ஏதாவது ஒன்று இனிப்பாக இருக்கிறது என்றால் இன்னொன்று கசப்பாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்றால் இன்னொன்று மோசமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொன்று அசுரத்தனமாக இருக்க வேண்டும்.
ஞானிகளின் புகழ்மிக்க கட்டளை நமக்குத் தெரியும். விரோதியிடமும் அன்போடிரு. லாவோத் சூ அதைவிட ஆழமாகப் போகிறார். வெறுப்புக்கு நல்லியல்பே பதிலாகட்டும் என்கிறார்.
இதற்கு வெகு ஆழமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக ஞானிகள் விரோதியிடம் அன்பாயிரு என்று சொல்லும் போது வெறுப்பு, அன்பு என்ற இருமையை ஒப்புக் கொள்கின்றனர். இரட்டைத் தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். உன் அடி ஆழத்தில் உன் விரோதியின் மேல் உனக்கு அன்பிருக்கிறது. இல்லையேல் எப்படி வெறுப்பது? அவனை நேசித்திருந்தால் ஒழிய அவன் மேல் விரோதம் கொள்ள முடியாது. ஏற்கனவே உன் அடி ஆழத்தில் உன் எதிரியை நீ நேசித்திருக்கிறாய். அதனால் தான் அவனை வெறுக்கிறாய்.
அன்பும் வெறுப்பும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒருவர் மீது அன்பு செலுத்தும் போது அவரை நீ வெறுக்கிறாய் என்பதை மறந்து போகிறாய்.
உன் விரோதியை நினைத்துப் பார். உன்னுடைய வெறுப்பின் ஆழத்துக்குப் போய் பார். அவன் மீது உனக்கு அன்பு இருப்பது தெரியும். வெறுப்பு என்பது எதிர்மறையாக அன்பைக் காட்டுவது தான்.
ஒரு நிகழ்ச்சி. மகாத்மா காந்தியும், முகம்மது அலி ஜின்னாவும் இந்திய அரசியலில் இரண்டு பெரிய புள்ளிகள். அவர்கள் நீண்ட கால விரோதிகள் சரிதான். அவ்வளவு காலம் விரோதிகளாக இருந்து விட்டால், ஒருவர் மீது ஒருவருக்குப் பற்று வந்து விடுகிறது. காந்தியைச் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியை ஒருவர் ஜின்னாவுக்கு தெரியப்படுத்தினார். ஜின்னாவுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் ஜின்னாவோ வெகுவாகத் துக்கித்துப் போனார். ஏனென்றால் காந்தி இல்லாமல் ஜின்னா எங்கே இருக்கப் போகிறார்? விரோதி செத்துப் போனால் நீ ஏறக்குறைய செத்துப் போகிறாய்.
நண்பர்கள் மட்டுமல்ல இழப்பது. விரோதிகள் இறந்து போகும் அவர்களும் இழப்புகள் தான். அவர்களும் உன் வாழ்வின் பகுதியாகிப் போகிறார்கள்.
ஒருவரைக் காதலிக்கும் போது உணர்வுகள் அலைபாய்கின்றன. அப்படியே ஒருவரை வெறுக்கும் போதும் உணர்வுகள் அலைபாய்கின்றன. வெறுப்பு சக்தியைக் கொண்டு வருகிறது. அன்பு சக்தியைத் தருகிறது. அன்பு சுகமான அனுபவம். வெறுப்பில் சுகம் இல்லை.
– ஓஷோ
Leave a Reply