குடல் நோய்களுக்கு சிறந்த “புடல்”

குடல் நோய்களுக்கு சிறந்த “புடல்”

  • By Magazine
  • |

இது ஒரு வெள்ளரி குடும்பத்தை சார்ந்த கொடிவகை. காய்கள் பச்சை நிறத்துடன் வெண்ணிற மேல்படிவத்தைக் கொண்டு நீண்டு நுனியில் வளைந்து தொங்கும். பார்ப்பதற்கு பாம்பு போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இதனை Snake gourd என்பர்.

புடல் வகைகளில் கொத்துபுடல், நாய்புடல், பன்றிபுடல், பேய்புடல் என பல வகைகளுண்டு. இவைகளில் கொத்துபுடல், நாய்புடல் இவ்விரண்டும் குத்து செடியாக வளரும். பன்றிபுடல் செடியாக இருந்து அதன்காய் நீளம் குறுகியதாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்புடையது. இதனை உணவாக உண்பதில்லை.

உணவாக சமைக்கப்படும் புடல், அதன் செடி 6 மீட்டர் நீளம் வரை வளரும். இதன்காய் 45 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும்.

     இதன் பூர்வீகம் ஆஸ்திரேலியா. மேலும் இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பயிராகிறது.

புடல் கொடி பூச்சி தொற்றை எதிர்த்து தாங்கி வளரும் தன்மையுடையது. புடல் செடியின் காய் முதிர்வதற்கு முன் பயன்படுத்த வேண்டும். காயின் மேல் படர்ந்து இருக்கும் வெண்ணிற படிவத்தை அகற்றி பயன்படுத்த வேண்டும்.

புடல் செடியின், காய் மட்டுமல்லாது இலை, வேர் பகுதியும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

தாவரவியல் பெயர் :

 Trichosanthes cocumerina

ஆங்கிலபெயர்கள் :

   Snake gourd, viper gourd Chinese cucumber

இதில் அடங்கியுள்ள விட்டமின் சத்துக்கள்

விட்டமின் B1, B2, B3, B5, B6,  விட்டமின் A, விட்டமின் C, விட்டமின் E

தாது சத்துக்கள்

பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், நாகசத்து, மாங்கனீசு

தாவர வேதிப்பொருள்கள்

Lignin Lycopene, quercetine, Bryonolic acid, Cucurbitacin, Gallic acid,

பிற சத்துக்கள்

நார்சத்து, நீர்சத்து

புடலங்காயின் மருத்துவப்பயன்கள்

1. உடல்பருமன் குறைவதற்கு

புடலங்காயில் அதிக அளவு நார்சத்து, நீர்சத்து உள்ளது. மேலும் தாதுசத்துகள் அதிகம் நிரம்பி உள்ளது. புடலங்காயில் உள்ள நார்சத்து உணவு அதிகம் உண்பதை குறைத்து, வயிறு நிரம்பிய உணர்ச்சியை தருகிறது. மேலும் நீர்சத்து உடலில் தங்கியுள்ள கெட்டநீர்களை சிறுநீர் மூலம் அகற்றுகிறது. ஆகவே புடலங்காயுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாறாகவோ அல்லது சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

2. குடல்நோய் மற்றும் மலச்சிக்கலுக்கு

புடலங்காயில் உள்ள நார்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி எளிதாக மலம் கழியச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல் தீருவது மட்டுமன்றி மூலநோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. இதற்கு புடலங்காயை சாறாகவோ, சமைத்தோ உண்ணலாம். மேலும் கிருமி தொல்லை, பசி குறைவு போன்றவற்றை நீக்கி உணவு எளிதில் ஜீரணமாக்க செய்கிறது. நெஞ்சுஎரிச்சல், குடல்புண் ஆகியவற்றிற்கும் புடலங்காய் சிறந்தது.

மேற்படி நோய்களுக்கு புடலங்காய் சுமார் 150 கிராம் அளவு எடுத்து நறுக்கி கசாயமிட்டு (Soup) குடிக்கலாம்.  இப்பானம் நோயால் பலகீனமானவர்களுக்கு சிறந்தது.

3. நீரிழிவு நோய்களுக்கு

புடலங்காயில் நிறைந்துள்ள நார்சத்து, தாதுசத்து மற்றும் உயிர்சத்து பொருள்களால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்கிறது. இதற்கு புடலங்காயை சமைத்தோ, சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாறாகவோ பருகி வரலாம்.

4. மஞ்சள் காமாலை நோயாளர்களுக்கு

புடல் செடியின் இலைச்சாறு 10 மில்லி, கொத்துமல்லி இலைச்சாறு 10 மில்லி சேர்த்து ஆகாரத்திற்கு முன் தினம் இருவேளை குடித்து வருவது மஞ்சள்காமாலை நோய்க்கு சிறந்தது.

மேலும் புடலங்காயுடன் சிறிது கொத்தமல்லி விதை சேர்த்து கசாயமிட்டும் குடிக்கலாம்.

5. வாதநோய்களுக்கு

புடலங்காய்க்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மை இருப்பதால் மூட்டுவலி, குதிகால்வலி, யூரிக் அமிலம் சேர்வதால் உண்டாகும் கவுட எனினும் வாதநோய்கள் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக புடலங்காய் அமைகிறது.

6. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்திற்கு

புடலங்காயில் காலிக் அமிலம் மற்றும் விட்டமின் B சத்துக்களில் B6 அதிகம் இருப்பதால் மூளை நரம்புகள் சாந்தப்படுத்தப்படுகிறது. ஆகவே புடலங்காயை விதையுடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து சாறாக இரவு தூங்குவதற்கு முன் குடித்துவர, தூக்கமின்மை, மன அழுத்தம் இவைகள் குறைந்து நல்ல ஞாபகசக்தியை கொடுக்கும்.

7. இருதய ஆரோக்கியத்திற்கு

புடலங்காயில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் நார்சத்துக்களும், பிறசத்துப்பொருள்களும் இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஆகவே புடலங்காய் இருதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

8. நுரையீரல் நோய்களுக்கு

புடலங்காயுடன் சிறிது நல்லமிளகு சேர்த்து கசாயமிட்டு குடித்து வருவது இருமல், சளி, தொண்டைவலி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிறந்தது. மேலும் விட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

9. தைராய்டு நோய்களுக்கு

புடலங்காயில் அயோடின் சத்து உள்ளது. ஆகவே இதனை சமைத்து சாப்பிட்டு வர, அயோடின் குறைவால் உண்டாகும் (கழுத்தில் வீங்கும்) ஹப்போ தைராய்டு நோய்க்கு சிறந்த உணவாக புடலங்காய் அமைகிறது.

10. பொடு, முடி உதிர்தல் மாறுவதற்கு

புடலங்காயின் விதை மற்றும் காயின் மேல் படிந்துள்ள வெண்ணிற படிவத்தையும் அகற்றி விட்டு, காயை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர தோல் உலர்தல், பொடுகு, முடி உதிர்தல் மாறி நல்ல முடி வளர்ச்சியை உருவாக்கும். மாதம் ஒருமுறை இதனை செய்து வரலாம்.

11. கவனிக்க வேண்டியவைகள்

1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ஆகும். ஆகவே மிகவும் அதிக அளவில் தினம் உண்பதை தவிர்க்க வேண்டும். 2. சிலருக்கு ஒவ்வாமை, குமட்டல், வாந்தி உண்டாகலாம்.

நமது மூலிகை மருத்துவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *