குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை

குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை

  • By Magazine
  • |

இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது.

தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு சமஸ்கிருத மொழி வெகுவாக பரப்பப்பட்டுள்ளது.

இவர்கள் காலத்தில் தமிழகம் முழுவதும் பாரம்பரிய கலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டன. அவைகள் திண்ணைப்பள்ளி எனும் ஓராசியர் பள்ளிகள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டன. இந்தப் பள்ளிகள் குடிப்பள்ளி (Pyal school) என அழைக்கப்பட்டன. நெடுங்கணக்கும், வானவியலும் முக்கிய பாடங்களாக பயிற்றுவிக்கப்பட்டன. கற்பிக்கும் முதுநிலை பயிற்சியாளர், கணக்காயர் என்றும், ஆசான் என்றும் அழைக்கப்பட்டார். இந்த பள்ளிக்கூடம் இளைய மாணக்கர்களுக்கு, மூத்த மாணக்கர்கள் பயிற்றுவிக்கும் வண்ணம் வகைப்படுத்தப்பட்டன. ஆரம்ப காலத்தில் மணலில் எழுதி கற்பித்து வந்த கல்வி படிப்படியாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஓலைச்சுவடிகளில் (Palmyraleaves) எழுத்தாணி (Stylus or kuluthani) கொண்டு எழுதும் முறையும் கற்பிக்கும் முறையும் தொடர்ந்தன. வேணாட்டில் கி.பி 800 – ஆம் ஆண்டிலிருந்து குடிப்பள்ளி கூடங்களில் களரி பயிற்றுவிக்கப்பட்டது. பாரம்பரிய மருத்துவமும் இக்காலத்தில் குடிப்பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டது. சோழர் காலத்தில் (கி.பி 999-110) இது மேலும் புகழ் பெற்று விளங்கியது.

முற்காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டியநாடு என்ற அடிப்படையில் மூவேந்தர்களின் ஆட்சியில் இருந்தபோது இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது. கி.பி 1956-க்குப் பின்  தமிழ் நாட்டோடு இணைந்து தனி மாவட்டமாகியே விளங்குகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய மருத்துவம், நாட்டு வைத்தியம் எனும் பெயரில் இன்றும் சிறப்புற்று விளங்குகின்றது. இம்மாவட்டத்தின் மருத்துவ கடைபிடிப்புகள் பிற மருத்துவ கடைப்பிடிப்புகளை விட மாறுபட்டவை ஆகும்.

இம்மாவட்டத்தின் பாரம்பரிய மருத்துவம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிபுணத்துவம் பெற்று தனித்தனி சிறப்புகளுடன் விளங்குகின்றது. இங்ஙனம் சிறப்புற்று விளங்கும் இம்மருத்துவம் பிற தமிழ் சித்தர்களின் மருத்துவ தொகுப்புகளிலிருந்தும் மாறுபட்டு குமரி மாவட்டத்திற்கே உரிய மூலிகை, தாதுப்பொருட்கள், சீவப்பொருட்களடங்கிய தனிப்பட்ட சிறப்பு செயல்முறைகளைக் கொண்ட சிந்தாமணி மருத்துவமாகும். இஃது இப்பகுதி மக்களால் நாட்டு வைத்தியம் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது. இம்மண்ணின் சிறப்பு மருத்துவமாகையால் இதனை கற்றறிந்து அளவிற்கேற்பவும், செய்யும் தன்மைகேற்பவும் இது வீட்டு மருத்துவம் (வீட்டு வைத்தியம்) பொட்டு மருத்துவம் (பொட்டு வைத்தியம்) பாட்டி மருத்துவம் (பாட்டி வைத்தியம்) அஞ்சறைப் பெட்டி வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இன்று இத்தகைய சிறு சிறு மருத்துவச் செயல்முறைகள் வெகுவாக வழக்கொழிந்து நாட்டு மருத்துவம் எனும் முதற்பெயர் மட்டுமே நிலைத்து நிற்கின்றது. ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மஞ்சள் நோய் மருத்துவமும், விச மருத்துவமும் இன்றும் வீட்டு வைத்தியமாக கடைப்பிடிக்கப்படுகின்றன  என தனித்தனியே சிறப்பு பெற்று விளங்கியுள்ளது.

குமரி மாவட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள்

வர்ம மருத்துவம்                          (Treatments for Trauma)

எலும்புமுறிவு மருத்துவம்          (Orthopaedics)

விச மருத்துவம்                           (Treatment for Toxin & Toxic bites)

குழந்தை மருத்துவம்                 (Pediatrics)

மாதர் மருத்துவம்                       (Treatment for Females)

வாதநோய் மருத்துவம்               (Treatment for Rheumatism)

கண் மருத்துவம்                          (Treatment for Eye Complaint)

தலைநோய் மருத்துவம்             (Treatment for Head & neck Complaints)

கைவிச மருத்துவம்                     (Treatment for Subjection )

மஞ்சள் நோய் மருத்துவம்         (Treatment for Jaundice )

பயித்திய ரோக மருத்துவம்        (Treatment for Mental disorder)

பொது மருத்துவம்                        (General medicine)

 இம்மருத்துவ வல்லுநர்களும் வர்மாணி ஆசான், வைத்தியர், விசாரி, விசபரிகாரி, பிள்ளை வைத்தியர், கண் வைத்தியர் என தனித்தனி சிறப்பு பெயர்களையும் பெற்றிருந்தனர். மருத்துவ சிறப்பின் அடிப்படையில் அவைசார்ந்த நோய்கள், அவை வரும் வழிகள், நோய் குறிகுணங்கள் அவைகளை குணப்படுத்தும் மருந்துகள் என முழு விவரங்கள் அடங்கிய மருத்துவச் சுவடிகளும் இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன. குழந்தை மருத்துவம், மங்கை மருத்துவம் சார்ந்து பிள்ளைவாகடம், பிள்ளைப் பிணி வாகடம், பிள்ளை பிணிநூல், பாலவாகட சிந்தாமணி, பால ஆச்சரியம், பிள்ளைநோய் நிதானம், பாலவாகட நிதானம்,  வாலை மருந்துவாகடம், குழந்தை மருத்துவம், குழந்தை மருத்துவ கைவல்யம், சந்தான விருத்தி நூல், ஜீவ உற்பத்திக்காண்டம், மலட்டு நூல், சூதக நூல், சூதகபாண்டு நூல், கெற்போற்பத்தி சிந்தாமணி, சீவோற்பத்தி சிந்தாமணி, மங்கையர் வாகடம், சூதக சிந்தாமணி என பல சுவடிகள் காணப்படுகின்றன.

பொது மருத்துவ நூல்களாக வைத்தியக்கண்ணாடி, வைத்திய சிந்தாமணி, அனுபவ வைத்திய சிந்தாமணி, வாகட சிந்தாமணி, வாகட சங்கிரக சிந்தாமணி, ஆச்சரியம், ஆச்சரிய சிந்தாமணி, வைத்திய சூட்சம், வைத்திய வாகட சிந்தாமணி, வைத்திய வாகடம், வைத்திய அனுபவ காண்டம், அனுபவ வைத்தியத்திரட்டு, வைத்திய பல திரட்டு, தரளமணி வாகடம், தரளமணி சிந்தாமணி, தனிச்சொல் வாகடம், பஞ்ச சூத்திரம், நட்சத்திர காண்டம், அகத்தியர் கடைக்காண்டம், போகர் கடைக் காண்டம், வைத்திய பொதுக் காண்டம், மாபுருச காண்டம் போன்ற சுவடிகள் சிறப்பு பெற்று விளங்குகின்றன.

விச மருத்துவச் சுவடிகளாக விச வைத்தியத்திரட்டு, விசநூல், விசப்பரிகாரம், விச வைத்திய சாகரம், விச வைத்திய சிந்தாமணி, சிந்தாமணி ஆருடம், விச வைத்திய சுப்ரமணியம், விசாரி சூலை, சித்திராருடம், விச நாரணீயம், விசப்பட்சி நூல், கருட நூல் போன்றவைகள் சிறப்புற்று விளங்குகின்றன.

மஞ்சள் காமாலை நோய்க்கென காமாலை நிதானம், மஞ்சள் நோய் நிதானம், மஞ்சள் பித்த நிதானம், மஞ்சள்நோய் திரட்டு, காமாலைச் சூத்திரம், காமாலை பாண்டு, நூல்தொகுப்பு எனப் பலச் சுவடிகள் காணப்படுகின்றன. பித்தநோய்கள், பயித்திய நோய்களுக்கான குடோரி நூல், பித்தநோய் நிதானம், பயித்திய நிதானம், பித்தநோய்த் திரட்டு என பல சுவடிகள் காணப்படுகின்றன. கண்நோய் நிதானம், கண் வைத்தியத்திரட்டு, நேத்திரரோக சிந்தாமணி, நேத்திரரோக கைவல்யம், விளிநூல் என கண்நோய்களுக்கு பல சுவடிகளும் தலைநோய் மருத்துவம், சிரரோக சிந்தாமணி, சிரசுரோக பல திரட்டு என தலைநோய்களுக்கு பல சுவடிகளும், காசநோய் நிதானம், இருமல் நோய் நிதானம், இளைப்பு நோய் நிதானம் என மார்பு நோய்களுக்கான சுவடிகளும் உதரரோக நிதானம், உதரபாண்டு நிதானம், உதரகிரிகை நூல் என வயிற்றுநோய்களுக்கான மருத்துவச் சுவடிகளும் ஆண்குறிநிதானம், ஆண்குறி நூல், ஆண்குறி நோய் நிதானம், பெண்குறி நூல், மங்கையர் கொங்கை நிதானம், மங்கையர் மதனநூல், மங்கையர் மதனச்சூத்திரம், மதனநூல் காண்டம், ஆண் பெண் நோய்கள் சார்ந்த சுவடிகளும், குழலி நோய் நிதானம் எனும் மனித முடி சார்ந்த நோய்கள் பற்றிய சுவடிகளும் எனப் பல சுவடிகள் தமிழகத்தின் பிற பகுதிச் சுவடிகளினின்றும் மாறுபட்டு காணப்படுவது இம்மாவட்டத்தின் மருத்துவம், பிற மாவட்ட மருத்துவத்தினின்றும் மாறுபட்ட மருத்துவம் என்பதனை உணர்த்துகின்றது.

மற்றெந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு பல வர்ம மருத்துவநூல்கள் குமரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படுவது அம்மருத்துவம் இம்மாவட்டத்திற்கே உரிய தனிச்சிறப்பு மருத்துவம் என்பதனை பறைச்சாற்றுகிறது.

குமரி மாவட்டத்தில் எல்லா வீடுகளிலும் ஏதேனும் ஒரு எளிய மருந்து செயல்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவது இம்மாவட்ட மருத்துவப் பாரம்பரியத்தின் சிறப்பினை உணர்த்துவதாகும். எனினும் சிறந்த பொது மருத்துவத் தலங்களாக பாலூர், கருங்கல், திக்கணங்கோடு, ஆனக்குழி, பாலப்பள்ளம், மூலச்சல், குழித்துறை, பேயோடு, தெரிசனங்தோப்பு, பட்டகுசாலியன்விளை, வியன்னூர், வேர்கிளம்பி, மணலிக்கரை, காப்பிக்காடு, ஐரேனிபுரம், புதுக்கடை, சாமியார்மடம், இரணியல், கோழிப்போர்விளை, திருவிதாங்கோடு, கண்ணுமாமூடு, கல்லடை, கிள்ளியூர், நிலமாமூடு, பரைக்கோடு, செம்மங்காலை, மயிலோடு, கைதைக்கோடு, கீழ்குளம், பரக்குன்று, மூலவிளை, நித்திரவிளை போன்ற பகுதிகள் விளங்குகின்றன.

வர்ம மருத்துவம் மற்றும் எலும்புமுறிவு மருத்துவத்தில் மூலச்சல், ஓலைக்கோடு, காட்டுக்கடை, மேக்கோடு, பரக்குன்று, மேல்புறம், ஆனக்குழி, பாலப்பள்ளம், செல்லங்கோணம், தெங்கம்புதூர், இறச்சகுளம், மயிலாடி, குண்டல், ஆற்றூர், முஞ்சிறை போன்ற பகுதிகள் சிறப்புற்று விளங்குகின்றன.

விச மருத்துவத்தில் பூட்டேற்றி, காப்பிக்காடு, குமாரபுரம், நிலமாமூடு, பம்மம் போன்ற இடங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.

குழந்தை மருத்துவத்தில் திக்கணங்கோடு, மாறாங்கோணம், காரவிளை, பாலூர், காஞ்சிரகோடு, புதுக்கடை, தக்கலை, இரணியல், ஆறுதேசம், வத்ரா குடியிருப்பு, வெள்ளிச்சந்தை போன்ற பகுதிகள் சிறப்புற்று விளங்குகின்றன.

மஞ்சள் காமாலை மருத்துவத்தில் மேற்கு நெய்யூர், ரீத்தாபுரம், பாண்டிவிளை, மூலச்சல், காப்பிக்காடு, பரக்குன்று, அஞ்சுகலுங்கு கண்டறை போன்ற இடங்கள் சிறப்பு பெற்று விளங்குகின்றன. வாத மருத்துவத்தில் பொன்மனை, தெரிசனந்தோப்பு, மூலச்சல், பட்டசாலியன்விளை, மணலிக்கரை, பரைக்கோடு, மயிலாடி, திக்கணங்கோடு, மயிலோடு, புதுக்கடை போன்ற இடங்கள் சிறப்புற்று விளங்குகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் சிறந்த மூலிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

– மருத்துவர். த. இராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *