ஆதிக்கம்

ஆதிக்கம்

  • By Magazine
  • |

கா கீ கூ கட்சியின் முதல் மாநில மாநாடு… அழைக்கிறார் காவலர் கோபால சமுத்திரம்

அப்போது தான் வாங்கி வந்த சுவரொட்டியை தரையில் விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சிங்கராயன்.

சுவரொட்டியின் மேல் பகுதியில் வரிசையாய் சாதிக்காக பாடுபட்டவர்களின் புகைப்படங்கள்…

கீழே இடப்பக்கம் பெரிதாய் சிரித்தபடி கோபால சமுத்திரம் படம்…

வலப்பக்கம் கொஞ்சம் சிறியதாய் சிங்கராயனின் படம்..

கீழ் வரிசையில் சிறிது சிறிதாக நிறைய புகைப்படங்கள்…

கைபேசியை எடுத்து அச்சக உரிமையாளரை அழைத்தான்.

“அண்ணே… சூப்பரா இருக்குண்ணே… இனி நம்ம கட்சி போஸ்டர், ஃப்ளக்ஸ் எல்லாம் உங்களுக்குத்தாண்ணே…”

கொஞ்சநேரம் பேசிவிட்டு வைத்தவன் தன் தம்பி தங்கராயனை கூப்பிட்டான்.

“தம்பி… நம்ம பசங்கள கூட்டிட்டுப் போய் இந்த போஸ்டரெல்லாம் எல்லாப் பக்கமும்  ஒட்டிரு… குறிப்பா பக்கத்து ஊர்க்காரன் சிலை இருக்கு பாரு… அங்கதான் நிறைய ஒட்டணும். எவனாவது வம்பு பண்ணினா போன் அடி… உடனே வந்து நிப்பேன்..”

நான்கு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான். “ பசங்க என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துரு… பணம் பத்தலேன்னா ஜீபே பண்றேன். நாளைக்கு வேற வேலைகள் கெடக்கு.இரவே இந்த வேலையெல்லாம் முடிச்சிரு…சரியா…” சரிண்ணே… முடிச்சிர்றேன்.

சொன்னவன் பணத்தை வாங்கிக் கொண்டு சுவரொட்டிகளையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

கட்டிலில்  உட்கார்ந்த சிங்கராயன்  கைபேசியில் முகநூலில் மேய ஆரம்பித்தான். இயக்குனர் கோபால சமுத்திரத்தின் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை யாரோ விமர்சனம் செய்திருந்தார்கள்.

கோபம் தலைக்கேறியது. தன்னுடைய கருத்தை பதிய ஆரம்பித்தான். போடா புண்ணாக்குகளோ… ஒருத்தன் கீழேயிருந்து மேல வந்துரக் கூடாது. அது  நொட்ட இது நொட்டன்னு குறை சொல்ல வந்துருவீங்க. ஏண்டா இப்படி சாதிவெறி பிடிச்சி அலையிறீங்க. அவன் பதிவிட்ட கருத்துக்கு பதில் வந்தது.

கோபால சமுத்திரம் நல்ல இயக்குனர்… நடிப்பு, இயக்கம் எல்லாமே யதார்த்தமாக நல்லாயிருக்கும். ஆனால் சில கட்சிகள் முரண்பாடா இருக்குது. இதை விமர்சனம் பண்ணுதுல என்ன தப்பு இருக்குது. ஒரு படைப்பும் படைப்பாளியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அப்படித்தான் என்னோட விமர்சனமும். இதுல சாதி எங்கேயிருந்து வந்துச்சு. சாதி ஒழிக, சாதி ஒழிகன்னு சொல்லிக்கிட்டே எல்லாவற்றையும் சாதீய கண்ணோட்டத்தோடவே பார்க்கிறதோட விளைவுதான் இது…

பதில் கருத்தை படித்து விட்டு சிங்கராயன் பதிவிட்ட பதில் எல்லாமே ஆபாசமாயிருந்தது. விமர்சனம் பண்ணியவரையும் அவருடைய மனைவி, தங்கை, தாய் என்று எல்லோரையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பதிவிட்டான். அதற்கு மேல் எந்த பதிலும் வரவில்லை. சிங்கராயன் இயக்குனரின் முகநூல் பதிவுகளையும், மேடை பேச்சுகளையும் பகிர்ந்தான். இன்னும் சில பதிவுகளுக்கு ஆவேசமாய் கருத்துக்களை பதிவிட்டான். கைபேசியை அணைத்தான்.

இவனுங்களுக்கெல்லாம் மாநாட்டுல பதில் கொடுக்கணும். வச்சிக்கிறேன். மனசுக்குள்ளே நினைத்து கொண்டே சாப்பிட சென்றான்.

மாநாட்டை சிறப்பாக நடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கங்கே தெருமுனை கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தான்.

சாதிய அடக்குமுறைக்கு எதிரான அவனுடைய பேச்சு கேட்பவர்களை உணர்ச்சி வசப்பட வைத்து கைதட்டல் வாங்குவது.

மாநாட்டு விழா அமைப்பு குழுவில் சிங்கராயன் இருந்ததால் பரபரப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

மாநாட்டு விழா நாளும் வந்தது. சிங்கராயன் மட்டும் தனிப்பட்ட முறையில் ஐந்து பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தான். மாநாடு மைதானம் நிரம்பி வழிந்தது. கோபால சமுத்திரம் காரிலிருந்து இறங்கி மேடையை நோக்கி நடந்து வந்தார்.

தொண்டர் படை அவரை பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்து அழைத்து வந்தது. ஆர்ப்பரித்து கத்திய தொண்டர்களை பார்த்து கை காட்டினார்.

மேடைக்கருகே இருந்த கொடியை ஏற்றினார். புதிதாய் மெட்டமைத்து உருவாக்கப்பட்ட கட்சி பாடல் ஒலித்தது.

சிங்கராயன் தான் வரவேற்புரை ஆற்றினான். மற்ற பொறுப்பாளர்கள் எல்லாம் பேசி முடித்த பின்பு கோபால சமுத்திரம் பேச எழுந்தார்.

மிகப்பெரிய கரவொலி, கத்தல், கதறல், விசில் எல்லாம் சேர்ந்து அந்த இடத்தையே அதிரச் செய்தது.

அந்த சத்தம் அடங்க வெகுநேரம் ஆகியது. கோபால சமுத்திரம் பேச ஆரம்பித்தார். பொறுப்பாளர்கள் பெயரை சொல்லிக் கொண்டு வரும் போது சிங்கராயனின் பெயரை சொன்ன நொடியில் சிங்கராயனின் ஆதரவாளர்கள் கைதட்டி விசிலடித்தார்கள்.

சிங்கராயன் உற்சாகமாய் கோபால சமுத்திரத்தின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான். இடையிடையே கை தட்டவோ, விசிலடிக்கவோ செய்யாதீங்க. நான் சொல்ற கவனமாக கேளுங்க… நாமெல்லாம் ஒரு காலத்துல ஆண்ட பரம்பரை தான். நம்ம கிட்ட எல்லாம் இருந்துச்சு. சூழ்ச்சி செஞ்சு எல்லாத்¬யும் பறிச்சுட்டாங்க… நம்ம மேல ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சாட்டாங்க. நமக்கான அரசியல் தலமைகளும் பெரிய  கட்சிகள் கிட்ட நம்மள அடமானம் வச்சிட்டாங்க.

இப்போ நம்மகிட்ட என்ன இல்ல… வீரம் இல்லையா… நிலம் இல்லையா… உழைப்பு இல்லையா… எல்லாம் இருக்கு… அப்புறம் ஏன் நாம பயந்து சாகணும்.

அடிக்கு அடி, உதைக்கு உதை… உனக்கு நான் சளைத்தவன் இல்லேன்னு காட்டணும். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நம்ம சாதியா இருக்கணும். எந்த அடக்கு முறைக்கும் அதிகாரத்துக்கும் நாம அஞ்ச கூடாது. ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும். கோபால சமுத்திரம் ஆவேசமாய் பேசி முடித்தார்.

கை தட்டலும், விசில் சத்தமும் உரத்த குரலுமாய் அந்த பேரீரைச்சல் எழுந்து அடங்க வெகுநேரம் பிடித்தது.

தொண்டர்கள் கோபால சமுத்திரத்தின் அருகே சென்று செல்பி எடுக்கவும், கை கொடுக்கவும் முயல அவருடைய பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக நடத்திச் சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தார்கள்.

சாதி ஒழிப்பு, சமத்துவம் என்று பேசி வளரும் தலைவர்கள் தான் தன்னை நம்பி வரும் தொண்டர்களிடம் சாதி வெறியை தூண்டுகிறார்கள்.

இவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். தொண்டர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு கொடி பிடிக்கவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ ஒரு பெரிய கட்சியிடம் தன் சொந்த சாதி சனங்களை அடமானம் வைத்து விடுவார்கள்.

படி… முன்னேறு என்று அழுத்தம் திருத்தமாக சொல்லமாட்டான். தேவைப்பட்டால் தடி எடுக்க ஆள் வேண்டுமே…

தான் சார்ந்த சமுதாயம் முன்னேறுவதற்கு ஒவ்வொரு ஊரிலும் அமைப்பாய் செயல்பட்டு கல்வியிலிருந்து பொருளாதாரம் வரைக்கும் வழிகாட்டுவது கிடையாது. கட்சி நிதி என்கிற பெயரில் அவர்களிடமிருந்து பிடுங்கி கொள்வார்கள்.

மேலேறி வா என்று கை தூக்கி விட மாட்டார்கள். உணர்ச்சிப் பொங்க பேசி கூட்டம் சேர்த்து விடுவார்கள்.

மாநாடு வெற்றிகரமாக நடந்ததில் உற்சாகமாய் இருந்தான் சிங்கராயன். மறுநாள்… தன்னுடன் மாநாட்டு வேலைகளில் உதவியாக இருந்தவர்களை அழைத்து விருந்து வைத்தான். மதுவும் ஓடியது.

எல்லோரும் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போது தான் செல்வத்தின் காதல் பற்றிய பேச்சும் வந்தது. லவ் பண்றியாமே… எந்த ஊரு பொண்ணு!

கொளத்தாங்கரையோரமாக இருக்குல்லாண்ணே… அந்த ஊருதான்… பேரு சுமதி…!

“நம்ம சாதி இல்லையே…” சிங்கராயனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது. நம்மளோட சேர்ந்தது தான்…

“லூசுப்பயலா நீ… நாம மேலப் போகணும்னு நெனச்சுட்டிருக்கோம்.. நீ என்னடான்னா நமக்கு கீழே இருக்கிற சாதியில லவ் பண்ணிட்டிருக்கிற… அந்த எண்ணத்தை எல்லாம் விட்ரு… அப்புறம் மரியாதை இருக்காது. புரிஞ்சுதா…!

சிங்கராயன் அதட்டலாகவே சொன்னான். செல்வம் தலையாட்டினான். தடபுடலாய் ஆட்டமும் பாட்டமுமாய் விருந்து முடிந்தது. சிங்கராயன் தூங்கி ஓய்வெடுத்து விட்டு மாலை மங்கிய நேரத்தில் வட்டி வசூலுக்கு கிளம்பினான்.

கடை வீதியில் சில கடைகளில் வசூல் செய்து விட்டு பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த பேக்கரி வாசலில் வந்து நின்றான். இரண்டு மூன்று பேர் அங்கேயே வந்து அவனிடம் வட்டிப் பணம் கொடுத்து விட்டுப் போனார்கள்.

கைபேசியில் ஒருவரை அழைத்துப் பேசினான். “என்னாச்சுய்யா வட்டி… நான் போன் பண்ணி கேட்க வேண்டி இருக்குது…”

“நாளைக்கு தந்துர்றேண்ணே…” “நாளைக்கா… நேத்தே தேதி முடிஞ்சு போச்சு. இப்போ சொல்ற…”

“ரெண்டு நாள்தாண்ணே… ஆறு மாசமா கரெக்டா கொடுத்துட்டு தான்ணே இருந்தேன். இந்த மாசம் கொஞ்சம் லோட்டகியிடுச்சி. அதெல்லாம் தெரியாதுப்பா… டைமுக்கு வட்டி வந்துரணும். இல்லேன்னா மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்துரணும்.

இந்த ஒரு தடவதாண்ணே. நாளைக்கு கண்டிப்பா தந்துருவேன். அடுத்த மாசத்திலிருந்து முன்கூட்டியே கொடுத்துர்றேன். இன்னும் ரெண்டு மாதத்துல எப்படியாவது மொத்தப் பணத்தையும் தரப் பாக்குறேன்…

சரி…சரி.. நாளைக்கு வந்துரு… சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தான். எட்டு மணிக்கு, எட்டரை மணிக்கு, ஒன்பது மணிக்கு என்று ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வசூல் செய்துவிட்டு வந்தான்.

பத்து மணி ஆன போது குளத்துக்கு அந்தப் பக்கமாய் இருந்த ஊருக்கு சென்றான். ஊர் கொஞ்சம் அடங்கியிருந்தது. அங்கங்கே சில பையன்களின் நடமாட்டம் மட்டும் இருந்தது. வீடுகளிலிருந்து தொலைக்காட்சி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

ஒரு போதை ஆசாமி ஊரே கேட்கும்படி அசிங்கமான வார்த்தைகளை பேசி  கத்திக் கொண்டிருந்தார். வீடுகளில் வட்டி வசூல் செய்தபடி வந்து கொண்டிருந்த சிங்கராயனை பார்த்ததும் அந்த போதை ஆசாமி சட்டென்று அமைதியாகி வணக்கம் வைத்தான்.

சிங்கராயன் கடந்து சென்ற பிறகு மறுபடியும் கத்த ஆரம்பித்தான். இரவு பத்துமணிக்கு மேல ஒருத்தன் ஊருக்குள்ளே வட்டி வசூல் பண்ண வரான். அதை கேட்க இந்த ஊருக்குள்ள ஒருத்தனுக்கும் துப்பில்ல… மானங்கெட்ட பயலுவ… நம்மள மட்டும் கேள்வி கேப்பானுவ…

தொடர்ந்து அவன் கத்தினான். சிங்கராயன் கடைசி தெருவிலிருந்த நாலாவது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினான்.

வீடு சாத்தியிருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து விட்டு ராணி.. ஏ ராணி என்று கத்தினான். பதில் வரவில்லை. மறுபடியும் கத்தினான். கதவ சாத்திக்கிட்டு வீட்டுக்குள்ள இருக்கிறது தெரியும். வெளிய வா…

கத்திப் பேசினான். சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளின் சன்னல்கள் திறந்து மூடிக் கொண்டது. உன் புருஷன் வந்துட்டானா. அவனும் உள்ளத்தான் இருக்கானா… மானம் கெட்ட பயலுவளா… திருப்பிக் கொடுக்க முடிஞ்சா கடன் வாங்கணும். முடியலேண்ணா ஏன் வாங்குறீங்க…

கத்திப் பேசினான்.. சில வீடுகளுக்கு இவன் இப்படித்தான் இரவு பத்து மணிக்கு மேல் செல்வான்.

அந்த நேரத்தில் சென்றால் அவமானத்திற்கு அஞ்சி இந்த பெண்கள் எப்படியாவது பணத்தை தந்து விடுவார்கள் என்பது இவனுடைய எண்ணம்.

கடன் வாங்கிய பெண்களும் இவனை இந்த நேரத்திற்கெல்லாம் வரவிடக் கூடாது. அசிங்கப்படுத்தி விடுவான் என நினைத்து எப்படியாவது பணம் தயார் பண்ணி கொடுத்து விடுவார்கள்.

ராணி இரண்டு நாளில் தந்து விடுகிறேன் என்று தான் சொல்லியிருந்தாள். இவன் கேட்க மாட்டான். ஐந்தாம் தேதி என்றால் ஐந்தாம் தேதியே கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் வீட்டு வாசலில் வந்து நின்று அசிங்கப்படுத்துவான்.

இவனை யாரும் எதிர்க்க துணிய மாட்டார்கள். ஒரே சாதி, உறவுமுறை கொண்ட ஊர்க்காரன் என்பதால் ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை என்றாலும் ஊரே வந்து நிற்கும். அந்த தைரியம் தான். ஆதிக்கம், சமூகநீதி, புரட்சி என்று பேசுகிறவர்கள் கூட தனக்கும் கீழே என்று ஒரு படிமத்தை வைத்து தான் இருக்கிறார்கள். தனக்கு கீழே உள்ளவனிடம் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்ளும் மனநோய் இருக்கத்தான் செய்கிறது. 

தொடர்ந்து அவன் கத்தினான். அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தை வந்த போது சடாரென கதவை திறந்து கொண்டு ராணியின் கண்வன் வெளியே வந்தான்.

என்னடா பேசுறு… நானும் பொறுமையா இருக்கிறேன். ஓவரா பேசுற என்ன பண்றேன் பாரு…

கட்டையோ, கல்லோ ஏதாவது கிடக்கிறதா என்று தேடினான். உள்ளதானா இருந்த… மொதல்லயே வெளிய வந்திருந்தா நான் என் பேச போறேன். இந்த றோசமெல்லாம் மொதல்லயே இருந்திருக்கணும்.

பணமெல்லாம் தர முடியாது. போய்யா…

உன்கிட்ட எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும். சிங்கராயன் பைக்கை விட்டு இறங்கினான். அதற்குள் ராணி ஓடி வந்து தன் கணவனை பிடித்துக் கொண்டாள்.

நான்தான் ரெண்டு நாள்ல தரேன்னு சொன்னேன்ல்லா.. ஏண்ணே இப்படி அசிங்கப்படுத்துறீங்க…போங்கண்ணே…தாலிதான் கிடக்கு… அதையாவது விற்று தர்றேன். ராணி தன் கணவனை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை சாத்தினாள். நாளைக்கும் வரணும் என்று நினைத்துக் கொண்டே சிங்கராயன் பைக்கை கிளப்பினான். பக்கத்து வீட்டிலிருந்த சுமதி ஜன்னல் வழியே பார்த்து கொண்டு இருந்தாள்.

– நாசரேத் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *