செந்நிற கதிர்கள் பரவ
புலரத் தொடங்கியது காலை
மணற்பரப்பில் நிரம்பிய
காலடித் தடங்களுடன்
சிதறி கிடக்கின்றன
தீர்ந்துபோன மதுபோத்தல்கள்
படகுகள் அருகில்
வலையில் சிக்கிய மீன்கள்
ஒவ்வொன்றாய் எடுத்த பரதவர்கள்
விரிக்கப்பட்ட படுத்தாக்களில்
வீசி கொண்டிருக்கின்றனர்
நெகிழிப்பைகளில்
ஆளுக்கொரு கூறுகளாய்
அள்ளி நிரப்பினர்
விலை முடிக்கப்பட்ட
மீனின் வலியை
துள்ளிக்கொண்டிருந்த மீனைப்பார்த்த நிகரன்
“உசுரோடருக்குப்பா!
இத நம்ம வளக்குலாம்பா? என்றதும்
உறைந்திருந்த அம்மீனின்
கண்களில் விழுந்தது
எங்கிருந்தோ பறந்து வந்த
இதய வடிவிலான இலை.
அலையின் சாரலோடு அதன் ஓசையையும் கேட்டபடியே
கரையில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருக்கும் படகொன்றில் அமர்ந்திருக்கிறான்.
மிச்சமிருந்த சில்லரைகளில்
வயிற்றுப் பசி போக்க
வாங்கி வந்த பச்சிகளை பிரிக்க
கரைந்தபடி வந்தமர்ந்த காகத்திற்கு கொஞ்சம் பிய்த்துப் போட்டு
அலையைப் பார்த்திருந்தான்.
அக்காகம் கரைந்தழைக்க
அவனைச் சுற்றி முகாமிட்டிருந்தன
காகங்களோடு நாய்களும்.
எல்லாவற்றிற்கும் பகிர்ந்தளிக்க மீண்டும் காற்றை நிரப்பிக் கொண்டான்.
தேவைகள் தீர்ந்த மனிதர்களென கலைந்து விட்டன யாவும்.
சிவ. விஜயபாரதி
Leave a Reply