மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டிப் பகுதியில் டங்ஸ்டன் என்ற கனிமத்தை எடுக்க 07.11.2024 அன்று ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலப் பகுதிக்குள்ளாக அரிட்டாப்பட்டி என்ற ஊரை உள்ளடக்கிய ‘மாநிலத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்” அமைந்துள்ளதால், வேதாந்தா என்ற தனியாருக்கு ஏலம் விட்ட ஒன்றிய அரசுக்கெதிராக உள்ளுர் மக்களின், சுற்றுச்சூழல் அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு வீரியம் கொண்டு வருகிறது.
சுரங்கம் தோண்டஏலம் விடப்பட்ட இடம்
தமிழ்நாடு அரசு 2002 -ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ், 2022 நவம்பர் 22 அன்று மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் 193.215 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அரிட்டாப்பட்டிப் பகுதியைப் ‘பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக” அறிவித்தது.
ஏலம் விடப்பட்ட நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியின் 2,015.51 எக்டேர் பரப்பிற்குள்ளாக, 193.215 எக்டேர் அரிட்டாப்பட்டிப் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம் இருப்பதால், இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஊர் மக்களையும் அதிர்ச்சியும் கோபமும் அடையச் செய்துள்ளது.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையிலுள்ள கம்பூர், சேக்கிப்பட்டி. கருங்காலக்குடி, வஞ்சுநகரம், ஒட்டக்கோவில்பட்டி, சிங்கம்புணரிப் பகுதிகளை உள்ளடக்கிய ஏறத்தாழ 38,500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதுவே அவர்களின் திட்டம். முதல் கட்டமாக மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிப் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் அனுமதி அளித்திருக்கிறது ஒன்றிய அரசு.
‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக்கு” 20.16 சதுர கி.மீ.பரப்பளவைக் கொண்டது. 07.11.2024 அன்று இந்துஸ்தான் சிங்க்கு லிமிடெட்டு நிறுவனம் விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டு ஏலம் முடிவு செய்யப்பட்டது.
பாதிப்புகளும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும்
1. பாதிப்புக்கு உள்ளாகும் நீர்நிலைகள்
அரிட்டாப்பட்டியின் சுற்றுச்சூழல் மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகள் அப்பகுதியின் வளமான பல்லுயிரியல் சூழலை அச்சுறுத்தும். இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும். அரிட்டாப்பட்டிக் கிராமம் தனித்துவமான ஏழு கிரானைட்டு மலைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது. இது ஒருமுக்கியமான நீர்ப்பிடிப்பு நிலையாகச் செயல்படுகிறது. இந்த நிலப்பரப்பு மூன்று தடுப்பு அணைகள், 72 ஏரிகள், 200-க்கும் மேற்பட்ட இயற்கை நீருற்றுக் குளங்களைக் கொண்டிருக்கிறது. இது இப்பகுதியின் நீர் ஆதாரங்களுக்கு இன்றியமையாதது. மதுரையைச் சேர்ந்த பறவையியல் வல்லுநர் இரவீந்திரன் நடராஜன், அரிட்டாப்பட்டியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறார். ‘வடக்கே அழகர் மலை” என்ற அரைப் பசுமைக் காடு, தெற்கேபெருமாள் மலையின் புதர்க் காடுகள் அரிட்டாபட்டியின் ஏழு மலைகளை வடிவமைக்கின்றன. இரண்டு காடுகளும் தமிழ்நாடு வனத்துறையில் நிருவகிக்கப்படுகின்றன. மலைப்பகுதிகளின் இயற்கையான நிலப்பரப்பு வற்றாத நீரூற்றுக் குளங்களைத் தாங்கி நிற்கிறது. இது அருகிலுள்ள13-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு முக்கியமான நீர் ஆதாரமாகச் செயல்படுகிறது. இதனால் அவர்கள் ஆண்டுதோறும் இரண்டு போகம் பயிரிடமுடியும்.
2.பாதிக்கப்படும் பறவை இனங்கள்
அரிட்டாப்பட்டி, பல்லுயிர் மையமாகவும் உள்ளது. ஏறத்தாழ 250 பறவை இனங்கள் உள்ளன. இந்தச் சிறப்புவகைப் பறவையினங்கள் குன்றுகளின் உயிரியல் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
3.விரட்டியடிக்கப்படும் விலங்குகள்
தங்கநரி, புள்ளிமான், சாம்பார் மான், குரைக்கும் மான், முள்ளம்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் மட்டுமன்றி, தனித்துவமிக்க இந்திய மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுக்கு இப்பகுதி வாழ்வாதாரமாய் உள்ளது. இத்தகைய பல்லுயிரிக்கான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சுரங்க நடவடிக்கையை மேற்கொள்வதை நியாயப்படுத்தவே முடியாது.
4.தமிழின வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாப்பட்டி
இத்தளம் குறிப்பிடத்தக்க வரலாற்று, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஏராளமான பெருங்கற் காலக் கட்டுமானங்கள், செயின் படுக்கைகள், தமிழ்ப் பிராமிக்கல் வெட்டுகள், 2,200 ஆண்டுகள் பழமையான பாறைகளில் வெட்டப்பட்டகுடைவரைக் கோயில்கள் உள்ளன. குறிப்பிடத்தக்க நீர்நிலைகளில் ஆனைக்கொண்டான் ஏரியும் உள்ளது. பண்டையநினைவுச் சின்னங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக1966-ஆம் ஆண்டின் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் கீழ்ப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலை அழிக்க வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிர்ப்புகள்
சுற்றுச்சூழல், கலாச்சார வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை டங்ஸ்டன் சுரங்கத்திற்காக இந்துஸ்தான் சிங்க்கு லிமிடெட்டு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடுவதற்கான முடிவு பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. 2024 நவம்பர் 23, அன்று 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்றங்கள் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துத் தீர்மானங்களை நிறைவேற்றின.
மதுரைத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அரிட்டாப்பட்டியில் ஒரு பிடிமண்ணைக் கூட எடுக்கவிடமாட்டோம் என்று அறிவித்துப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை ஏற்று, தமிழ்நாடுமுதல்வர் டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமையை இரத்து செய்ய வலியுறுத்தி, நரேந்திரமோடிக்கு 2024 நவம்பர் 29, அன்று கடிதம் எழுதியுள்ளார். மேலும் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, டிசம்பர் 9-ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.
சுற்றுச்சூழலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனம்
இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டு ஆலையால் ஏற்கெனவே தூத்துக்குடியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல், சுகாதாரக் கேடுகளைத் தமிழினம் இன்னும் மறக்கவில்லை. அந்தத் தனியார் வேதாந்தா நிறுவனத்தினைக் காப்பதற்காக, அதற்கு எதிராக போராடிய 13 போராளிகளைச் சுட்டுக்கொன்ற காவல்துறையை நினைவில் கொண்டே அரிட்டாப்பட்டியை ஏலம் எடுத்துள்ள அதே வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்கு என்ற நிறுவனத்திற்கு எதிராக நமது போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
தோண்டி எடுக்கப்பட்ட இருக்கும் டங்ஸ்டன் உலோகம் பற்றி
புவியியல் ஆய்வகம் நடத்திய புவியியல் ஆய்வின்படி, இப்பகுதியில் டங்ஸ்டன் நிறைந்த தாதுவான சீலைட்டு உள்ளது. டங்ஸ்டன் என்பது ஆட்டோமொபைல், மருத்துவம், பாதுகாப்புத் தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் அடிப்படையான கனிமம் ஆகும். எடுத்துக்காட்டாக வீடுகளில் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகளின் மையத்தில் இருக்கும் டங்ஸ்டன் கம்பிச் சுருளை நாம் அறிவோம். அதிக வெப்பம் தாங்கும் உலோகம் இது.
அரிட்டாப்பட்டியில் தொடக்க நிலையில் தான் ஆய்வுப்பணிகள் இருப்பதால், உடனடியாக தடுத்து நிறுத்துவதே சரியான பதிலடியாக அமையும். அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் முறியடிக்கும்.
பூ.வ. தமிழ்க்கனல்
Leave a Reply