பண்டிகைநாளின் முந்தைய நாட்களிலான
முடிவிலா நகமென நீளும்
முள்படுக்கையின் மீது
நடந்து கடக்க முயலுகிறான்
ஒரு அப்பன்
மகனோ மகளோ ஆசைபட்டதை
வாங்கவில்லை எனும் கோபத்தோடும்
அழுகையோடும் பலூன்களாய்
மிதக்கிறார்கள் வீட்டிற்குள்
அவ்வப்போது வந்து
மோதவும் செய்கிறார்கள்
இல்லத்தரசியோ
அடுக்கி வைத்திருக்கும்
கையாலாகாததை வாரிவாரி
அறைகிறாள்
அவள் அவ்வாறு அறைவது
பண்டிகையின் வெளியிரைச்சலையும்
தாண்டி வெடித்து பறக்கிறது
எருக்கம்பஞ்சின் தன்மையோடு
புரளும் குடும்பவன்முறையின்
குலுக்காம்பெட்டிக்குள்
சேர்ந்து குலுங்குகிறார்கள்
பண்டிகையும் அப்பனும்
தூரத்திலிருக்கும்
அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள்
“இந்த பையனுக்கு
போன்லயாவது ஒரு வார்த்தை
பேசக்கூடாதா…?”
குனிந்து பார்க்கின்றது
உத்திரத்தில் நின்றுகொண்டிருக்கும் பண்டிகை
தோன்றும் ஒரு சின்ன சிரிப்பை
அடக்க விரும்பாத அப்பன்
அவ்வாறே சிரித்துக் கொள்கிறான்..
– இரா. அரிகரசுதன்
Leave a Reply