ஓடி ஒளியும் எதிர்தரப்பினருக்கு சம்மன் வழங்கும் முறை
Civil (உரிமையியல்) வழக்குகளில் பிரதிவாதிகள் வாதியின் சம்மனை வாங்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பர். சம்மன் வாங்கினால் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். ஆதலால் சம்மன் வாங்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருப்பர். வாதிக்கோ, பிரதிவாதிக்கு சம்மன் கொடுத்தால் மட்டுமே அவர் இடத்தில் பிரதிவாதி கட்டுமானம் செய்வதை தடை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சம்மன் பிரதிக்கு வழங்கப்படாததால் வாதி மிகவும் மன உளைச்சலில் இருப்பார்.
இப்பேர்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும் போது அதைத் தீர்த்துக் கொள்ள சட்டத்தில் இடமுண்டு. வாதி உடனே நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து பிரதிவாதியின் மனைவி பெயருக்கோ அல்லது பிரதிவாதியின் தாய், தந்தை பெயருக்கோ சம்மன் வழங்குவதற்குரிய ஆணை பெற்று அவர்கள் பெயரில் சம்மன் அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்பப்படும் சம்மன் பிரதிவாதி குடும்ப நபர்களால் வாங்கப்பட்டால் அது பிரதிவாதியால் வாங்கியதாக கருதப்படும். இந்த சம்மனையும் பிரதிவாதி குடும்பத்தினர் வாங்காமலிருக்க அங்கங்கு ஓடி ஒழியும் பட்சத்தில் பிரதிவாதிக்குரிய சம்மனை அவர் வீட்டிலோ அல்லது அவர் பணிபுரியும் இடத்திலோ நீதிமன்ற ஊழியர் ஒட்டி வைத்து வந்தாலும் அது பிரதிக்கு சம்மன் கொடுக்கப்பட்டதாக நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும்.
இதைத் தவிர்த்து நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெற்று, பிரதிவாதி இந்த தேதியில் நீதிமன்றம் முன்பாக ஆஜர் ஆக வெண்டுமென்று கூறி நாளிதழ்கள் மூலம் விளம்பரப்படுத்தியும் பிரதிவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கொள்ளலாம்.
சில சமயம் பிரதிவாதி நீதிமன்ற ஊழியரிடமிருந்து சம்மன் வாங்க மறுப்பார். அதை நீதிமன்ற ஊழியர் “சம்மன் வாங்க மறுக்கப்பட்டது” என்ற வாசகத்தை சம்மனில் எழுதி நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார். இவ்வாறு சம்மன் வாங்க மறுப்பு தெரிவிப்பதும் சம்மன் வாங்கியதாக அர்த்தப்படும்.
சில வழக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் இருப்பர். அதில் சில பேர் வழக்குத் தாக்கல் செய்ததும் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவர். இவர்களுக்கு சம்மன் கொடுப்பதில் அதிக பிரச்சனை ஏற்படும். இப்படி ஏற்படும் தருணத்தில் வாதி அவரின் மனைவி பெயருக்கோ அல்லது அவரின் அப்பா, அம்மா பெயருக்கோ சம்மன் அனுப்பி வெளிநாட்டிற்குச் சென்றவர்களை வழக்கில் ஆஜர் ஆக்கியதாகக் காட்டிக் கொள்ளலாம். பொதுவாக நீதிமன்ற சம்மனை எவரும் ஒரே அடியாக நிராகரித்து விட முடியாது. எப்படியும் ஒரு நாள் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகித்தான் ஆக வேண்டும். சம்மன் பெற்றுக் கொண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லையென்றால் அவருக்கு எதிராக ஒருதலை பட்ச தீர்ப்பு வந்துவிடும். இந்த விபரங்கள் அனைத்தும் சி.பி.சி ஆணை 5 கட்டளை 15-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
Leave a Reply