ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம்
தமிழில்: நாணற்காடன்
கிளைகளெங்கும் இலைகள் நிரம்பியிருந்தன. ஆனால் அவற்றில் பூக்கள் எதுவுமில்லை. நான் தினமும் இலைகளின் முகத்தைப் பார்ப்பேன். சம்பா எப்போது பூக்கும் என்று யோசிப்பேன். ‘எவ்வளவு பெரிய பூந்தொட்டியில் வைத்தாலும் சம்பா பூக்காது. இந்தச் செடியின் வேர்களுக்கு நிலத்து மண் தான் தேவை’ என்று ஒரு தோட்டக்காரர் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் பூந்தொட்டியிலிருந்து செடியை எடுத்து நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தாள்.
“நான் உன்னைப் பல இடங்களில் விசாரித்து, பல இடங்களில் தேடிக்கொண்டு வந்து இருக்கிறேன்.””நீலக்கண் அழகியாகிய நீங்கள் யார்?”
“என் பெயர் குலியானா.” “பூ போன்ற பெண்.” “ஆனால், இரும்புக் கால்கள் கொண்டு நடந்து வந்திருக்கிறேன்.”
“எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” “யூகோஸ்லாவியாவிலிருந்து.”, “இந்தியா வந்து எவ்வளவு நாளாச்சு?”
“ஒரு மாசம். பலரையும் சந்தித்திருக்கிறேன். பெண்கள் சிலரை மிகவும் விருப்பத்தோடு சந்திக்கிறேன். உன்னைச் சந்திக்காமல் போக மனமில்லை. அதனால் நேற்றிலிருந்து உன் முகவரியைக் கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தேன்.”
நான் குலியானாவுக்கு தேநீர் வைத்துக் கொடுத்தேன். தேநீர் கோப்பையை அவளிடம் நீட்டும் போது, அவள் நெற்றியில் பரவியிருந்த பழுப்பு நிற முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டு, அவளுடைய நீலக் கண்களைப் பார்த்து, “சரி, இப்போது சொல்லுங்கள், குலியானா! உங்கள் கால்கள் இரும்பாக இருக்கலாம். ஆனால் இது என்ன? உங்கள் அழகையும், இளமையையும் சுமந்து சுமந்து நீங்கள் சோர்வடையவில்லையா? நாடு நாடாகச் சுற்றி எதைத் தேடுகிறீர்கள்?
குலியானா ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்துக் கொண்டு சிரித்தாள். ஒருவரின் சிரிப்பில் தன்னம்பிக்கை இருந்தால், அது அவரின் கண்களில் மின்னுவதைப் பார்க்க முடியும். குலியானாவின் கண்களில் அந்த மின்னலைக் கண்டேன்.
“நான் இன்னும் எதுவும் எழுதவில்லை. ஆனால், நான் எழுத மிகவும் விரும்புகிறேன். எழுதுவதற்கு முன்னால் இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகிறேன். நான் இன்னும் பார்க்காதவை நிறையவே இருக்கின்றன. அதற்குள் எப்படிச் சோர்வடைவது? நான் முதலில் இத்தாலிக்குச் சென்றேன். பின்னர் பிரான்ஸ், ஈரான்;, ஜப்பான்”. “உங்களை எதிர்பார்த்து யாரும் காத்திருக்க மாட்டார்களா?”
“என் அம்மா எனக்காகக் காத்திருக்கிறாள்.” “உங்கள் கடிதம் கிடைக்கும்போது அவர் மிகவும் உற்சாகம் அடைவார் இல்லையா?”
“எனது ஒவ்வொரு கடிதத்தையும் எனது கடைசி கடிதமாகத் தான் என் அம்மா நினைத்துக் கொள்வாள். நான் வருவேன் என்றோ, என் அடுத்த கடிதம் வரும் என்ற நம்பிக்கையோ கூட என் அம்மாவுக்கில்லை.”
“ஏன்?”
“இப்படிச் சுற்றித் திரியும் வழியிலேயே எங்காவது இறந்துவிடுவேன் என்று நினைக்கிறாள். அவளுக்கு நான் மிக நீண்ட கடிதங்கள் எழுதுகிறேன். அவள் கண்பார்வையையும் இழந்துவிட்டாள். ஆனால் என் கடிதங்களை யாரையாவது படிக்கவைத்துக் கேட்டுக் கொள்கிறாள். இப்படியாக அவள் என் கண்களால் இந்த உலகைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.”
“சரி, குலியானா நீ பார்த்த உலகம் எப்படி இருக்கிறது? ‘வேறெங்கேயும் போகாதே’ என்று எந்த இடமும் கையை நீட்டி உன்னைத் தடுக்கவில்லையா?”
“என்னைத் தடுத்து நிறுத்த, என்னைப் பிடித்து வைத்துக் கொள்ள, என்னைப் பிணைத்து வைத்துக் கொள்ள எனக்கென ஏதாவது ஓர் இடம் வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால்…”
“வாழ்க்கையில் எந்தக் கைக்கும் அவ்வளவு சக்தி கிடைக்கவில்லையா என்ன?”
“நான் இந்த வாழ்க்கையில் மிக அதிகமாக எதிர்பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். தேவைக்கு அதிகமாக என் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, நான் சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றேன்”
“எப்போது?”
“1941 இல், நாங்கள் கிளர்ச்சி செய்தோம். இந்தக் கிளர்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றபோது நான் சின்னஞ்சிறு சிறுமியாகத்தான் இருந்தேன்”
“அந்த நாள்கள் மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும், இல்லையா?”
“நான்கு ஆண்டுகள் மிகக் கடினமாகத் தான் இருந்தன. பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை. எதிரிகள் பலமுறை எங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டனர். நாங்கள் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு இரவில் மட்டும் நாங்கள் அறுபது மைல்கள் நடந்தோம்.”
“அறுபது மைல்! உங்கள் இந்த மென்மையான உடலில் இவ்வளவு உயிராற்றல் இருக்கிறதா, குலியானா?”
“அது ஓர் இரவில் நடந்தது. அப்போது நாங்கள் முந்நூறு தோழர்கள் இருந்திருப்போம். ஆனால், தனியாக முழு வாழ்க்கையையும் கடக்க எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது!”
“குலியானா!”
“சரி விடுங்கள் மகிழ்ச்சியாக ஏதாவது பேசலாம். எனக்காக ஏதேனும் ஒரு பாடலைப் பாடுங்களேன்.”
“குலியானா நீங்கள் எப்போதாவது பாடல்கள் எழுதியிருக்கிறீர்களா?”
“முன்பெல்லாம் எழுதுவேன். அப்புறம் எழுத முடியாது என்று தோன்றியது. இனிமேல் எழுதலாம் என்று தோன்றுகிறது.”
“என்ன பாடல்கள் எழுதுவீர்கள் குலியானா? காதல் பாடல்களா?”
“காதல் பாடல்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எழுத மாட்டேன். ஒருவகையில் அவை காதல் பாடல்களாகத் தான் இருக்கும். ஆனால், அவை பூந்தொட்டியில் விதைக்கப்பட்டு வளர்ந்த செடியின் பூவைப் போன்ற காதலைப் பற்றி இருக்காது. மாறாக, நான் எழுதும் பாடல் தொட்டியில் நடாமல் நிலத்தில் நட்டு வளர்க்கப்பட்ட காதலைப் பற்றியதாகவே இருக்கும்”.
குலியானாவின் வார்த்தைகளைக் கேட்டு நான் வியப்படைந்தேன். பூந்தொட்டியிலிருந்து எடுத்து நிலத்தில் நான் நட்ட சம்பா மரத்தின் நினைவு வந்தது. குலியானாவின் முகத்தைப் பார்த்தேன். குலியானாவின் இதயத்துக்கும் குலியானாவின் அழகுக்கும் இந்த பூமி கடன்பட்டிருப்பது போல் தோன்றியது. குலியானா எனக்குக் கடன் கொடுத்தவள் போல் தோன்றினாள். ஆனால், இந்த பூமி தன் கடனை ஒருபோதும் அவளுக்குத் திருப்பிச் செலுத்த முடியாது என்பது போல் உணர்ந்தேன்.
“குலியானா!”
“அதனால் தான் நான் சொன்னேன் இந்த வாழ்க்கையில் நான் மிக அதிகமாக, தேவைக்கு அதிகமாக எதிர்பார்க்கிறேன் என்று”
“தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாதே, குலியானா. உன் இதயம் விரும்பும் அளவுக்கு மட்டும் எடுத்துக் கொள்.”
“ஆனால், இதயத்திற்கு நிகராக எதுவும் இல்லை. எங்கள் நாட்டில் ஒரு நாட்டுப்புறப் பாடல் உள்ளது –
“உன் கிளைகளுக்குத் தண்ணீர் கொடுப்பது யார்?
கட்டிலுக்குத் தோள் கொடுப்பது யார்? என் கட்டிலுக்கு யார் தோள் கொடுப்பார்கள்?”
“குலியானா, நீ யாரையாவது காதலித்தாயா?”
“ஏதோவொன்று செய்தேன். ஆனால் அது காதல் இல்லை. அது காதலாக இருந்திருந்தால், அது இந்த வாழ்க்கையை விட மிக நீண்டதாக இருந்திருக்கும். எனக்கு என் காதலன் எவ்வளவுத் தேவைப்படுகிறானோ, அந்த அளவுக்கு நானும் அவனுக்குத் தேவைப்பட்டிருப்பேன். எனக்கும் திருமணம் நடந்தது. ஆனால், அது அந்தப் பூந்தொட்டியைப் போன்றது. அதில் என் இதயத்தின் மலர் மலரவேயில்லை.”
“ஆனால் இந்த நிலம்…” “இந்த நிலத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா?”
“நிலம் மிகவும் கொடூரமானது, குலியானா. நான் இதைக் கண்டு பயப்படவில்லை. ஆனால்-” “நீ எதைக் கண்டு பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியும். எனக்கும் கூட அந்த பயம் இருக்கிறது. ஆனால், அந்த பயத்தில் எழுந்த கோபத்தால் தான், நான் இங்கு வந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பூ மலர இந்த பூமியில் ஏன் உரிமை கொடுக்கப்படவில்லை!”
“அந்தப் பூவின் பெயர் ‘பெண்ணா”
“இந்த பூமியில் பெண் என்கிற பூவை மலர விடாதவர்களை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். இது நாகரீக காலமாக இல்லை. ஒரு பெண்ணின் உடலை அவள் அனுமதியில்லாமல் தொடக் கூடாது என்கிற நிலை வரும்போது தான் நாகரீக காலம் உருவாகும்”
“நீங்கள் சந்தித்த மிகவும் கடினமான நேரம் எது?”
“ஈரானில் நான் வெகு தொலைவிலிருந்த வரலாற்றுக் கட்டடங்களைப் பார்க்க விரும்பினேன். ஆனால் எனது ஹோட்டல் ஊழியர்கள் என்னைத் தனியாக எங்கும் செல்ல அனுமதி தர மறுத்துவிட்டனர். பகலில் கூட என்னால் அங்குத் தனியாகச் சுற்றிப் பார்க்க முடியவில்லை.”
“அப்புறம்?”
“சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அதே ஹோட்டலில் ஒரு நபர் தங்கியிருந்தார். அவருக்குச் சொந்தமாக கார் இருந்தது, அவர் ஹோட்டலில் இருக்கும் வரை தனது காரை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு சொன்னார். அவர் என்னுடன் வரவில்லை. ஆனால், அவர் என்னிடம் தனது காரைக் கொடுத்தார். ஓட்டுநரையும் அனுப்பி வைத்தார். அவரது அந்த உதவியை நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தது. ஆனால் நான் ஏன் அந்த உதவியை ஏற்க வேண்டும்?”
“ஜப்பானிலும் நீங்கள் சிரமங்களை எதிர்கொண்டீர்களா?”
“அங்கே நான் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டேன். ஒரு இரவில் ஒரு குடிகாரன் என் அறையின் கதவைத் தட்டினான். அந்த நேரத்தில் நான் அறையிலிருந்தபடியே தொலைபேசி செய்து ஹோட்டல் ஊழியர்களை அழைத்தேன். பிரான்சில் ஒருமுறை என்ன நடந்தது தெரியுமா? எங்கோ ஒரு இடத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நான் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் தூரத்தில் ஒரு மலை இருந்தது. நான் அங்குப் போக விரும்பினேன். இரண்டு பேர் வெகு நேரம் என்னைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். யாருமற்ற மலைப் பகுதிக்குப் போய் விட்டால் இவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. இந்த ரௌடிகளுக்குப் பயந்து நான் ஏன் அந்த மலைக்குப் போகாமல் இருக்க வேண்டும்? அதனால் நான் தோட்டத்திலிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினேன். கொஞ்சம் தூரம் போனதும் பலத்த மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நான் எனது ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டியதாகிவிட்டது. எல்லாம் தவறு. மனிதன் தன்னை மிகவும் நாகரீகமாகவும், முன்னேறியவனாகவும் கருதத் தொடங்கியிருப்பது மிகவும் தவறு என்று எனக்குத் தோன்றியது.”
“உன் வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறாய், குலியானா?”
“நான் சிறிய சிறிய பயணக்கட்டுரைகளை எழுதுகிறேன். அவற்றை வெளியிடுவதற்காக எனது நாட்டிற்கு அனுப்பி வைக்கிறேன். அதில் எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். மொழிபெயர்ப்புப் பணி செய்தும் சம்பாதிக்கிறேன். எனக்கு பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். பிரெஞ்சு புத்தகங்களை என் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்கிறேன். திரும்பிச் சென்று பெரிய பயணக் கட்டுரை எழுதுவேன். இப்போதெல்லாம் நான் தூங்கும்போது கூட ஒரு பாடல் என் மனத்துக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால், தூங்கி எழும்போது அந்தப் பாடல் காணாமல் போய் விடுகிறது.”
“சரி குலியானா மற்றதெல்லாம் விட்டுவிட்டு அந்தப் பாடலைப் பற்றிச் சொல். நான் பாடச் சொல்லவில்லை. பாடலைப் பற்றி சொல் என்கிறேன்.”
“அதைப் பற்றித் தான் இன்னும் தெரியவில்லை. எங்கிருந்து அந்தப் பாடல் மலர்கிறது என்பதை; தான் தேடுகிறேன். கருத்தே இல்லாமல் இரண்டு வரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர வேறு எதுவுமில்லை. கருத்தே இல்லாமல் பாடலை எவ்வாறு உருவாக்குவது?” குலியானா சொல்லிவிட்டு ஓர் உடைந்த பாடலைப் போல என்னைப் பார்த்தாள். பின்னர் குலியானா பாடலின் இரண்டு வரிகளைப் பாடினாள்.”
“இன்று வானத்தின் மாயாஜாலத்தை உடைத்தவர் யார்? இன்று ஒரு நட்சத்திரக் கூட்டத்தை அவிழ்த்து விட்டது யார்?
அவற்றை சாவிக் கொத்து போல் கட்டி, என் அறையின் சாவிகளாகத் தொங்கவிட்டது யார்?”
குலியானா தன் இடுப்பைச் சுட்டிக்காட்டி என்னிடம், – “சில சமயங்களில் நட்சத்திரங்கள் இங்கே சாவிக் கொத்து போல் கட்டப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.” என்றாள்.
குலியானாவின் முகத்தைப் பார்த்தேன். வெள்ளி வளையங்களில் கோர்க்கப்பட்ட பீரோ சாவிக்கொத்தை இடுப்பில் சொருகிக் கொள்ள அவள் மறுத்துவிட்டாள். அதற்கு பதிலாக தன் இடுப்பில் நட்சத்திர சாவிக் கொத்தைச் சொருகிக் கொள்ள விரும்புகிறாள். குலியானாவின் முகத்தைப் பார்த்தபடி, நட்சத்திர சாவியால் கதவுகளைத் திறக்கும் வீடுகள் இந்த பூமியில் எப்போது கட்டப்படும் என்று யோசித்தேன்.
“என்ன யோசிக்கிறாய்?”
“உங்கள் நாட்டிலும் பெண்கள் தங்கள் இடுப்பில் சாவிக் கொத்தைச் சொருகிக் கொள்வார்களா?”
“எங்கள் அம்மாக்களும் பாட்டிகளும் இடுப்பில் சாவியைச் சொருகிக் கொள்வார்கள்.”
“சாவிகள் வீட்டை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. வீடு ஒரு பெண்ணின் பழமையான கனவுகளை நினைவுபடுத்துகிறது.”
“இந்தக் கனவைப் பின்தொடர்ந்து நான் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று பார், இனி நான் இந்தக் கனவை என் பாடல்களிடம் ஒப்படைத்து விடுவேன்.”
“பூமியின் தலையில் உங்களுக்குத் தர வேண்டிய கடன் சுமை இன்னும் அதிகரிக்கப் போகிறது.”
கடன் பற்றி கேட்டதும் குலியானா சிரித்தாள். காகிதங்களில் எழுதிக் கொடுத்த கடன் ஆதாரங்கள் அனைத்தும் பொய்யாகி விட்டதைப் பார்க்கும் ஒரு கடனாளியைப் போல் அவளுடைய சிரிப்பு இருந்தது.
குலியானாவின் முகத்தைப் பார்க்கும்போது, காவல் நிலையத்தில் எந்தக் காவலரேனும் அவளின் தோற்றத்தைத் தன் காகிதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால், அவர் இப்படித்தான் எழுதுவார்.
பெயர் குலியானா சாயேனோபியா.
தந்தை பெயர் நிகோலியன் சாயேனோபியா.
பிறந்த நகரம்: மாசிடோனியா.
உயரம்: ஐந்தடி மூன்று அங்குலம்.
முடி நிறம்: பழுப்பு.
கண் நிறம்: சாம்பல்.
அடையாளம்: கீழ் உதட்டில் ஒரு மச்சம் மற்றும் இடது புருவத்தில் ஒரு சிறிய வடு.
குலியானாவின் வார்த்தைகளைக் கேட்கும் போது, குலியானாவைப் பற்றி காதல் மனம் ததும்பும் ஒருவன் தன் வாழ்க்கைக் காதிதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால், கீழ்க்கண்டவாறு தான் எழுதுவான் என்று தோன்றியது.
பெயர் : பூவின் மணம் போன்ற பெண்.
தந்தையின் பெயர்: மனிதனின் ஒரு கனவு.
பிறந்த நகரம்: பூமியின் மிக உயர்ந்த நிலம்.
உயரம்: அவனது நெற்றி நட்சத்திரங்களைத் தொடுகிறது.
முடி நிறம்: பூமியின் நிறம்.
கண் நிறம்: வானத்தின் நிறம்.
அடையாளம்: உதடுகளில் வாழ்க்கையின் தாகம். உடலின் ஒவ்வொரு முடிச்சிலும் கனவுகளின் மலர்ச்சி.
வியப்பான செய்தி என்னவென்றால் வாழ்க்கை குலியானாவைப் பெற்றெடுத்திருக்கிறது. ஆனால் பெற்றெடுத்த அந்தச் செய்தியைக் கேட்க மறந்துவிட்டது. ஆனால் எனக்கு வியப்பேதுமில்லை. ஏனென்றால் இது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் பழைய பழக்கம் என்பதை நான் அறிவேன். நான் சிரித்துக் கொண்டே குலியானாவிடம் சொன்னேன் – “எங்கள் நாட்டில் வல்லாரை என்று ஒரு மூலிகை இருக்கிறது. நம் பழைய புத்தகங்களில் அதை அரைத்துக் குடித்து வந்தால் நினைவாற்றல் பெருகும் என்று பழைய புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. அந்த வல்லாரையை அரைத்து வாழ்க்கைக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
குலியானா சிரித்துக்கொண்டே – “யாரேனும் ஒரு அழகான பாடலை எழுதும்போது அல்லது எதையாவது மிக விருப்பத்தோடு எழுதும்போது, அவர் காட்டிலிருந்து வல்லாரை இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் பொருள். வாழ்க்கைக்கு அதை நாம் அரைத்துக் கொடுக்கும் நாளில் அதற்கு அதை மறக்கும் பழக்கம் இல்லாமல் போய்விடும்” என்றாள்.
வல்லாரை பற்றிய பேச்சை விட்டுவிட்டு குலியானா அன்று கிளம்பிப் போனாள். ஒரு அழகான பாடலைப் படிக்கும் போதெல்லாம், அந்தப் பேச்சு நினைவுக்கு வந்து விடுகிறது. நாம் அனைவருமே காட்டிலிருந்து வல்லாரை இலைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். என்றாவது ஒரு நாள் நாம் வாழ்க்கைக்கு அதை அரைத்துக் கொடுப்போம். அது நம்மை நினைவில் வைத்திருக்கும்.
ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. குலியானாவிடமிருந்து ஒரு கடிதம் கூட வரவில்லை. மாதங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகும். இனி குலியானாவின் கடிதம் ஒருபோதும் வராது. ஏனெனில், இரு நாட்டு எல்லையில் உள்ள வயல்வெளியில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை சில ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்ததாக இன்றைய நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. அந்தப் பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர் இறந்து விட்டார். அவரது கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டன. பெண்ணின் உயரம் ஐந்தடி மூன்று அங்குலம். அவரது முடி நிறம் பழுப்பு மற்றும் கண் நிறம் சாம்பல். அவளது கீழ் உதட்டில் ஒரு மச்சம் மற்றும் இடது புருவத்தில் ஒரு சிறிய வடு உள்ளது. இது நாளிதழ் செய்தி இல்லை, குலியானாவின் கடிதம் என்று தான் நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் வீட்டிலிருந்து செல்லும் போது அவள் வாழ்க்கைக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறாள். அந்தக் கடிதம் வாயிலாக சில கேள்விகள் கேட்டிருக்கிறாள். பெண் எனும் மலர் இந்த பூமிக்கு வர ஏன் உரிமையில்லை. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் எந்த ஆணும் அவளைத் தொடக் கூடாது என்கிற அந்த நாகரீக யுகம் எப்போது வரும் என்று இரண்டாவது கேள்வி கேட்டிருக்கிறாள். மூன்றாவது கேள்வி என்னவென்றால், இடுப்பில் நட்சத்திரக் கொத்தைச் சாவிக் கொத்தாகச் சொருகி வைத்திருக்க, அதைக் கொண்டு திறப்பதற்கான அந்த வீட்டின் கதவு எங்கே?
Leave a Reply