப்பருவின் மீது தடவிவர, முகப்பரு நீங்கும்.
4. தோல்நோய்களுக்கு
மஞ்சிட்டிவேர், வேப்பம்பட்டை சம அளவு எடுத்து பொடித்து சூரணமாக்கி கால் கரண்டி பொடியுடன் தேன் கலந்து தினம் இருவேளை சாப்பிடவேண்டும். இது கரப்பன், சொரியாசிஸ், சொறி, சிரங்கு, முகப்பரு போன்ற தோல்நோய்களுக்கு சிறந்தது.
5.ஆறாத புண்கள் குணமாவதற்கு
மஞ்சிட்டி வேரை சுமார் 10 கிராம் அளவு எடுத்து சதைத்து 200 மி.லி லிட்டர் தண்ணீரில் இட்டு காய்த்து 100 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டி, புண்ணை கழுவவேண்டும். மேலும், 30 மி.லி அளவு மேற்படி கசாயம் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினம் இருவேளை குடித்துவர புண் விரைவில் ஆறும்.
6. இரத்தத்தை சுத்தமாக்குவதற்கு
இரத்தம், நிணநீர் மற்றும் கல்லீரல் இவற்றிலுள்ள நச்சுக்களை நீக்கி, சுத்திகரித்து, அதனால் உண்டாகும் நோய்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மஞ்சிட்டி பொடியை கால் கரண்டி (1 முதல் 2 கிராம்) அளவு எடுத்து தேன் அல்லது வெந்நீரில் கரைத்து ஆகாரத்திற்கு பிறகு தினம் இருவேளை 40 நாட்கள் குடித்துவர வேண்டும்.
7. சூதக வலி மற்றும் பூப்பு சுழற்சி கோளாறு நீங்குவதற்கு
தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி) சாறு 50மி.லி அத்துடன் கால் கரண்டி மஞ்சிட்டி பொடி கலந்து தினம் இருவேளை ஆகாரத்திற்கு பின் குடித்துவர சூதகவலி, பூப்பு கோளாறுகள் மாறும்.
8. சிறுநீரகக்கல் மற்றும் பித்தப்பை கல்லிற்கு
மஞ்சிட்டி, கல்லீரல் நஞ்சுகளை சுத்தம் செய்யும், கொழுப்புகளை அகற்றும், மேலும், பித்தப்பை கல்லிற்கும், சிறுநீரகக்கல்லிற்கும் சிறந்தது. மேலும் இதனால் உண்டாகும் வலியையும் சற்று குறைக்கும். இதற்கு மஞ்சிட்டியை 30மி.லி கசாயமாகவோ, பொடியாகவோ (1 முதல் 2 கிராம்) பயன்படுத்தலாம்.
9.வாய் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு
மஞ்சிட்டியை சதைத்து கசாயமிட்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம், ஈறுபுண், இரத்தம்வடிதல் மாறும். மேலும் இதனை பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்துவர பல்கறை படிப்படியாக குறையும்.
10. சளி இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு
மஞ்சிட்டி வேர், சீந்தில், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு சம அளவு எடுத்து சதைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேற்படி பொடியில் 5 கிராம் அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர்விட்டு ஒரு டம்ளராக்கி 30 மி.லி வீதம் தினம் 3 அல்லது 4 வேளை குடித்துவர வேண்டும். இது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், சளி இவற்றுக்கும் சிறந்தது.
11. கண்நோய்களுக்கு
மஞ்சிட்டி சதைத்தது ஒரு கரண்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து வடித்து லேசான சூட்டில் கண் கழுவிவர வேண்டும். இது கண் உறுத்தல், கண்வலி, கண்சிவப்பு, கண் இமை வீக்கம், கண் நீர்வடிதல் இவற்றிற்கு சிறந்தது.
12.தசைவலி, மூட்டுவலிக்கு (பிண்டத்தைலம்)
மஞ்சிட்டி 5 கிராம், மலை நன்னாரி வேர் 5 கிராம் இவைகளை பொடித்து 100மி.லி நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்ச வேண்டும். சிறிதாக நறுக்கிய தேன்மெழுகு 5 கிராம், பொடித்த வெள்ளை குந்திரிக்கம் 5 கிராம் இவற்றை ஒரு வடிபாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மேற்படி கரகரப்புப் பதத்தில் எண்ணெயை இறக்கி, சூடாக அரித்து வடிபாத்திரத்தில் விடவேண்டும். சூட்டில் தேன்மெழுகும், குந்திரிக்கமும் கரைய வேண்டும். இத்தைலத்தை தேய்த்து ஒற்றடம் கொடுத்து வர தசைவலி, மூட்டுவலி, சுழுக்கு, அடிபட்ட வீக்கம், வலி போன்றவைகள் குணமாகும்.
கவனிக்க வேண்டியவைகள்
அதிக அளவில் சாப்பிட மனக்கலக்கம் உண்டாகலாம்.
Leave a Reply