– பொன்.குமார்
பிரிய சகோதரனுக்கு ஒரு பிரியா விடை
சாவதெல்லாம் மனிதர்களே- நான்
சாகாத பெருங்கவிஞன்
நான்
எழுதாமல் போனால் இன்றே
இறந்திடுவேன் இது உண்மை
– கவிஞர் பாரதி வசந்தன்
வணக்கம் சார். ஒரு நிமிசம் பேசலாங்களா என்றுதான் அலைபேசியில் பேச்சைத் தொடங்குவார் எழுத்தாளர் பாரதி வசந்தன். குறைந்தது அரைமணி நேரம் பேசுவார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவார். நான் அய்யா என்றுதான் அழைப்பேன். இடையிடையே சகோதரா என்பார்.
எழுத்தாளர் பாரதி வசந்தனை இருபதாண்டுகளுக்கு மேலாக தெரியும். அவரின் யாதெனில் என்னும் சென்ரியு தொகுப்பிற்கு விமர்சனம் எழுதியதில் இருந்து தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து தலை நிமிர்வு, தம்பலா, ஆகாயத் தாமரை போன்ற பல நூல்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். விமர்சனம் தொடர்பாக கடிதங்களும் எழுதியுள்ளார். அறுபத்தேழு நிலாக்களும் ஹைக்கூவாக ஒரு புத்தனும் என்னும் ஹைக்கூ தொகுப்பிற்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பளித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
ஹைக்கூ, மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் என அனைத்துத் தளங்களிலும் இயங்கினார். ஒரு படைப்பு என்பது செம்மையாக வரவேண்டுமென்று மிகவும் தீவிரமாக செயல்படுவார். வெளிவருவதற்கு முன் தனக்கே மனநிறைவு ஏற்படும் வரை பல திருத்தங்கள் செய்வார். பின்னரே வெளியிடுவார். சிறுகதை, நாவலை பொருத்தவரை தேவையான தகவலை திரட்டுவார். அவை சரிதானா என பலரிடம் பேசி உறுதி செய்துகொள்வார்.
புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழே எங்களின் இலக்கிய நட்புக்கும் இலக்கிய பயணத்திற்கும் காரணமாக இருந்தது. புதிய கோடாங்கியில் வெளியாகும் தன் படைப்புகள் குறித்து கருத்து கேட்பார். கருத்துகளை எழுதவும் தூண்டுவார். பின்னர் கருத்துகள் குறித்தும் பேசுவார்.
என் படைப்புகள் குறித்தும் பேசுவார். என் படைப்புகள் பல வெளிவர காரணமாக இருந்துள்ளார். பாரதியை பற்றிய பாரதி வசந்தன் எழுதிய தம்பலா போன்ற சிறுகதைகளே பாரதி பற்றிய சிறுகதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளிவர காரணமாக இருந்தன. புதிய கோடாங்கி இதழுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து வெளியிடவும் ஒரு காரணமாக இருந்தார். அதுவே முகத்தில் முகம் என்னும் தொகுப்பாக வெளிவந்தது.
எழுத்தாளர் பாரதி வசந்தன் தலை நிமிர்வு தொகுப்புக்காக தாரைப்புள்ளிக்காரர் எழுத்துக்களம் விருதுக்காக சேலம் வந்திருந்த போது இல்லம் வந்தார். ஒரு நாள் முழுக்க உடனிருந்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செல்லும் அப்பா பைத்தியம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பிரியப்பட்டார். அழைத்துச்சென்றேன். அன்று முதல் நெருக்கம் அதிகமானது.
வெளிச்சம் என்றொரு இதழ் நடத்தினார். உடல்நிலை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தற்போது ஒரு ஹைக்கூ தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் பல தொகுப்புகளை கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தார்.
பல்லாண்டுகள் இலக்கிய உலகில் பயணித்தும் கொள்கைகளை விட்டுத் தராமல் செயல்பட்டும் தலித்தியருக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை உயர்ந்த விருதுகள் கிடைக்கவில்லை என நான் கண்ட நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நேர்காணலுக்கு பிறகே பாரதி வசந்தனுக்கு புதுச்சேரி அரசு கலைமாமணி விருது வழங்கியது. தமிழக அரசு பெரிய வாய்கால் தெரு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக விருது தந்தது.
விருதினை உடல்நிலை சரியில்லாத போதும் நேரில் சென்று பெற்று வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இருப்பினும் இலக்கியத்திற்கு உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது கிடைக்குமா என்பதை ஆவலுடன் கேட்பார். கிடைக்கும் அய்யா காத்திருங்கள் என்றேன்.
பாரதி வசந்தனுக்கு மேலும் பல கனவுகள் இருந்தன. சொந்தமான ஓர் இடம் வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்று விரும்பினார். நிலம் வாங்கிய விவரம் தெரிவித்தார். வீடு கட்டினால் அவசியம் வாருங்கள் என்றார்.
கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவ்வவ்போது உடல்நிலை குறித்து பேசுவார். ஆறுதலாக பேசிய பிறகு மீண்டும் தேறி பேசுவார். இறுதியாக 27.10.2024 அன்று ஒரு பத்து நிமிடங்கள் பேசினார். மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவராகவே பேசுவார். இருப்பினும் 22.11.2024 நான் தொடர்பு கொண்டேன். பதில் எதுவும் இல்லை. பேசுவார் என்று எதிர் பார்த்த நிலையில் 07.12.2024 அன்று பாரதி வசந்தனின் இறப்புச் செய்தி பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று 07.12.2024 எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தின் நினைவு நாள். அதிலிருந்து மீள்வதற்குள் இப்படியொரு துயரச் செய்தி. தினமும் காலை வணக்கம் செய்தி அனுப்புவார். கடைசியாக அவர் அனுப்பிய நாள் 25.10.2024.
1970-களில் கவிதைகளில் கவிஞர் எழுதிய முதல் கவிதை சுடர் விடும் நெருப்பு என கவிஞரே பதிவு செய்துள்ளார் . ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுடர் விட்ட நெருப்பு இன்று அணைந்து விட்டது. இறுதி வரை கொள்கை பிடிப்புடன் இருந்தார். தமிழினமும் தலித்தியமும் பாரதிதாசனின் இரண்டு கண்கள். தமிழ்ப்பற்றினாலே தன் பிள்ளைகளுக்கு அ. தமிழ்மகள், அ. தமிழ் முதல்வன் என்று பெயரிட்டுள்ளார்.
புதுச்சேரி என்றால் பாரதி, பாரதிதாசன், வாணிதாசன் நினைவிற்கு வருவது போல பாரதி வசந்தனும் நினைவிற்கு வருவார். வரலாறும் அவ்வாறே பதிவு செய்யப்படும். இலக்கியத்திற்கு மட்டுமல்ல எனக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பெரிய இழப்பு. ஈடுசெய்ய முடியுமா என தெரியவில்லை. பாரதி வசந்தன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
Leave a Reply