நீர், வன, நிலவளம் காப்போம்!

நீர், வன, நிலவளம் காப்போம்!

  • By Magazine
  • |

– கே.பி.பத்மநாபன்

நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின்

                நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ;

கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக்

                காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்;

நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு

                நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்;

சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான்

                செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்!

ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம்

                ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை

மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்;

                மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில்

சேர்த்திட்டால் செழித்திடுமே வனவளங்கள்;

                சிறுபுல்லும் முளைக்காத வாறு மாந்தர்

பார்மீது வளங்களையே அழித்து விட்டால்

                பஞ்சம் தான் பாராளும் விரைவில் திண்ணம்!

வேர்பிடித்த மரங்களையே வெட்டி வீழ்த்தும்

                வினையாவும் கொலை செய்யும் கொடுமைக் கொப்பே;

ஏர்கலப்பை உழுவயல்கள் அழிவதெல்லாம்

                ஏரிகளைக் கொன்றழித்துப் புதைப்பதால் தான்;

நீர்வளத்தை, வனவளத்தை மற்றும் இந்த

                நிலவளத்தைக் கொன்றழிக்க மாந்தருக்கு

யார்கொடுத்தார் அதிகாரம்? காத்தற்கன்றி               

  யாருக்கும் அழிப்பதற்கிங்குரிமை இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *