85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ்
எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ஆசான் இன்பதாஸ் அவர்கள.
புதிய தென்றலுக்காக மூலச்சலில் உள்ள சிலம்ப பயிற்சி களத்தில் அவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது சிலம்பாட்ட அனுபவங்களை புதிய தென்றலுக்காக பகிர்ந்து கொண்டார். நான் 1963- ஆம் ஆண்டு முதல் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன்.
நான் சிறுவயதில் எம்ஜிஆர் நடித்த தாயை காத்த தனயன் படம் பார்த்தேன் அதில் எம்.ஜி.ஆர் சிலம்பம் விளையாடும் காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது. இதனால் சிறு வயதிலேயே சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பல ஆசான்களிடம் சென்றேன்.அதில் பலர் நீ மிகவும் சிறுவனாக இருக்கிறாய் உனக்கு எதுக்கு சிலம்பம் என்று கேட்டு என்னை திருப்பி அனுப்பி விட்டனர். ஆனாலும் நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.
அந்த காலத்தில் பிரபலமான ஆசான்கள் வடசேரி குன்று விளையை சேர்ந்த மாணிக்கம் ஆசான், தாமரை குளம் குடல் ஒட்டி செல்லையா ஆசான் ஆகியோர் எனக்கு தெரிந்ததில் மிகவும் பிரபலமானவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் திரு.மாணிக்கம் ஆசான் அவர்களின் சிஷ்யன் குலசேகரம் புதூர் அருகே உள்ள கொத்தன் குளத்தை சேர்ந்த முத்தையா ஆசான் என்பவர் என்னை சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்தார்.
அவர் எனக்கு அடிமுறை, சீன அடி, கம்பு விளையாட்டு ஆகியவற்றை நல்ல முறையில் கற்று தந்தார் அதன் மூலம் பல ஊர்களில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து விளையாடியுள்ளேன். தொடர்ந்து சிலம்பம் பயிற்சி செய்து வந்தேன். பின்னர் தடிக்காரன் கோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசானின் பிள்ளைகளுக்கு சிலம்பம் விளையாட்டுகளை கற்றுக் கொடுக்கும்படி எனது ஆசான் என்னிடம் கேட்டுக் கொண்டார். அது முதல் நான் ஆசனாக இருந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன்.
பின்னர் ஈஞ்சக்கோடு கொச்சுமணி ஆசான் அவர்களிடம் இணைந்து அவரது சார்பாக பல இடங்களில் சிலம்பம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் சிலம்பம் விளையாடி உள்ளேன். பின்னர் கொச்சுமணி ஆசான் அவர்களின் சிஷ்யன் சின்னையா ஆசான் அவர்களிடம் கைப்போர் , சுவடுமுறை, மற்றும் அடிமுறைகளை கற்றேன். பின்னர் வடசேரியில் உள்ள சண்முகம் ஆசான் அவர்களிடம் நெடுங்கம்பு அடிமுறை, நெடுங்கம்பு வீச்சு, ஆகியவற்றை கற்றுக் கொண்டேன் . நான் பார்த்தவரையில் நெடுங்கம்பு முறையில் சண்முகம் ஆசான் மிகவும் தேர்ந்தவர் என்றால் மிகையல்ல. ஆசான் சிஷ்யனாக தொடங்கிய எங்களது பயணம் பின்னர் நண்பர்களை போல சுமார் 40 ஆண்டு காலம் தொடர்ந்தது. பின்னர் அவர் காலமாகி விட்டார். அவரது நினைவு இப்போதும் என்னை வாட்டிக் கொண்டே இருக்கிறது.
மேலும் வடக்கன் வழிச்சுவடு ஒற்றைச்சுவடு, பிரிவு சுவடு, கை போர், சீன அடிமுறை, குறுந்தடி, கத்தி முறை, ஒற்றை கத்தி, இரட்டை கத்தி, கண்டன் கோடாரி, நெடுங்கம்பு முறை, நெடுங்கம்பு வீச்சு மான் கொம்பு முறை எட்டு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, சுருட்டு வாள் வீச்சு , மல்யுத்தம், குஸ்தி ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளேன்.
என்னிடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அந்த காலத்தில் சிலம்பம் போட்டி என்பது ஒரு ஆசான் இன்னொரு ஆசனுடன் நேரடியாக மோதுவது ஆகும் அது மிகவும் அபாயகரமானதாக இருந்தது. காரணம் தப்பினால் மரணம் என்பது போல கொஞ்சம் தவறினாலும் அடிபட்டு பலத்த காயம் ஏற்படவோ, உயிரிழப்பு ஏற்படவோ வாய்ப்பு உண்டு. இன்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
அந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றுர் என்ற பகுதியில் நடைபெற்ற 9 ஆசான்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பலர் சுற்றி நின்று பிரம்பால் தாக்கும் போது நான் தன்னந்தனியாக படை வீச்சு என்ற முறையின் மூலம் அவற்றை எல்லாம் எதிர்த்து அடித்து ஜெயித்தேன். இந்த போட்டியில் நடுவராக இருந்த மூலச்சல் டாக்டர்.த. இராஜேந்திரன் அவர்கள் எனது தனித்திறமையை பாராட்டி சிறப்பு பரிசு அளித்தார். இது எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சியால் போட்டி என்ற பெயரில் தொடுமுறை என்ற அளவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பழைய கால உண்மையான சிலம்ப முறைகள் தற்போது குறைந்து வருகின்றன.
எனது இளமை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் கோவில், சவேரியார் கோயில், சுசீந்திரம், கண்டன் விளை, பணகுடி, எட்டாமடை, மூலச்சல், தஞ்சாவூர், இட்ட மொழி, பெருவிளை, பூதப்பாண்டி, திட்டுவிளை, அழகிய பாண்டியபுரம், கடுக்கரை பாலப்பள்ளம், தடிக்காரன் கோணம், பால்குளம், காப்புக்காடு போன்ற பல பகுதிகளில் உள்ள கோயில்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சிலம்பம் விளையாடி உள்ளேன்.
இப்போது 85 வயதாகி விட்டது. எனக்கு குழந்தைகள் இல்லை. நானும் எனது மனைவியும் தனியாக வாழ்ந்து வருகிறோம். அரசு வழங்கும் முதியோர் தொகையான ரூபாய் 1200 மற்றும் அவ்வப்போது சிலம்பம் பயிற்சி அளிப்பதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்றார் அவர். அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.
அகழ்வாராய்ச்சி செய்தாலும் மீட்டெடுக்க முடியாத மரபு வழி பாரம்பரிய கலைகளான நாட்டுப்புற கலைகளை பயின்று பழங்கலைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் அற்புதமான பணியை செய்யும் ஆசான்களில் பலர் இறுதி காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி ஊராலும், உறவுகளாலும் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக உள்ளனர். ஆகவே பழங்கலைகளை தமது வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஆசான்கள் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோருக்கு கூடுதல் நலத்திட்டங்களை வழங்க அரசு முன்வர வேண்டும்.
பேட்டி
சிலம்ப ஆசான் இன்பதாஸ்
பேட்டிகண்டவர்
G. ஜெயகர்ணன், இணை ஆசிரியர்
Leave a Reply