மூலரோக நிவாரணி “துத்தி”

மூலரோக நிவாரணி “துத்தி”

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.

                இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.

                துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது.

தாவரவியல் பெயர் :

                    Abutilon indicum

ஆங்கிலப்பெயர் :

Country mallow, Indian abutilon, moon flower

வேறுபெயர்கள் :

           அதிபலா, கக்கடி, கிச்சிடி

அடங்கியுள்ள தாவரவேதிப்பொருள்கள்

                துத்தியில் அதிக அளவில் Essential oil உள்ளது. Asparagines, endemon, caryophyllone, endesmol, farneson, cineole, pinene போன்ற தாவர வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளது.

துத்தியின் மருத்துவபயன்கள்

மூலநோய்க்கு

துத்தி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கழுவி அத்துடன் 3 சிறிய உள்ளி, அரை கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து உருட்டி தினம் ஆகாரத்திற்கு முன் காலையில் மோருடன் குடிக்க வேண்டும். இப்படி 40 நாட்கள் செய்துவர உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் குணமாகும். உடல்சூடு தணியும்.

வெளிமூல நோய்க்கு

                ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலையை வதக்கி துணியில் கட்டி லேசான சூட்டில் வெளிமூலம், ஆசனவாயில் உண்டாகும் கட்டி, புண் இவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கலாம். மேலும் வெளிமூலத்திற்கு வைத்து கட்டலாம்.

கட்டி உடைப்பதற்கு

                துத்தி இலைசாறுடன் பச்சரிசி மாவு கலந்து களி கிண்டி, சிறு சூட்டுடன் கட்டிகளுக்கு வைத்து கட்டிவர கட்டி பழுத்து உடையும்.

புண் மற்றம் அடிபட்ட காயத்திற்கு

                துத்தி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து வெளிப்புறமாக பூச புண் ஆறும். மேலும் அடிப்பட்ட வீக்கம், காயம் மாறும்.

உடல்வலி மற்றும் வாதவலிகளுக்கு துத்தி இலைகளை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். சூட்டுடன் இத்தண்ணீரில் ஒரு துணியை இட்டு பிழிந்து ஒற்றடம் கொடுக்க வேண்டும். இது உடம்புவலி மற்றும் வாதவலிகளுக்கு சிறந்தது.

ஆண்மைகோளாறுக்கு

      துத்தி பூவை உலர்த்தி பொடித்து, அரை கரண்டி பொடியுடன் காச்சின பால், கற்கண்டு சேர்த்து அருந்தி வர ஆண்மை பெருக்கம் உண்டாகும். தேகம் குளிரும்.

சிறுநீரக நோய்களுக்கு

                துத்திவேர் 10 கிராம் அளவிற்கு எடுத்து சதைத்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளராக வற்ற வைத்து காலை, மாலை குடிக்க வேண்டும். இது சிறுநீரககல், சிறுநீர்பை தாபிதம் இவற்றிற்கு சிறந்தது.

சிறுநீர் எரிச்சல் மாறுவதற்கு

                துத்தி இலை ஒரு கைபிடி அளவு, சீரகம் அரைகரண்டி இவற்றை சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து அல்லது மோரில் கலந்து வடிகட்டி தினம் இருவேளை குடித்து வர சிறுநீர் எரிச்சல் மாறும். மேலும் வெள்ளைபடுதல், உடல்சூடு இவற்றிற்கும் சிறந்தது.

தசைபலகீனம் மாறுவதற்கு

                துத்திவேர் சாறு  10 மில்லி அளவு தினம் குடித்து வர வேண்டும் அல்லது துத்திவேரை பொடித்து கால்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்புநோய்கள், வாதநோய்கள் மாறும். மேலும் தசைபலகீனத்தை நீக்கி, தசைவலுவை உண்டாக்கும்.

இடுப்பு வலி மாறுவதற்கு

                துத்தி இலையை துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் இட்டு சூடாக்கி ஒற்றடம் இட்டு பின்னர் ஒற்றடம் இட்ட இலையை வலி உள்ள இடத்தில் வைத்து இடுப்பை சுற்றி கட்டி விடவும். இவ்வாறு செய்துவர இடுப்புவலி மாறும்.

பல் மற்றும் ஈறுநோய்கள் மாறுவதற்கு

                துத்தி இலையை தண்ணீரில் இட்டு காய்த்து, கசாயமாக்கி வடிகட்டி கொள்ள வேண்டும். லேசான சூட்டில் இந்நீரால் வாய் கொப்பளித்து வர பல் மற்றும் ஈறுநோய்கள் மாறும். ஈறு பலப்படும்.

பிறநோய்களுக்கு

                துத்தி இலை மற்றும் வேரை சுமார் 10 கிராம் அளவு எடுத்து சதைத்து கசாயமிட்டு 100 மில்லி வீதம் தினம் இருவேளை குடிக்கலாம். இது பித்தப்பைகள், இதய படபடப்பு, சளி, இருமல்,  காமாலை இவற்றிற்கு சிறந்தது.

கவனிக்க வேண்டியவைகள்

  1. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
  2. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
  3. வேறு பக்கவிளைவுகள் எதுவுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *