உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம். உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.
சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…
அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…
சொல்லும் ஒவ்வொரு சொல்லும், செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன் எதற்கென்று எழுந்து நின்று கேட்கின்ற அறிவுத்திறன் வளரட்டும்…
உண்ண உணவளிக்கும் உயர்ந்த தொழிலாளர், உடல்வருத்தி, உயிர் வருத்தி நின்றாலும் கண்ணே காணாதிருக்கின்ற கடும் மனத்தார் உள்ளங்களின் கடுஞ்சினங்கள் ஒழியட்டும்…
எண்ணும் எண்ணமெல்லாம் எல்லோர்க்கும் எல்லாம் என்றாகட்டும்… மதுவை விலைபேசி மாண்போடு மக்களுக்கு விற்கின்ற தந்தையின் போதை ஒழிப்புப் போராட்டம் இனியும் இல்லாமல் ஆகட்டும்…
அறிவுக்கும், அறிவியலுக்கும் மதிப்பளிப்போம். அடுத்தவரை அடக்கி ஆளும் ஆணவக்கதைகளுக்குள் அடங்கிவிடோம்…
எந்நாளும் என்றெண்ணி உள்ளத்தால் உயர்ந்து உலகுய்ய உழைத்திடுவோம்.
புதிய தென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
அன்புடன்,
ஆசிரியர்.
Leave a Reply