எல்லாமும் செருப்பால் தான்!

  • By Magazine
  • |

– ஓஷோ

வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் உறைந்து போனதுமான ஒரு பிரச்சனையாகிப் போகிறது.

பெரிய மேதை, திறமைசாலி, நோபல் பரிசு வாங்கியவர். அறிஞர், உலகப் பிரசித்தி பெற்றவர் என்றாலும் குழந்தைத்தனமாக நடந்து கொள்வார்.

காலையில் விழித்து எழும்போது இருக்க வேண்டிய இடத்தில் செருப்புகள் இல்லாமல் இருந்தால் கோபம் கொள்வார். எரிச்சல்படுவார். அந்தக் கணத்தில் தன் கோபத்தை அவர் கவனித்துப் பார்த்தால் சிரித்துக் கொள்வார். ஏனென்றால் அதற்காகக் கோபப்படுவது அவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும். ஆனால் அவர் தன் கோபத்தைக் கவனிப்பதில்லை.

ரேஸர் கை நழுவி கீழே விழ அவர் மேலும் கோப்படுகிறார். அந்தக் கணம் அந்தப் பிரச்சனையை எதிர் கொண்டிருந்தால் அவர் சிரித்திருப்பார். உயிரற்ற ஒரு ரேஸர் மீது யாராவது கோபம் கொள்ளலாமா? ஒரு ரேஸர் எதற்கும் எப்போதும் காரணமாவதில்லை. அதன் மீது எப்படிக் கோபம் கொள்வது? ஆனால் அவரோ அதிகமாக எரிச்சல் கொள்கிறார். கைகள் உணர்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அது தவறி விழுகிறது. அவருக்கு வெகுபிரியமான பழங்காலத்திய கண்ணாடி மீது விழுகிறது… கண்ணாடி உடைந்து விடுகிறது.

ஏனெனில் வாழ்வில் வளராமல் இருப்பது எதுவும் இல்லை. உயித்திருப்பது எல்லாமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நீ உயிர்த்திருக்கும் போது உன் கோபமும் உயிர்த்திருக்கிறது. அது எப்போதும் இருந்த நிலையிலேயே இருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் இயக்கமும் சக்தியும் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

இப்போது அவருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. வெளியே வருகிறார். நாற்காலியின் மீது இடித்துக் கொள்கிறார். கதவை இழுத்து சாத்துகிறார். குழந்தை வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அறைகிறார். சச்சரவை ஆரம்பிக்கிறார். மனைவியோடு வாய்ச்சண்டை ஒன்றுமே இல்லாத சில்லறை விவகாரத்துக்காகத் தான். இத்தனையும் செருப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போனதால்தான்.

இந்த மேதை காரை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு கிளம்புகிறார். போய்ச் சேர்வதே இல்லை. வழியில் விபத்து அப்படித் தான் நடக்கும். எல்லாமும் செருப்பால் தான். இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போன செருப்புகளால் தான்.

பைத்தியம் பிடித்தவனைப் போல காரை ஓட்டுகிறார். அவருடைய கோபம் முழுவதும் இப்போது கால் நுனியில். ஆக்ஸிலேட்டரை அழுத்தோ அழுத்து என்று அழுத்துகிறார். போதையில் இருப்பவரை போல கோபம் எனும் போதையில் இருக்கிறார். விபத்து நடந்து போகிறது. பன்னிரண்டு மணி நேரமோ பதினைந்து மணிநேரமோ கழித்துக் கண்களை திறந்து பார்க்கிறார். மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு எது எதனால் நடந்தது என்பதைப் பொருத்திப் பார்த்து தெரிந்து கொள்ளவே முடிவதில்லை.

நர்ஸ் ஒருத்தியோடு அவருக்குக் காதல் வந்து விடும். அப்படியே போய்க் கொண்டிருக்கலாம்.  எல்லாமும் அந்தச் செருப்புகளால் தான். குடும்பமே நிலைகுலைந்து போகிறது. விவாகரத்து அதற்குப்பின் எல்லாமும் மாறி போய்விட்டனர். இத்தனைக்கும் காரணம் அந்தச் செருப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போனது தான். அந்தந்த கணத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். எதுவும் உனக்குள் சேர்ந்து விட விட்டு விடாதே. சேர்த்து வைத்துக் கொள்ளாதே. வாழ்க்கை உண்மையில் வெகு அருமையானது. அசிங்கமாகிப் போவதுண்டு. ஆனால் அதுவல்ல பிரச்சனை. ஒவ்வொரு பிரச்சனையும் வெகு சிறிய பிரச்சனைதான். அதனாலேயே வாழ்க்கைய பிரச்சனையாக்கி விடாதீர்கள். மரங்களுக்கு வாழ்க்கை ஒரு பிரச்சனையாவதில்லை. மண்ணுக்கும் விண்ணுக்கும் ஒரு பிரச்சனையாவதில்லை. மனிதனுக்கு மட்டுமே பிரச்சனையாகி விட்டது. காரணம் மனிதன் மட்டும் ஒத்திப் போடும் வித்தையைப் பழகிக் கொண்டான். அதனால் சின்ன சின்ன விஷயமெல்லாம் பெரியதாகிப் போகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *