உலக நாடுகள் மக்கள் சார்பாக சிந்திக்க வேண்டும்

  • By Magazine
  • |

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக 49-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சூளல் உலகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில் பதவியேற்ற உடனையே சுமார் 100-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவர கையெழுத்திடப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது குடியுரிமைச் சட்டம்.

இது அங்கு குடியேறி பணிபுரியும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதும் குறிப்பாக பெரும்பான்மையாக குடியேறி இருக்கும் இந்தியர்களையும் மிகவும் பாதிக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் ஓரளவு நட்புறவை வளர்த்துக் கொண்டிருந்தாலும், நம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் ஒரு சிறந்த நட்புறவு நீடிப்பதாக நாம் நினைத்துக் கொண்டாலும், அது எந்த அளவிற்கு வலிமையுடையது என்பதை உணர முடியவில்லை. காரணம் டிரம்பின் பதவி ஏற்பிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லை என்பதால் இவர்தம் உறவுகள் டிரம்பால் பொருட்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை என நமது அறிஞர்கள் பேசிக்கொள்வதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களின் வாழ்வுரிமை, பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை குறித்த செயல்களில் மட்டுமே முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக நின்று வாக்குகளை பெற்றவர் என்பதால், அத்தகைய நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்குவார். அப்போது இந்தியாவிலிருந்து பல வழிகளில் சென்று குடியேறி பணிபுரிந்து கொண்டிருக்கும் பலருடைய வாழ்க்கைச்சூளல் கேள்விக்குறியாக்கப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இனி அமெரிக்காவில் பிறக்கும் எந்த அயல்நாட்டவர் குழந்தைக்கும் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என சட்டத்திருத்தம் கொண்டுவரக் கையெழுத்தாகிவிட்டது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். ஆனால் அயல்நாட்டிலிருந்து அங்கு குடியுரிமை பெற்று வாழ்பவர்களின் குழந்தைகள் அங்கு வாழும் உரிமையை இழப்பர்.

அடுத்து பணிவிசா, தற்காலிக விசாக்களில் பணிபுரிவோரில் பலர் வெளியேற்றப்படுவர். இதனை அடுத்து பொருளாதார ரீதியான வரிவிதிப்புகளைப் பொறுத்து பல்வேறு மாற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் சீனா, இந்தியா போன்ற அயல்நாடுகளில் தான் அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகெங்கும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இதுபோலவே பல பொருட்கள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு அயல்நாடுகளில் உற்பத்திச் செய்யப்படுகின்றன. இவைகள் அனைத்தையும் அமெரிக்காவிலேயே தயாரித்து அங்குள்ள மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க நினைத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் மாறுதலடையவும், வீழ்ச்சியுறவும் வாய்ப்புகள் உண்டு.

அதிபர் டிரம்பின் டாலர் மதிப்புக் கூட்டுத்திட்டம், பல்வேறு வரிவிதிப்புகள், இறக்குமதி தடைச்சட்டம் போன்றவைகளால் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் ரூபாய் மதிப்பு டாலர் மதிப்பின் ஒப்பீட்டில் மிகவும் மதிப்பிழக்க வாய்ப்புகள் உண்டு என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். எனினும் இந்தியாவில் உற்பத்தியாகும் கார் தொழில்கள் செயற்கை நுண்ணறிவு செயற்பொறிகள், டெலிபோன் போன்றவைகளை இந்தியாவில் தயாரிப்பது தான் அமெரிக்காவுக்கு லாபமுடையதாக இருக்கும். ஏனெனில் அவை தயாரிப்பதற்கான பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தயாரிப்பு வல்லுநர்கள் இங்கு தான் அதிகம் உள்ளனர் என்பதால் அமெரிக்கா இந்தியாவுடன் ஓரளவு ஒரு நல்ல நட்புறவை அமைத்துக்கொண்டு தான் செயல்படும் என்றும் கருதுகின்றனர்.

இன்று உலகில் அதிகமான அறிவியல் தொழில் நுட்பங்களை ஏற்படுத்தி அதற்கான பல்வேறு கட்டமைப்புகளை சீனா செய்து வருகிறது. இது சீனா தன் வல்லரசு வலிமையை முதலிடத்தில் கொண்டு வருவதற்கு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் பல நாடுகள் கருதுவதாக மக்கள் மற்றும் அறிஞர் வட்டாரங்கள் பேசிக்கொள்ளுகின்றன. மட்டுமன்றி, சீனாவின் உலக வர்த்தகதளமும் அதன் வணிக அமைப்பும் கூட அதனை வலிமையாக்கிக் கொண்டே வருகிறது. 2050-ஆம் ஆண்டுக்குள் சீனா உலகின் முதல் வல்லரசு நாடாக உருவெடுக்கும் சாத்தியக்கூறுகள் பல உள்ளதாக உலகின் பொருளாதார வல்லுநர்கள் கருதுவதாக மக்கள் மத்தியில் பேச்சுக்கள் உலா வருகின்றன. இந்த சூளலை எதிர்கொள்ளும் நோக்கில் அமெரிக்க பிரதமர் உலகின் தலைமை பொறுப்பைத் தக்கவைத்துக் கொள்ள திட்டங்கள் தீட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதன் அடிப்படை நோக்கத்தில் ஒன்று ரஷ்யாவை அச்சுறுத்துவது. காரணம் ரஷ்யா அணு ஆயுத வலிமை கொண்ட நாடு… அதன் அருகில் ஒரு ராணுவத்தளத்தை அமைத்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் “நேட்டோ” என்ற பெயரில் ஒருங்கிணைந்து திட்டமிட்டு உக்ரைனை தன் வசம் இழுத்துப்போட மேற்கொண்ட முயற்சியும் இழுபறியில் தான் உள்ளது.  எனினும் ரஷ்யா-உக்ரைன் யுத்தம் முழுமையாக நிறுத்தப்படுமா? இல்லை புகையாகவே தொடருமா? என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதாக உள்ளது.

இதுபோலவே இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் பதட்டங்களும் ஒரளவு தணிய வாய்ப்புள்ளதாக சமூக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. அடுத்து தங்கம், பெட்ரோல் போன்றவைகளின் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அனைத்து நெருக்கடிகளும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இவைகளின் நெருக்கடிகளிலிருந்து மக்கள் விடுபட்டு நிம்மதியாக வாழ உலக நாடுகள் ஒருங்கிணைந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் நலமாக இருக்கும்.

இந்தியா பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட நாடாக பரிணமிக்கிறது. இந்த நம்பிக்கைகள் அறிவிற்கும், அறிவியலுக்கும் உகந்ததாக உள்ளனவா? இல்லையா? என்று அறிந்துகொள்வதற்கு முன்னரே வலிமைமிக்க, அதிகாரமிக்க துறைகளில் இருக்கும் வல்லுநர்கள் தங்கள் சுயநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்பாமல் இருப்பதே நம் நாட்டின் இறையாண்மைக்கும் உகந்ததாக இருக்கும். நீதிமன்றங்கள், கல்விக்கூடங்கள், அறிவியல் கூடங்கள் அனைத்திலும் கேள்விகளும் பதில்களும் அறிவுப்பூர்வமாகவும், உண்மையாகவும், அறிவியல் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நாம் மக்கள் மத்தியிலும் எதைப் பேச வேண்டும், எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் புரிந்து உணர்ந்து செயல்பட்டால் நன்மையாக இருக்கும். அறிவு வளமிக்க நம்நாடு அறிவியல் முன்னேற்றத்தில் சிந்திக்கத் தவறிவிட்டால் பின்னோக்கி நடப்பதைப் போல் ஆகிவிடும்.

அடுத்து ஒரு கொடுமை நம் மண்ணில் நடப்பதை தெருப்பாதைகளில் கூட மக்கள் கேலியாக பேசுவதை கேட்க முடிகிறது… ஒரு மேடையில் தந்தை சொந்த பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுகிறார். மது குடிக்கும் பழக்கம், போதைப்பழக்கம் மிகவும் கொடியது… அது குடிப்பவரை மட்டுமே பாதிப்பதில்லை… குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் என்று… இதில் ஆச்சரியம் என்னவென்றால், தன் பிள்ளைகளுக்கு மதுவை சந்து பொந்துகளில் எல்லாம் கடை வைத்து விற்பவரும் அவர் தான். விற்பனை அளவு குறைந்துவிட்டால் விற்பனையாளர்களை கேள்வி கேட்பவரும் அவர் தான்… வரி-வரி- வரி என வரிந்து கட்டி மக்களின் முதுகெலும்பையே உறிஞ்சும் அரசாக மாறிவிட்டது என இளையோர் முதல் முதியோர் வரை தெருக்களில் பேசும் கேலிக்கூத்து வார்த்தைகளும் மனதில் வேதனையை உண்டுபண்ணுகிறது. ஆட்சியாளர்கள் சிந்தித்தால் நல்லது.

அன்புடன் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *