– சபா. முருகன்
பாரம்பரியம்
பண்பாடு
நாகரிகம்
பெருமிதங்கொண்டு
பெண்மை அணியும்
பேருணர்வு !!
ஒப்பற்ற
ஓர் ஓவியந்தீட்டும்
ஓவியனின்
கலையுணர்வும்
கவனமும்
சேலைகட்டும்
சிரத்தையாயிருக்கிறது !!
தலைமுறைப் பெருமையை
தக்கவைக்கும்
தகவமைப்பே
சேலைகட்டல்
உடலையும்
உள்ளத்தையும்
அழகுபடுத்தும்
மடலாய் விரிந்து
ஒரு மாமலராய்
தோணவைக்கிறது பெண்மையை !!
ஒரு சோலையின் சுகந்தத்தை
ஓர் அழகிய உருவமாய்
வனைகிறது சேலை
புடவையின் பூரிப்பில்
பெண்மையின் புன்னகையில்
புதுப் பொலிவுகொள்ளும் பூலோகம் !!
நிலங்கொண்ட
நிறைமதியிவளென்று
உளங்கொள்ளும்
ஒழுக்கம்
புலனடக்கத்தின்
வரிந்துகட்டிய
விழுமியம்
ஒவ்வொரு நாளும்
தன் உன்னதப் பெண்மைக்கு உளம்பூரித்து
ஒரு நீண்டபொன்னாடை
போர்த்துகிறாள் பெண் !!
நீளாமல்
குறுகாமல்
அளவாக அடியெடுத்து நடக்க
இடமளிக்கும் கொசுவம்
இல்வாழ்வில்
இலக்கண இலக்கியம் !!
கலாச்சாரத்தின்
விழாக்கோலமாய்
ஒப்பற்ற ஒரு நூலியற்றல் !!
அன்று முதல்
இன்று வரை
பெண்மைக்கு பேரழகுப் பீதாம்பரம் !!!
Leave a Reply