ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள்.
புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தோட்டத்தில் சுறுசுறுப்பாக இளைஞரை போல வேலை செய்து கொண்டிருந்த சிலம்ப ஆசான் கோலப்பன் அவர்களை சந்தித்தோம்.
அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். இனிஅவர் கூறுவதை கேட்போம்.
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இரும்பிலி ஆகும். நான் குளச்சலில் உள்ள அரசு மலையாள பள்ளியில் நான்காவது படித்துக் கொண்டிருந்த போது எனக்கு நாசியின் உள்பக்கம் ஒரு புண் ஏற்பட்டது. அதனால் எனது மூக்கு அடைத்து விட்டது. மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. வாய் மூலமாக தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் எனது தாத்தா என்னை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒருவர் எனது தாத்தாவிடம் தறியன்விளை என்ற பகுதியில் பாண்டு என்று பெயர் கொண்ட ஒருவர் இருக்கிறார். அவர்களிடம் பரம்பரை பரம்பரையாக உபதேச மருந்து என்ற ரகசிய மூலிகை மருந்து உள்ளது. அதனை பறித்து வந்து உரலில் இட்டு இடித்து புன்னைக்காய் அளவு மூன்று உருண்டைகளாக உருட்டி தருவார். அவற்றை மூக்கில் வைத்து மாறி மாறி உறிஞ்ச வேண்டும்.அப்படி அவரிடம் சென்று சிகிச்சை பெற்றால் இந்த நோய் குணமாகும் என்று கூறினார்.
இதனால் எனது தாத்தாவும் நானும் தறியன்விளையில் உள்ள பாண்டு என்ற வைத்தியரை தேடிச் சென்றோம். அவர் என்னை அவரது வீட்டில் தங்க வைத்து அன்பாகக் கவனித்து மருந்து தந்தார். பல மருத்துவமனைகளிலும் தீராத எனது நோய் மூன்றே நாளில் அவரது மூலிகை மருந்தின் மூலம் அதிசயமாக தீர்ந்தது.
அதன் பின்னர் சுமார் 16 வயது வரை அவரது வீட்டிலேயே தங்கி இருந்து அவரது கால்நடைகள், தோட்டம், விவசாயம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டேன்.
இந்த நிலையில் நாட்டுப்புற விளையாட்டுகளின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் நடுவூர் கரையில் உள்ள ஆறுமுகக்கண் என்ற ஆசானிடம் களியல் என்ற கலையை பயிற்சி பெற்றேன். பின்னர் ஒரு படுவூர் தங்கப்பன் ஆசாரி அவர்களிடம் உடல் கூறு என்ற கலையை கற்றுக் கொண்டேன்.
அந்த காலத்தில் நாட்டில் காலரா, வைசூரி ஆகிய நோய்களால் மக்கள் பெருமளவு இறந்து கொண்டே இருந்தனர். மின்சாரம் இல்லாத காலம் அது. மக்கள் மிகவும் பயந்து கொண்டு இருப்பார்கள்.எங்கள் பகுதியில் சுமார் 135 வீடுகள் இருந்தன. அங்கு ஒவ்வொரு வீடாக சென்று ராமநாமம் ஜெபிக்க வேண்டும். என்று பெரியவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் ராமநாமம் பாடும் போது அவர்களுக்கு கொஞ்சம் தைரியமாகவும் ஆறுதலாகவும் இருக்கும் என்பதற்காக, பஜனை கீர்த்தனைகள் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து ஒரு இடத்தில் கூடாரம் அமைத்து அதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து பஜனை பாட தொடங்கினோம். அந்த குழுவில் சுமார் 18 இளைஞர்கள் இருந்தனர். அந்த பஜனை பட்டாபிஷேகம் என்ற நிறைவு நாள் வரை மீன் மாமிசம் எதுவும் சாப்பிட கூடாது. ஆனாலும் அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு நாளும் மக்களின் அச்சத்தை போக்குவதற்காக பஜனை பாடி வந்தோம்.
நாங்கள் பஜனையை முடிக்கும் போது மணி நள்ளிரவு இரண்டு மணி வரை ஆகும். அதன் பின்னர் வீட்டுக்கும் செல்ல முடியாது.
ஆகவே அங்கேயே தூங்கி விடுவோம். ஒரு பஜனை தொடங்கினால் 12 ஆண்டுகள் கட்டாயம் பாட வேண்டும் என்பது நியதி ஆகும். பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அதன் பின்னர்தான் அந்த பஜனையை நிறுத்த முடியும். அப்படி சுமார் 12 வருடங்கள் பாடி முடித்தோம்.
பின்னர் என்னுடன் இருந்த இளைஞர்கள் வில்லுப்பாட்டு படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதன் படி கொல்லமாவடி என்ற இடத்தில் உள்ள ஒரு ஆசானிடம் வில்லுப்பாட்டு படித்தோம். அதற்கு நான் தான் தலைவராக இருந்து செயல்பட்டேன். அதன் பின்னர் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் சுமார் ஆறு வருடங்கள் வரை வில்லுப்பாட்டு பாடி வந்தோம்.
பின்னர் எனது குழுவில் இருந்தவர்கள் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே எனது தூரத்து உறவினரான மூலச்சல் நாராயணன் ஆசான் என்பவரிடம் சென்றோம். அங்கே எனது ஆசானான மூலச்சல் நாராயணன் ஆசான் அவர்களின் ஆசான் தாம்சன் நாடார் ஆசான் எங்களுக்கு கும்பிடு, செவிடு என்ற முதல் சுவடுமுறையை கற்று தந்து எங்களது சிலம்ப பயிற்சியை தொடக்கி வைத்தார் .
தாமஸ் நாடார் ஆசான் என்பவர் சுமார் ஆறடி உயரத்தில் சக்கரவர்த்தி போன்று ராஜா போன்ற தோற்றத்தில் தலையில் தலைப்பாகை கட்டி மிகவும் கம்பீரமாக காட்சி அளிப்பார். அவர் சிலம்பம் மட்டுமின்றி வர்மக்கலையிலும் மிகவும் வல்லவராக விளங்கினார். அவர்தான் மூலச்சல், முட்டைக்காடு, ஈத்தவிளை ஆகிய பகுதிகளில் மிகவும் திறமையான ஆசானாக பெயர் பெற்று விளங்கியவர் ஆவார்.
பின்னர் மூலச்சல் நாராயணன் ஆசான் அவர்களிடம் சுவடும் முறை பன்னிரண்டு, அடிமுறை பன்னிரண்டு, பூட்டு பன்னிரண்டு, சுருளடி, குறுந்தடி பன்னிரண்டு, நெடுங்கம்புபன்னிரண்டு, சுருட்டு வாள் பன்னிரண்டு, வெட்டுக்கத்தி பன்னிரண்டு, கடாரி பன்னிரண்டு, மல்லு, குஸ்தி ஆகியவற்றை சுமார் ஆறு ஆண்டுகளாக நானும் எனது குழுவினரும் கற்றுக் கொண்டோம்.
இந்த கலைகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர், இரும்பிலி, மாங்குளம், பாலூர், படுவூர், தறியன்விளை, மத்திகோடு, கள்ளி அடைப்பு போன்ற பல இடங்களிலும் உள்ள பல மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்து உள்ளேன்.
நான் மாணவ மாணவிகளுக்கு சிலம்பும் கற்றுக் கொடுப்பதில் கடுப்பாகிய சிலர் என் மீது பொறாமை கொண்டு என் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். நான் கற்றுக் கொண்ட சிலம்ப கலையினை பயன்படுத்தி எதிர் தக்குதல் நடத்தி தப்பித்தேன். இது எனது வாழ்வில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
மட்டுமல்லாமல் சுமார் 20 ஆண்டுகள் மண்டைக்காடு கோயில் திருவிழாவுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் செல்லும் ஊர்வலத்துடன் எனது குழுவினருடன் சிலம்பம் விளையாடி சென்றுள்ளேன். மேலும் 2002 – ஆம் ஆண்டில் காவல்துறையினருக்கு சிலம்பம் பயிற்சி அளித்துள்ளேன். அதற்காக திருமதி. திலகவதி ஐபிஎஸ் அவர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்றேன். பின்னர் நாகர்கோவில் வானிலை நிலையத்தில் வில்லுப்பாட்டு பாடியுள்ளேன். மேலும் மண்டைக்காடு கோயில் திருவிழாவிலும் கொடை விழா நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு பாடி பாராட்டு பெற்றுள்ளேன். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் மூசாரி எந்த இடத்தில் உள்ள பள்ளியில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதல் பரிசினை பெற்றுள்ளேன். எனக்கு சங்கீதத்தில் பக்தி பாடல்கள் நன்றாக தெரியும். ஆம்பூர் ராகம், தோடு ராகம் போன்ற ராகங்கள் எனக்கு தெரியும். குறிப்பாக நந்தனார் பாடல்கள் மிகவும் நன்றாக தெரியும் இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டிகண்டவர்
ஜி. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்
உதவி : S. சாம்பெர்வின்
Leave a Reply