பூ.வ. தமிழ்க்கனல்
அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.
சிறைத்தண்டனை
சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.
மெட்ராசு மாகாணத்தில் ஆந்திரத்தின் பெரும்பகுதியும் கருநாடகத்தின்பெல்லாரி போன்ற பகுதியும் இணைந்து இருந்தன. சென்னையைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பொட்டி சிறீராமுலு என்பவர் 1952- ஆம் ஆண்டு ஆந்திரைத்தைச் சென்னையில் இருந்து தெலுங்கர்கள் வாழும் தனி மாநிலமாகப் பிரித்துத் தரக்கோரி 56 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியால் ஆந்திர மாநிலம் உருவானது.
தமிழ்நாடு
1956-ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் கருநாடகம், கேரளம் போன்றவை மொழிவாரி மாநிலங்களாக உருவானது. மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராசு மாகாணமாகத் தொடர்ந்தது. தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது. இனி தமிழர்கள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்றார் பெரியார். தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி, தமிழரசுக்கழகம் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. காங்கிரசில் இருந்த சிலருக்கும் இந்த எண்ணம் இருந்தது.
உண்ணாவிரதம்
பொட்டி சிறீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்குத் தூண்டுதலை ஏற்படுத்தியது. தமிழர்களின் நிலப்பரப்பைத் தமிழ்நாடு என மாற்றக்கோரி 1956 சூலை மாதம் 27-ஆம்தேதி விருதுநகர், சூலக்கரை மேட்டில் தனி ஆளாக உண்ணாவிரதம் தொடங்கினார். அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும் என்று பொதுவுடைமைக் கட்சியினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். சங்கரலிங்கனாருக்குக் கம்யூனிஸ்டுக் கட்சித் தொண்டர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
கைவிட மறுப்பு
60 நாள்கள் கடந்ததும் சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. ம.பொ.சி., அண்ணா, சீவா ஆகியோர் விருதுநகருக்குச் சென்று சங்கரலிங்கனாரைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படிக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டார்.
வீரச்சாவு
76 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அப் புனிதரின் உயிர்ப்பறவை 1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அவர் நெஞ்சக்கூட்டில் இருந்து பறந்து சென்றது.
காங்கிரசுக் கட்சிக்காரர் என்றாலும் தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரசுக் கட்சியை நம்பாமல் தான் இறந்தவுடன் அடைந்தவுடன் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பைக் கம்யூனிஸ்டுக் கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார்.
அடக்கம்
அதன்படி அவரது உடல் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைவுச் செய்தி தமிழ்நாட்டு அரசியலில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியது. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்கு பின் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தனி சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்ட போதும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டித் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.
பெயர் மாற்றம்
1967 -ஆம் ஆண்டு அண்ணா முதல் அமைச்சரானதும் 1968 சூலை 18 -ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா, ‘தமிழ்நாடு” என மூன்று முறை கூற “வாழ்க” என்று உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டார்கள்.
1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்றச் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 டிசம்பர் 1- ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 1969 ஜனவரி 14 -ஆம் தேதி தமிழர் திருநாள் முதல் அதிகாரப்பூர்வமாக மெட்ராசு மாகாணம் தமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அண்ணா உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் போற்றினர். சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசால் விருதுநகர் கல்லூரிச் சாலையில் நகராட்சிப் பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
Leave a Reply