கைக்கிட்டிக்காலம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம்.
“பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில்
பரிவான கைக்கிட்டிக்காலம்”.
– வர்ம குருநூல்
“……………….. தும்பிக்காலம்
நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”.
– வர்ம கடிகார நரம்புச்சூத்திரம்
மேலும்,
கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால்
குருவருளால் குறியதினை கூறக்கேளு
விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா
வெகுவான கைமடக்கிக் கூடும் சொன்னோம்
தள்ளு வலதுபுறம் நீக்கித் தான் நடக்கும் பாரே
தயவான குறிகுணங்கள் சார்ந்துப்பாரு
கொள்ளுவது சத்தியபரன் பின்னுமந்த
குருவருளை நினைத்துடனே சிகிட்சைகள் செய்யே.
-வர்ம கருவிநூல்-500
கொள்ளு கைகெட்டியென்ற காலம் தானும்
குருவருளால் குறியதனை அறையக்கேளு
விள்ளு வாய்பிளந்து நீர் பாயுமப்பா
வெகுவான கைமடங்கி கெட்டும் சொன்னோம்
தள்ளுவது பிறநீங்கி நடுக்கம் பாரு
தயவான குறிகண்டு சார்ந்துபாரு
கொள்ளுவது சாத்தியமாம் பின்னாயந்த
குருவருளை நினைந்து சிகிட்சை செய்யே.
-வர்ம சூட்சம்-500
“நேராக கை உயரா உயர்ந்தால் தாளா
நீர் விஷம் போல் ஏறியே வருத்தம் செய்யும்
சாருமே கரவாதம் தாப மோகம்
தளர் கரளில் குத்துவலி குளிர்சுரங்கள்
ஊரும் விஷம்போல் தரிப்பு மேலோங்கும்”.
– வர்ம குருநூல்
“தானான கைக்கிட்டியினை யிளக்குதற்கு
இனியமுறை கேளந்த கலைநிலையோடு
நானான முடிச்சைந்தும் மெல்லவே அனுக்கி
சிப்பிச்சக்கரம் பேசரிய சூக்ஷாதி சூக்ஷம்
கானான கலைகளைந்தும் காணரிய தோசநிலை
மூன்றுமே அனுக்கியே தாயோடு
மானான மணிபூரம் புறச்சூத்திரம்
செய்யவே மாறும் இவ்வர்மம் தானே”.
– வர்ம ராஜமுத்திரை
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
கைக்கெட்டி வன்மம் மூன்றென்பார் முன்னோர் அஃது
அகங்கெட்டி நிற்பதானொன்று பின் தண்டனையாம்
முகங்கெட்டிப் பின்முதுகோடொட்டி தொடலான்
கை எட்டி என்னுறல் என்றெனு மூன்றே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கைக்கெட்டி வர்மம் மூன்று என்பார் முன்னோர்கள். ஒன்று மரியாதை நிமித்தம் முன் கைக்கெட்டி நிற்கும் பொருத்தசைவில் அமைந்ததாகும். இரண்டாவது தண்டனைக்காக பின்கையை பின்புறமாகக் கட்டும்போது கையின் முட்டு இரண்டும் பதியும் சார்பில் அமைந்த பின்கைக்கெட்டி வர்மம். மூன்றாவது முகத்தின் பின் முதுகோரம் கை எவ்வளவு தூரத்தில் எட்டுமோ அதை தொடும் இடம் கை எட்டிக்காலம் எனப்படும். கை எட்டிக்காலமும் பேச்சுவழக்கில் கைக்கெட்டிகாலம் என அழைக்கப்படலாயிற்று. இங்ஙனம் மூன்று கைக்கெட்டிக்காலங்கள் உண்டு. இதில் முன் கைக்கெட்டிக்காலம் ஒன்று, பின்கைக்கெட்டிகாலம் இரண்டு, கையெட்டிக்காலம் இரண்டு என ஐந்து வர்மங்களைக் குறிப்பதாகும்.
மரியாதைக்கு ஒன்று
தண்டனைக்கு இரண்டு
தன் வயத்திக்கிரண்டு என முன்னோர்கள் குறிப்பிடுவர்.
மூன்றெனும் மூன்றில் முன் விட்டுப்பின் தண்டனை தன்னில்
முயன்றுற தாக்கங்கொள்ளிலுடன் குளிரும் சடமடைக்கும்மூச்சு
மன்னுறவாம் தளர்ச்சையொடும் வியர்வை தயக்கமுறும்கண்கள்
அயன்றுறும் மயக்கமுடனயரும் தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மூன்று எனச் சொல்லப்படும் கைக்கெட்டி வர்மத்தில் தண்டனைக்காக பின்கையைக் கெட்டி வைக்கும் தலத்தில் அமைந்த காலந்தன்னில் தாக்கம் கொண்டால் கொண்டவுடன் உடல் குளிரும், மூச்சடைக்கும், தளர்ச்சையோடு வியர்வையும், கண்கள் பார்வை மங்கலாகி அசதி மிஞ்சி மயக்கமடையும் என்பதாம்.
கொண்டுறில் பின் கைக்கெட்டி பேதமுறும் கையதுவும்
உண்டுறல் பின் அடையுமாமியக்கமுறும் வலியும்மிஞ்சி
கண்டுறில் வாதம் பின் தரிப்புறும் என்றறிந்துமருந்துவகை
கொண்டுறில் குணமாமஃது குறிப்பறிந்துணர்தல் நலனே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பின் கைகெட்டிக்காலம் கொண்டால் கைக்கு மாற்றமுண்டாகும். உண்டு உடுத்து வாழும் செயல்கள் பின்னடைவதோடு வலியினால் இயக்கவும் முடியாததாகும். அவ்வாறு இயக்கமுடியாமல் போனால் பிற்காலங்களில் வாதம் வந்து சேரும். இதற்குரிய சிறந்த மருந்துகளை உண்டுவந்தால் நலமடையும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், கை நேராக உயர்த்த முடியாமல் போகும். ஒருவேளை தாக்கம் கொண்டு உயர்ந்துவிட்டால் மீண்டும் தாளாது. விசநீர் போல் ஏறி வருத்தம் உண்டாக்கும். அடிக்கடி நெஞ்சு தளர்ச்சையும், குத்துவலியும், குளிர் சுரமும் தோன்றி கையிலும், ஈரலுக்குள்ளும் விசம்போல் தரிப்பும், களைப்பும் தோன்றும், படபடப்பு, பரபரப்பு உண்டாகும்.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் இரண்டு காயம் தங்கும் தலங்களையும், முடிச்சுகள் ஐந்தினையும் (சரமுடிச்சு, சுருதி முடிச்சு, துன்னல் முடிச்சு, பசுபதி பாச முடிச்சு, கும்பக முடிச்சு) அனுக்கி விட வேண்டும். பின்னர் வர்மாணி தடவுமுறைப்படி தடவி, கைச்சிப்பிக்குழியில் சிப்பிச்சக்கர அடங்கல் சுழற்றி சூட்சாதி சூட்ச அடங்கல், தாயடங்கல், புறச்சூத்திர அடங்கல், மணிப்பூரக அடங்கல், சீவாத்ம அடங்கல், அமத்தடங்கல், வாரி அடங்கல், கோரி அடங்கல், கூட்டு அடங்கல் அனுக்கி விட சுகமாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு கையில் வாதம் உண்டாகும். அதனால் அழற்சியும், விட்டு நீங்காத வேதனையும் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, தோள்பட்டை வாதம் மற்றும் வாதவலிகள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
– முனைவர் முல்லைத்தமிழ்
Leave a Reply