வ(ப)ண்டி

வ(ப)ண்டி

  • By Magazine
  • |

ஐம்பது   வயது மதிக்கத்தக்க ஒருவன் காப்பி கலர் பழைய  ஸ்கார்பியோ  நான்கு சக்கர வாகனத்தை  வேகமாக  ஓட்டி வந்து  நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்து சாலை   ஓரத்தில் சட்டென்று  நிப்பாட்டினான்.

வேகமாக வந்து திடீரென நிற்கும் போது சடன் ப்ரேக் பிடித்ததால்  கிரீச் ஒலி எழுந்தது.பிறரின் கவனத்தை கவரும் நோக்கத்தோடுதான்  அவ்வாறு வந்து நிப்பாட்டினான் என்பதோடு மட்டுமல்லாமல் ‘வண்டி ஓட்டுவதில் கில்லாடிதாம்டே’ என பிறர் பெருமைப்பட பேசுவதை காது குளிரக் கேட்க வேண்டும் என்றும் தான் அவ்வாறுச் செய்தான்..அவனுடைய வண்டியைப் பத்தித்தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கும் என அவன்  கற்பனைச் செய்துக் கொண்டு வண்டியை விட்டு உடனே கீழே இறங்காமல் கருப்பு நிற  கார் கதவு கண்ணாடி வழியே சூழலை அனுமானித்தான்.

 ஆனால் எல்லாம் ஒரு சில வினாடி  நேரம்தான் சாலையின் மறுபக்கம்  வந்து நிற்கும் வண்டியை  டீக்கடையில் நின்று டீக்குடித்துக் கொண்டிருப்பவர்கள் திடுக்கிட்டு பார்த்து விட்டு  சுதாகரித்தபடி  யாரோ எவரோ என நினைத்தபடி   அவரவர் வேலையைத்  தொடர்ந்தார்கள்..    அவன் வண்டி வாங்கியதைப் பற்றித் தெரிந்துக் கொண்டிருந்த சிலர் வந்தது யாரென்று தெரிந்தப் பிறகு அவனை  ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

தான் வண்டி வாங்கின விஷயம் ஊருக்கு தெரிந்திருக்கும் என  நினைத்திருந்த வேளையில் ஜனங்கள் அலட்சியமாக நிற்பதைப் பார்த்து இதுப்பற்றி ஊராருக்கு தெரிந்திருக்காதோ என  வண்டிக்குள்  இருந்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்..

 வண்டி வாங்கியதைப் பற்றி ஊரார் பெருமைப் பொங்க பேசுவதை காதால் கேட்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது. இதுப் பற்றி ஊராருக்கு தெரியாமல் போய்விடக்கூடாதே என்றக் கவலையோடு  இரண்டு நாட்களாக  வண்டியிலேயே சுற்றிக் கிறங்கிக் கொண்டிருந்தான் . இப்படியேக் கிறங்கிக் கொண்டிருந்தால் ஊராருக்கு எப்படித்தெரியவரும் என விழிப்புணர்வு பெற்று   படுக்கையை விட்டு எழும்பினக் கையோடு  முகம் கூட கழுவாமல்  டீக்கடை வாசலில்  வந்து வண்டியை  நிப்பாட்டினான்.

அவனுடைய வீட்டுக்கும் டீக்கடைக்கும் ஐம்பது மீட்டர் தூரம் கூட இருக்காது பத்து எட்டு வைத்தால் டீக்கடைக்கு வந்து விடலாம் ஆனால் அவன் எங்கேயோ தூரத்து இடத்துக்கு போயிற்று   வந்ததுப் போல்  ஊரையே ஒரு  சுத்து சுத்தி விட்டு நகரத்திலிருந்து வருவதுபோல் போக்கு காட்டி  வந்து நின்றான்.

“வீண் டாம்பீகமெல்லாம் எதுக்கு டே காலம் கிடக்கிற கிடப்புல  வந்திட்டான்  புதுசா வண்டியக் கொண்டு  யாரும் இதுக்கு முன்னால இப்பிடி ஒரு வண்டியப் பாக்காதது மாதிரி ஆட்டிட்டு..’ என டீக்கடை வாசலில் நின்று அவனுக்குத் தெரிந்த சிலர் முணு முணுத்துக் கொண்டனர்.

அவனுக்கு முன்னால் அவனது சிறுகுழந்தைப் போன்ற அவனது வயசுக்கு பொருந்தாத தொந்தி முன்னேச் சாட அதைக் கவனமாக பராமரித்து வண்டியை விட்டு ஸ்டைலாக கீழே இறங்கி வண்டியை ஏறெடுத்துப் பார்க்காமலே வண்டியின் கதவை இடதுக் கைக் கொண்டு ஓங்கிச் சாத்தினான்.. அந்த சப்தம் கேட்டு திடுக்கிட்டு டீக்கடை வாசலில் நின்றவர்கள் மறுபடியும் முகம் திருப்பி பார்த்தார்கள் .

இதனால் தனது செல்வாக்கு ஒருபடி உயர்ந்து விட்டதாக நினைத்தவனுக்கு   மற்றவர்கள் கவனத்தில் தன் வண்டி இருக்கிறதா என சாய்வான ஒரு பார்வை பார்த்து விட்டு குறுக்கே ஓடும்   முக்கியச் சாலையைக் கடந்து டீக்கடை நோக்கி சென்றான்.  அந்த காலை நேரத்திற்கு மட்டுமல்ல எப்போதுமே எவரையும் கவராத சற்றும் பொருந்தாத கறுப்புக் கலர் சட்டையும் சிவப்பு நிற அரை நிக்கரும் அணிந்திருந்தவன் நடந்துச் செல்லும் போது சட்டையின் மேல் பாக்கெட்டில்  செல்போன் பொருந்தாமல் துருத்திக் கொண்டிருந்தது. அவன் நடக்கும் போது வலது கையானது இயல்புக்கு மாறாக சற்று தூக்கியே வைத்துக் கொண்டு நடந்து வந்தான். அவனை பற்றி அறியாதவர்கள் பிறவிக் கோளாறோ இல்லை விபத்தில் கை இப்படி ஆகிவிட்டதோ என பரிதாபமாகத்தான் பார்ப்பார்கள்.. ஆனால் அனுபவம் உள்ள எவரும் ஒற்ற நோட்டத்தில் கைத்தூக்கலைப் பார்த்ததும்   நிலப் புரோக்கரான புதுப் பணக்காரன் என புரிந்துக் கொள்ளும்படியான தோரணை அவனிடமிருந்தது.

இந்த சுற்று வட்டாரத்தில் ஆற்றிலிருந்து வயலுக்கு நீர்ப் போய்க் கொண்டிருந்த சிறு  ஓடை ஒன்றை  அரசியல்வாதிகளுக்குப் பணத்தை வாரியிறைத்து  நிரத்தி தார்சாலையாக்கி  வயலாக கிடந்த இடங்களை யார் யாருக்கோ பட்டாப் போட்டு  விற்று காசு பார்த்து  ரியல் எஸ்டேட் தொழிலில்  கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்தான்.

“எங்கிருந்தோ நான்கு தலைமுறைக்கு முன்னால் இந்த நிலத்திற்கு  பஞ்சம் பிழைக்க வந்தவனுவ  வாங்கிக் குவிச்சிருக்கும் சொத்தப் பாத்தியா  கணக்கே இல்லை.. கடந்த வாரம் சாதாரணமாக பைக்கிலப் போனான்  இந்த வாரம் பெரிய வண்டில வந்திருக்காங”என பெரிசுகள் அவர்களுக்குள் அவன் முதுகுக்குப் பின்னால் காதும் காதும் வைத்துப் பேசிக் கொண்டார்கள்.’

ஆனால் அவனுடைய நீள அகலங்களைப் பற்றி இன்னும் நன்கு தெரிந்துக் கொள்ளவில்லைப் போல அவர்களுடைய உரையாடல்கள் இருந்தது..தெரிந்துக் கொண்டாலும் பொது இடங்களில் இது குறித்துப் பேச முடியுமா என்ன..?

  தனது இருபது வயதுப் பிராயத்தில் தந்தையின்   ‘அம்பாஸ்டர்’ காரை  எடுத்து ஆர்வகோளாறில்  ஓட்டிப் பழகும் போது  பிரேக்குக்குப் பதில் ஆக்சிலேட்டரை மறந்து மிதிக்கப் போய் வண்டியை   மாமரத்தில் கொண்டு இடித்து நிறுத்தினான்.

அதன் பிறகு அவனது தந்தை ஜாதகக் கெட்டை தூக்கிக்  கொண்டு  பதறியடித்துப் போய் குஞ்சமள சோசியரைப்  பாக்கப்போனார். சோசியர் அவனது சாதக கட்டங்களை நன்றாக ஆராய்ந்து விட்டு வண்டி வாகனங்களால் கண்டம் இருப்பதாகவும் பெரிய வண்டி வாகனங்கள்  ஓட்ட வேண்டுமென்றால் நாற்பத்தொன்பது வயதும்  ஐந்து மாதமும் ரெண்டு நாளும் கழியணும் என அவர் சொல்லி அனுப்பி விட்டார்.அதன் பிறகு எங்கு போகவேண்டுமானாலும் பஸ்சுலயே போய் வந்தான். தன் வயதை ஒத்தவர்கள் ஹாயாக வண்டி ஓட்டி செல்வதைப் பார்க்கும் போது கொதி கொதியாக வரும் .

 இவனது ஆவலை அறிந்து தந்தை அறிவுரைச் சொல்லி அடக்கி  வைத்திருந்தார். பிறகு அவனை சமாதானப்படுத்துவதற்காக காரச்சோவ், சிப்ஸ் என பண்டங்களை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்து பிறகு அதன் மீது அவன் பைத்தியமாகி விட்டான்.இந்த ஐம்பது வயசு பிராயத்திலும் எப்போதும் வீட்டில் டப்பாவுக்குள் ரெண்டு கிலோ சிப்ஸ் தயாராகவே இருக்கும்..அதன் பொருட்டே அவனது வயிறு  பன்றிப் போல்  பெருத்துத்  தொங்கியது.

சில நேரங்களில் தவிர்க்க முடியாத உறவினர்களின் திருமண வீடுகளுக்கு குடும்பத்தோடு போக வேண்டுமென்றால் அவனது தந்தை வண்டி ஓட்டுவார்.அவன் முன் சீட்டில் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்துக் கொள்வான்.வண்டி ஓட்டுவதை கவனிக்கச் சொல்வார்.வண்டி ஓட்ட ஆசைப்பட்டு கேட்டானென்றால் அறுப்பில் விடுவார். பிறகு அடங்கி போய் உட்கார்ந்திருப்பான் .மனைவி குழந்தைகள் பின் இருக்கையில் இருக்க இப்படி  தந்தை திட்டுகிறாரே என மனது நொந்துக் கொள்வான். இளமை இருக்கும் போதே வண்டி ஓட்டி ஜாலியாக இருக்க முடியாமல் போய்விட்டதே என நினைத்து தனிமையில் இருக்கும் போது தந்தையை திட்டிய படி சிப்ஸ் பாட்டிலைத் திறந்து அந்த வெப்றாளத்தில் தின்று தீர்ப்பான்..

 இப்படிப்பட்ட கல்யாண வீடுகளுக்குச் செல்லும் போது கணவன் வண்டி ஓட்டிச் செல்ல தான் முன் இருக்கையில் அமர்ந்திருந்துச் செல்லும் கனவு என்பது அடிக்கடி அவனது  மனைவிக்கு வந்துப் போனது.

  இத்தனை நாள்   மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன் ஐம்பது வயது எட்டும் போது துள்ளி எழுந்தான். தந்தை நோய்வாய்ப் பட்டு  வெகு நாட்களாக படுக்கையில் பலஹீனமாக  விழுந்துக் கிடந்தும்  கூட ஐம்பது வயது எட்டுவது வரைக்கும் காத்திருந்தது முட்டாள் தனமோ என யோசித்துக் கொள்வான். வெளி உலகிற்கு தான் யாரென்று நிரூபித்திருக்க வேண்டிய   கடந்த காலம் வீணே கடந்துச் சென்றப் பிறகு  பொருந்தாத காலத்திற்கு வந்து வண்டி நிற்பதாக நினைத்தான்.

யாருமே தன் வண்டியை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. தினமும் நூற்றுக்கணக்கான விதவிதமான வாகனங்களை பார்த்து பழக்கப்பட்ட ஜனங்களுக்கா இந்த வண்டி கவனத்தை ஈர்க்கும்…?

டீக்குச் சொல்லி விட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சமோசாவை எடுத்து கடித்து இழுத்தான். நின்றபடியே இரண்டு சமோசாவை ஒரேயடியாக முழுங்கினான். இடது கையில் கண்ணாடி கிளாசில் இருந்த டீ ஆவியோடு தொண்டைகுழாய் வழியாக உள்ளே இறங்க ,மற்றொரு கையில் இருந்த சிகரெட்டு புகை உள்ளிழுக்கப்பட்டு   மூக்குத் துவாரங்கள் வழியே வெளியேறியது. அப்போது போனில் யாரோ அவனை அழைத்தார்கள் 

பாக்கெட்டிலிருந்த செல்போனை கையில் எடுத்தான் பிறகு அதை  அலட்சியமாகப் பார்த்து விட்டு அணைத்து விட்டு பாக்கெட்டில் வைத்தான். சட்டைப்  பட்டன் ஒன்றை கழற்றி விட்டவுடன்  பெண்கள்  கழுத்துல போட்டிருக்கிற தாலிச்செயின் மாதிரி வடம் ஒன்று கழுத்தில் தொங்கிக் கிடந்தது .பார்ப்பவர்கள்  சொக்கத்தங்கம் என்றுதான் நினைப்பார்கள் ஆனால் அது ‘ஐம்பொன் எடவாடு ‘என அவனுக்கு மட்டுமேத் தெரியும்.அவனிடம் இருக்கும் பணத்துக்கு தங்க மலையையே மாலையாக செய்து கழுத்தில் அணியலாம் .உடம்பில் சக்தி நிரம்பியிருக்க வேண்டுமென்றாலும் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமென்றாலும் ஐம்பொன்னில் செயின் போட வேண்டுமென்று யாரோ ஒரு குறிக்காரன் சொல்லைக் கேட்டு  மந்திரிக்கப்பட்ட தாயத்தோடு சேர்த்து அணிந்துக் கொண்டிருந்தான்.

யாருமே கண்டுக் கொள்ளவில்லை என ஏமாற்றம் உச்சத்தைத் தொட்டபோது சைக்கிளின் பின் பக்க கேரியரில் மண்வெட்டியும் கடவப்பெட்டியையும்   சைக்கிள் டீயூப்பைக் கொண்டு கட்டியபடி மதிய உணவை மஞ்சள் நிறப் பைக்குள் வைத்து கைப் பிரேக்கின் முன்னால்  தொங்க விட்டப்படி     டீக்கடை நோக்கி எழுபது வயது மதிக்கதக்க  முதியவர் ஒருவர் வந்து நின்றார்.  டீச் சொல்லி விட்டு, அவனையும் வண்டியையும் மாறிமாறி பார்த்துக் கொண்டு

“மக்ளே புதுசா வண்டி எடுத்திருக்கியா  எல்லாரும் சொன்னாவா.. பார்ட்டி எப்போ வைக்கப் போற” என உடைந்த வார்த்தைகளை அவனை நோக்கி வைத்தார். எப்போதோ பழகிய ஓர்மையின் சிறு துணுக்கின்  வெளிச்ச  உரிமையோடு  கேட்க புதுக் குரல்  வந்த திசையில்  முறைத்துப் பார்த்தான் வண்டிக்காரன்.ஒரு மம்பட்டி பணிக்காரன் வண்டியைப்பத்தி விசாரித்ததும் தன்னிடம் பார்ட்டி வைக்க கேட்டதும் தன் தராதரத்துக்கு சற்றும் பொருந்தாமல் போனதை  உணர்ந்தாலும் இவனுக்கெல்லாம் தான் வண்டி எடுத்திருப்பது தெரிந்திருக்கும் போது இன்னும் தெரிய வேண்டிய பலருக்கும் தெரியாமலிருப்பதுப் போன்ற உணர்வு மண்டி நிற்க மம்பட்டிக்காரனுக்கு பதில் ஏதும் சொல்லப் பிடிக்காமல்  கம்பீரத்தை விட்டுக் கொடுக்காமல் அலட்சியமாகப் பார்த்தான்.

 இந்த கசப்பை விட்டுக் களைய தன் தராதரத்துக்கு இணையான யாரேனும் ஒருத்தர் வண்டியைப்பற்றி  கேட்க வேண்டும் என யாரையோ எதிர் பார்த்து நிற்பதுப் போல் அரக்கப் பரக்க பார்த்தபடி  காத்திருந்தான்.. எவரும் கேட்பாரில்லை. வந்துச் சேரவுமில்லை.

பெரும்பாலும் அன்றாட கூலிக்காரர்களால் நிரம்பியிருந்த அந்த  ஊர்காரர்களுக்கு வீண் டாம்பீகங்கள் மீது நாட்டமில்லை. அவர்கள் பெரிய கனவுகளை கண்டு பழகாதவர்கள்.தன் வருமானத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையின் செலவுகளை வரையறுத்து வைத்திருப்பவர்களுக்கு காரை பார்த்து ஆச்சர்யப்படவோ பெருமைப் பாராட்டவோ தெம்பு இல்லை.அவர்கள்தான் தான் வாழ்ந்தக் காலங்களில்  சாலையில் தினமும் விதம் விதமான வண்டி வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே..இவனைப் போல் புதிதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து புது பணக்காரர்களாக இருக்கும் இளைஞர்களுக்கு கார் வாங்குவது பெரிய வீடுகட்டுவது கல்யாணம் கட்டிக் கொள்வது என்பதே பெரிய லட்சியமாக இருக்கிறது. .வீடு கட்டி முடித்தப் பிறகோ கார் வாங்குவதற்கான தனது லட்ச்சியங்கள் நிறைவேறியப் பிறகு அவர்களுக்கு வேறு பெரிய லட்சியங்கள் இல்லாததால் வாழ்க்கையில் வெறுமைக் கவிழ்ந்துக் கொள்ளும்.இதற்கிடையில் எவரும் அவர்களை கண்டுக் கொள்ளவில்லை என்றாலோ அது இன்னும் கூடுதல் மனபாதிப்புகளை உருவாக்கிவிடும்…

பிறகு தொடர்ந்து சிணுங்கியப் போனை அலட்சியத்தோடு பார்ப்பதும் அணைப்பதிலிருந்தே போனில் அழைப்பது அவனது மனைவியாக இருக்கலாம் என்ற பிறரின் யூகம் தவறவில்லை..

“இங்கதாங் நிக்கியேன் பத்து நிமிசத்தில வாரேங்” என மனைவிக்குப் பதில் சொல்லி விட்டானே தவிர நெடுநேரமாக தனக்குள் குமைந்துக் கொண்டே நின்றான் .நெடுநேரமாக மம்பட்டிக்காரனின் விசாரிப்பு மனசுக்குள் ஒரு வித நமச்சலை கிளறிக்கொண்டே இருந்தது. அதை உடனடியாக மனசை விட்டு விரட்டியாக வேண்டும் என நினைத்து விட்டானே தவிர அதற்கான வழிமுறைகள் ஏதும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..மறுபடியும் மம்பட்டிக்காரனை ஓரக்கண்ணால்  பார்த்தான் …அவன் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து குத்தம் வைத்து கடை ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த  குழிகல்லில் இடித்துக் கொண்டிருந்தான்..

பிறகு என்ன நினைத்தானோ,  தான் வாழும் காலத்திலேயே தன் மகனுக்கு வண்டியோட்டி பழகிக் கொடுத்து புதிய வரவான  வண்டி ஒன்றை முன்பதிவுச் செய்து  சிறுவயதிலேயே தன் கண்முன்னாலேயே ஓட்டுவதை தான் பார்க்க வேண்டும் என தீர்மானித்தபடி  தன்னை வண்டிக்குள் நுழைத்தான். சாவியை நுழைத்து வண்டியை வேகமாக முடுக்கி சாலையில் ஓட்டியவாறே  மறைந்தான்.

மம்பட்டிக்காரன் மெதுவாக்கப்பட்ட வெற்றிலையை வாய்க்குள் போட்டு குதப்பியவாறு நரம்புகள் தூண்டப்பட்டவனாய் சக தொழிலாளிகளிடம்  சிரித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு  பார்ட்டி கேட்டதுக்கு எந்த வித பதிலையும் சொல்லாமல் ஏளனமாகப் பார்த்து செல்பவனை நினைத்து வெற்றிலைச் சாறை  காறி உமிழ்ந்து தரையில் துப்பியபடி தனது வேலைகளத்திற்கு செல்ல தனது சைக்கிளை வேகமாக மிதித்தான்.

– கிருஷ்ணகோபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *