பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு

பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு

  • By Magazine
  • |

மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை.

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் தவிர பல்வேறு நகரங்களிலும், பேரூர்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், விழாக்களையும் நேரில் கண்டு அவை பற்றிய செய்திகளை தத்தமது நாளிதழ்களுக்கு அனுப்பும் பத்திரிக்கையாளர்களை நிருபர், செய்தியாளர், ஊடக அலுவலர் என்னும் பெயர்களால் அழைக்கிறோம். நடப்புச் செய்திகளைக் கொடுப்பதோடு ஆங்காங்கு முறைமுகமாகச் செயல்படும் சமூக விரோதிகளையும், சட்டம் ஒழுங்கினை மீறுவோர் பற்றிய தகவல்களையும் மக்கள் விரோதச் செயல்களையும் வெளிப்படுத்தும் போது பத்திரிக்கையாளர்கள், நிழல் உலக தாதாக்களைப் போன்ற தீயோர்களின் வெறுப்புக்கும், கண்டனத்துக்கும், அடிதடிகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. சில நாடுகளில் ஆட்சி பீடத்தில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டும் போது அரசே பத்திரிக்கையாளர்களை கண்டனத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தி விடுகிறது. அமைச்சர், உறுப்பினர், பார்வையாளர் ஆகியோரை டில்லியில் பாராளுமன்ற வளாகத்திற்குள் சந்தித்து உரையாடக்கூடாது என்று அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

செய்தி உலகப் பெருமக்கள் சில இடங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்தியை சேகரிக்க நேரிடுகிறது. எனவே தான் ஊடகப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத்தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3-ஆம் தேதியை உலகப் பத்திரிக்கை சுதந்திர நாளாகப் பின்பற்ற வேண்டும் என உறுப்பு நாடுகளைக் கேட்டு கொண்டுள்ளார். செய்திப் பரிமாற்றத்தையும், சமூகம் அரசியல் பற்றிய பிரச்சினைகளில் எந்தச் சார்பும் இல்லாத கருத்தினைக் கூறுவதையும் மனித உரிமை என்பதை மக்களாட்சி நிலவும் நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

தனிமனித ஆளுகையில் முடியாட்சியாக நடத்தப்பெறும் சவூதி அரேபியா, ஓமன், கடார், மொராக்கோ, ஜோர்டான், புரூனை, டென்மார்க் போன்ற நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் அரசின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டதாகும். சீனா, ரஷ்யா, ஹங்கேரி, ஜார்ஜியா போன்ற பொது உடைமை நாடுகளிலும் ஏறத்தாழ இதே நிலைமை தான். அரசின் அனுமதியின்றி எந்தச் செய்தியினையும் வெளியிட முடியாது.

மக்களாட்சி நிலவும், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அரசின் தலையீடு இல்லையென்றாலும், சமூக விரோதிகளின் எதிர்ப்பும், பகைமையும் பத்திரிகையாளரின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றன. சுயநலக்காரர்கள், சுரண்டல் போர்வழிகளுக்கு எதிராக செய்திகளைச் சேகரிப்பது சிக்கலானது என்பதோடு அபாயகரமானதும் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி உலக முழுதும் 1993- ஆம் ஆண்டு தொடங்கி 1660 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக இத்தகு நிலைமை மேலும் நீடித்துக் கொண்டு வருகிறது.

சவூதி அரேபியாவின் சர்வாதிகாரியாக உள்ளவர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்  ஜாமல் கஷோகி இஸ்லாத்தின் கொள்கைகளை ஆதரித்தாலும், தனது நாடாகிய சவூதி அரேபியா மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற மனித உரிமைகளுக்கு எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாதென்றும் பிரச்சாரம் செய்தார். அவரை அரசு கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் விடுவித்தது.

எப்படியும் தனது உயிருக்கு தமது நாட்டில் உத்தரவாதம் இல்லை என்று தெரிந்ததும், அமெரிக்காவில் குடியேறி வாஷிங்டன் போஸ்டு எனும் நாளிதழில் நிருபராகப் பணிபுரிந்தார். மனித உரிமை, தனிமனித சுதந்திரம், மக்களாட்சி நெறிமுறை பற்றிய அவரது கருத்துகளையும் பிரச்சாரத்தினையும் கேட்க பொறுக்காத சவூதி சுல்தான் நிருபர் கஷோகியைக் கடத்தி வரச் செய்து துருக்கி நாட்டு இஸ்தான்புல் நகரில் சவூதி தூதரகத் அலுவலகத்துக்கு கொண்டு வந்து சித்திரவதை செய்து கொன்று விட்டார். சுல்தானை எதிர்த்து சில வெளிநாடுகளில் கண்டனமும் ஆர்ப்பாட்டமும் நடந்தோடு சரி. நெறி தவறாத, நேர்மையான பத்திரிக்கையாளர் மனித உரிமைக்குக் குரல் கொடுத்த காரணத்தால் உயிரைப் பலி கொடுத்து மாண்டு போக நேரிட்டது.

பீகார் மாநிலப் பெகுசராய் நகரில் தன்னிச்சையான பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர் சுபாஷ்குமார். அரசின் அனுமதியின்றி மணல் கொள்ளையிலும், மதுபானத் தயாரிப்பிலும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வந்த கொள்ளைக் கும்பலைப் பற்றிய தகவல்களை பரவலாக விற்பனையாகிக் கொண்டிருந்த இந்தி மொழி நாளிதழ்களில் வெளியிட்டு வந்தார். இதனைப் பொறுக்க இயலாத சாராய வியாபாரிகளின் நான்கு கையாட்கள் 2022- ஆம் ஆண்டு மே மாதம் முதல்வாரத்தில் சுபாஷ்குமார் தனது வீட்டை விட்டு வெளியே வரும்போது நேர் நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டனர். நேர்மைக்கும் பொது நன்மைக்கும் பாடுபட்ட அந்த 26 வயது பத்திரிக்கையாளரின் ஒளிமயமான எதிர்காலம் இருண்டு போய்விட்டது.

குறுக்கு வழியானாலும், எப்படியாவது கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்போர் பத்திரிக்கையாளரின் எதிரி என்பது ஒருபுறம். மூட நம்பிக்கை, அதி தீவிர மதப்பற்று மூடத்தனமான சடங்கு. சம்பிரதாயம் இவற்றை எதிர்த்து, அறிவியல் மனப்பாங்கு, மதச்சார்பின்மை, மனிதநேயம் ஆகிய இவற்றை வெளிப்படுத்தும் பத்திரிக்கையாளரும் சமூக விரோதிகளின் சினத்துக்கும் சீற்றத்துக்கும் ஆளாகி விடுவது இன்னொருபுறம்.

55 வயது அம்மையார் கவுரி லங்கேஷ் பெங்களூர் நகரில் நன்கு அறிமுகமான பத்திரிகை ஆசிரியர். கன்னட வார இதழான லங்கேஷ் பத்ரிகா பகுத்தறிவுக் கொள்கைக்கும், பெண்கள் விடுதலைக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு சொற்பொழிவில் கவுரி மூடநம்பிக்கையைக் கண்டனம் செய்து பேசினார். தொடர்ந்து இவரது செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று கூறிக் கொண்டிருந்த அமோல்காலே என்பார் கவுரி லங்கேஷ் தனது இல்லத்திலிருந்து அலுவலகம் செல்லுவதற்கு வெளியே வரும்போது 2017 செப்டம்பர் 3- ஆம் நாள் அவரை சுட்டு வீழ்த்தி விட்டார்.

மனச்சான்றைக்கொன்று விடாமல் நேர்மையோடு உண்மையைக் கூறினால், நம் உயிருக்கு உறுதி இல்லை என்று நன்றாகக் தெரிந்து கொண்ட ஒரு பாகிஸ்தானியப் பத்திரிக்கையாளர் தனது மைத்துனர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று கூறி லண்டனுக்குச் சென்று விட்டார். அந்த பத்திரிக்கையாளர் தான். பங்களதேசத்தின் விடுதலைக்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பது அதிசயச் செய்தி. ஆனால் அது உண்மை.

பாகிஸ்தானிய அரசு தங்களை பாரபட்சமாக நடத்துகிறது என்னும் புகைச்சல் தீயாக மாறி வங்கமொழி பேசும் கிழக்கு வங்காளிகள் பாகிஸ்தானை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தி விட்டனர். ஒரு கட்டத்தில் ஜெனரல் டிக்கா கான் தலைமையில் வங்கதேசத்தில் பாகிஸ்தான் தனது ராணுவ ஆட்சியை அறிவித்து விட்டது. இம்மென்றால் வனவாசம் ஏனென்றால் சிறைவாசம் என்று இருந்தாலும் பரவாயில்லை. டிக்கா கானின் பட்டாளம் அந்த ஒன்பது மாத ராணுவ ஆட்சியில் 2 லட்சம் பேரைக் கொன்று விட்டது. பல்லாயிரக்கணக்கான பெண்டிர் மானபங்கப்படுத்தப்பட்டனர். டாக்கா, சிட்டகாங் போன்ற நகரங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பத்து மில்லியன் வங்காளியர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து விட்டனர். 1971 மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அந்த நாட்டையே நாசமாக்கி விட்டது.

உலக அரங்கில் தனது பெயருக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய பாகிஸ்தான் எட்டு பத்திரிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து தனி விமானத்தில் அவர்களை கராச்சியிலிருந்து பங்களாதேசுக்கு அனுப்பியது. மக்கள் மகிழ்ச்சியோடு ராணுவ ஆட்சியை வரவேற்றுள்ளனர். அந்த நாட்டில் எந்தக் குழப்பமும் இல்லை என்று தங்கள் பத்திரிக்கையில் செய்தி வெளியிட வேண்டும் என்பது அவர்களுக்கு உத்தரவு. எனவே தான் நேரில் நிலைமையைக் கண்டு மனம் கொதித்துப் போன ஆண்டனி மாஸ்கரனேஸ் சண்டே டைம்ஸ் எனும் இதழில் முதல்பக்க முழுச் செய்தியாக வெளியிட்டு விட்டார். இரண்டு நாள் முன்னதாகவே மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் லண்டனுக்கு வரச்சொல்லி பாகிஸ்தானிய ஒற்றர்களால் ஆபத்து வராதபடி பாதுகாத்து கொண்டார்.

பங்களாதேசத்தில் நடந்த பாகிஸ்தானியர் செய்த படுகொலைகள் பற்றி உலகத்தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திரா காந்தி செய்தி அறிந்து ஆத்திரப்பட்டார். இங்கிலாந்து பிரதமர் ஹெரால்டு வில்சனை அழைத்து உலகத்தலைவர்கள் சிலரிடம் செய்தியை அறிவித்து விட்டு பங்களாதேசத்தின் மீது இந்தியா படையெடுக்க முடிவு செய்துவிட்டது என்று அறிவித்தார். முக்தி பாஹினி எனும் பேரால் இந்திய ராணுவம் பங்களாதேசத்தில் பாகிஸ்தானியப் படைகளை முறியடித்து அந்நாட்டுக்கு 1972-ஆம் ஆண்டு விடுதலை வாங்கிக் கொடுத்தது தனிக்கதை. எனவே பத்திரிக்கையாளர்கள் அழிவு வேலை ஏதுமின்றி மனிதாபிமானத்தோடு ஆக்கவேலையும் செய்யமுடியும் என்பதற்கு இரு ஒரு சான்றாகும். மனிதாபிமானத்துக்கும் , நேர்மைக்கும், நீதிக்கும், உண்மைக்கும் உறுதுணையாக அவர்கள் பணிபுரிந்திட வேண்டும்.

மக்களாட்சி மலர்ந்துள்ள நாடுகளில் அனுபவ முதிர்ச்சியும் சிந்தனை திறனும் கொண்ட பத்திரிக்கையாளர்களின் கருத்தினை நாட்டையாளும் அரசியல் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பதும் உண்டு. எனவே தான் வெறும் அரசியல் நோக்கர்களாக மட்டும் இருப்பதாக கூட, பத்திரிக்கையாளர்கள் இல்லாமல் நூல்களைப் படிப்பதோடு, கேள்விஞானம், எழுத்தாற்றல், சிந்தனை ஆகியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். போர்க்காலங்களிலும் பெரும் கலவரங்களிலும், சர்வாதிகாரம் மிகுந்த நாடுகளிலும் செய்தி சேகரிப்பதிலும், அதனை அறிவிப்பதிலும் பெரும் ஆபத்து விளையும் என்றாலும், ஏனைய இடங்களில் குறிப்பாக மக்களாட்சியுள்ள நாடுகளில் சமூக விரோதிகள், தேச நலனுக்குத் தீங்கு விளைவிப்போர், ஒற்றர்கள் ஆகியோரிடமிருந்து பத்திரிக்கையாளருக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பெருமன்றம் கூறுவது பொருத்தமான வேண்டுகோள் ஆகும்.

பழனி அரங்கசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *