– இரா. அரிகரசுதன்
அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு.
கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல.
அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது ஏற்புடையது அல்லவே.
சில பள்ளிகளில் இன்னும் ஓர் ஆசிரியரே தலைமையாசிரியராகவும், பாடங்கள் எடுக்கும் ஆசிரியராகவும் இருக்கும் சூழலை நம்மால் காண முடிகின்றது. மேலும் அரசு பள்ளிகள் புதிதாக கட்டுவது என்பது எங்குமே நடைபெறாமல் இருப்பதும் கவலையைத்தான் நமக்கு தருகின்றது.
ஏற்கனவே ஆங்கில வழி படிப்பை அரசு பள்ளிகளில் ஆரம்பிக்கின்றோம் என்று ஆரம்பித்து பல பள்ளிகளில் தாய் மொழி தமிழ் வழி கல்வியில் யாரும் இல்லாது தாய் மொழி கல்விக்கான இடம் அழிந்து கொண்டிருக்கின்றது. இது மிகவும் ஆபத்தான நடைமுறை.
ஒரு சமூகம் தனது தாய் மொழி வழியாக கற்க வாய்ப்பில்லாது இருப்பது என்பது அந்த சமூகத்தின் அறிவுப்புலத்தை அம்மொழியிலிருந்து அழித்துவிடுவதற்கு ஒப்பானது.
உலகின் மூத்த மொழியாகிய தமிழ் மொழியில் அறிவும் அறிவியலும் இன்னும் எண்ணற்ற இலக்கியங்களும் மக்களின் வாழ்வியலும் மொழி எனும் பொதுதன்மைகொண்ட குறியீட்டு தொடர்பியலாக நேரடியாகவும் கட்புலனாகாத வடிவிலும் கடத்தப்பட்டுவந்து கொண்டிருக்கக்கூடிய சங்கிலியை அறுத்தல் துயரமானது அல்லவா. ஏன் தமிழ் பெருமைகொண்டு நிற்கின்றது. அது செம்மொழி எனும் பேராற்றல் கொண்டிருப்பதால். காலந்தோறும் மொழிக்குள் அறிவை ஆற்றலை புதுமையை சேகரித்துக்கொண்டே இருப்பதால். அந்த கண்ணியை முறிப்பதைதான் நம்மால் காண இயலுகின்றது.
தாய்மொழி வழியே உயர்கல்விக்கான பாடத்திட்டங்களைத் உருவாக்குவது, கல்வி நிலையங்களையும் புதிய கட்டமைப்புகளையும் உருவாக்குவது போன்ற எந்த புதியத் திட்டங்களையும் நடைமுறைகளையும் தீட்டாமல் இருப்பது எம்மாதிரியான செயல்முறை என்று தெரியவில்லை. தாய்மொழி வழி கல்வி வளர்ச்சி குழு அமைத்தல், அவற்றுள் புதிய நுட்பங்களை நுழைத்தல் கல்வி நிலையங்களுக்கான பரிசார்ந்த கட்டமைப்புகள், வடிவமைப்புகள், பரிசோதனைகள் என எதையும் ஆரம்பிக்காது தேமே என இருப்பதும் இருப்பதை இழப்பதும் சங்கடமே.
தாய்மொழிக் கல்வி என்பது ஓர் அடிப்படை உரிமை ஆகும். இவ்வடிப்படை உரிமையை இழப்பதை மனிதஉரிமை மீறல் என்றே புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.
எனவே அரசு கல்வி தொடர்புடைய ஏதேனும் முடிவு எடுத்தால் அது மாபெரும் விளைவை ஏற்படுத்தும் எனும் அக்கறை கொண்டு சீரிய அனுபவம் கொண்டோரின் ஆலோசனைகளை கேட்க வேண்டும்.
தற்போது கூட பள்ளி மாணவர்களுக்கு இருமுறை அரசு தேர்வு எனும் அறிவிப்பு ஏற்படுத்தும் சிக்கல்களை கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் செயல்பாட்டாளர் விழியன் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
“’ஏற்கனவே பத்தாம் வகுப்பில் கற்றல் என்பது குறைவு, முழுக்க முழுக்க தேர்விற்குத் தயாராகும் பணிகள் கிட்டத்தட்ட நவம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கிவிடுகின்றன. மே மாத விடுமுறை இருப்பதில்லை [இருக்கு ஆனால் இல்லை], எழுதுகின்றோமோ இல்லையோ இரண்டு தேர்விற்கும் பணம் கட்டிவிடவேண்டும்.
கூடுதல் சுமை : கிட்டத்தட்ட கூடுதலாக 3 மாதங்கள் தேர்வு பயத்தில் இருக்க வேண்டும். இரண்டாம் தேர்வு எழுதுவது கட்டாயம் இல்லை என்று சொன்னாலும் பள்ளியும் பெற்றோர்களும் சக மாணவர்களின் அழுத்தத்தால் எல்லோரும் எழுதுவார்கள்.
தேர்வை இரண்டு முறை நடத்துவது என்பது கூடுதல் மனித உழைப்பு வீணடித்தல். 1,72,90,000 விடைத்தாள்களை இரண்டு முறை திருத்தம் செய்ய வேண்டும்.
பதின்வயதில் பெரும்பாலான நேரம் தேர்விலே சென்றுவிடுகின்றது எனப் புலம்பிவரும் நேரத்தில் கூடுதலாக 3 மாதங்கள் அழுத்தத்தில் செல்கின்றது.
முதல் தேர்வு மார்ச் மாதத்தில் முடிந்தாலும் ஆசிரியர்களுக்கு மே மாதம் வரை கூடுதல் அழுத்தம். வேலைப்பளு பள்ளிக்கும் அதிகம் ஆசிரியர்களுக்கும் இன்னும் அதிகம். கூடுதலாக மூன்று மாதங்கள் அவர்களுக்காகச் செலவிட வேண்டும். [கட்டாயம் இதனால் பள்ளி கட்டணமும் அதிகப்படுத்தப்படும்]. பள்ளிகள் இந்தக் கூடுதல் பளுவைச் சிந்தித்துள்ளனரா தெரியவில்லை.
மாற்றங்கள் நிச்சயம் வரவேண்டும். பொதுத்தேர்வு மீதான பயத்தினைக் குறைக்கவேண்டும். ஆனால் சொல்லப்படும் காரணங்கள் கூடுதல் அழுத்தத்தையே எல்லோருக்கும் கொடுக்கும். மாற்றங்கள் பளுவினைக் குறைக்க வேண்டும். மேலும் வளரிளம் பருவத்தில் கற்றலுக்கான நேரமும் சூழலும் அமைய வேண்டும்.””
இவ்வாறு சொல்லும் விழியன் பொதுமக்கள் கருத்துக்கேட்பு என்பதும் குறுகியக் காலத்திற்குள் ஒரு சடங்காகவே நடத்தப்படுகின்றது என்கின்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கின்றார்.
தேர்வு என்பது மாணவர்கள் கற்றவற்றை தொகுத்து நினைந்துபார்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஓர் வாய்ப்பாக இருக்க வேண்டும்.
அதுபோல ஆசிரியர்களுக்கோ தேர்வு என்பது தாங்கள் கற்றுக் கொடுத்தவை எவ்வாறு மாணவர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. நிறை குறைகள் என்ன போன்றவற்றை கண்டுணர்ந்து காலத்திற்கு ஏற்ப மாற்றங்களையும் புதியப் பாடத்திட்டங்கள் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்து போன்றவற்றிற்கான தூண்டுதலை ஏற்படுத்தும் செயல்பாடு ஆகும். ஆனால் உண்மையில் இவ்வாறான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்களைப் போன்று கல்வியை வியாபாரப் போட்டியாக அரசு உருவகிக்கக்கூடாது. அதுபோல அரசுக் கல்விகூடங்களை இன்னொரு தனியார் கல்விநிலையம் போன்று மாற்ற நினைப்பது அறிவுடைமை ஆகாது.
Leave a Reply