– வழக்கறிஞர். பி. விஜயகுமார்
குழந்தை சாட்சியம் (Child Witness)
நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது.
பெரும்பாலும் சிறார் பாலியல் வழக்குகளில் தான் பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வருகின்றனர். ஆண் குழந்தைகளும் வருகின்றனர். ஆனால் அது எண்ணிக்கையில் மிக்க குறைவாக இருக்கும் பெண் பிள்ளைகள் தான் அதிகமாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் பெண் குழந்தைகளை காவல்துறையும், நீதிமன்றமும் மிகவும் கண்ணியமாக நடத்த வெண்டுமென்று சட்டம் சொல்லுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை விசாரிக்கும் அதிகாரி ஒரு பெண் இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டுமென்றும் குழந்தையை விசாரிக்கும் போது சீருடையில் இருக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட குழந்தையை அவர்கள் தங்கும் இடத்திற்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டுமென்றும் சட்டம் சொல்லுகிறது. சிறார்கள் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட மாட்டார்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தை நீதிபதி முன்பாக வாக்குமூலம் கொடுக்கும் போதும், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதும் கௌரவமாக நடத்தப்படுவார்கள். குழந்தை நலன் கருதி எந்த ஆவணத்திலும் குழந்தையின் பெயர் துலங்காது. அது மறைக்கப்பட்டிருக்கும்.
குழந்தை நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வரும்போது நீதிபதிகள் குழந்தை சாட்சிச் சொல்லத்தக்கவை தானா என முதலில் சோதிப்பர். அதாவது சாட்சி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பாக நீதிபதியால் குழந்தையிடம் ஓரிரு கேள்விகள் கேட்கப்படும். அதாவது நீ எங்கு வந்திருக்கிறாய் என்ற கேள்விக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறேன் என பதில் சொல்லும். அடுத்ததாக நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்ற கேள்வி வைக்கப்படும். அதற்கு குழந்தை சாட்சி சொல்ல வந்திருக்கிறேன் என பதில் அளிக்கும். அடுத்ததாக இங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்பார் நீதிபதி. அதற்கு குழந்தை ஜட்ஜ், வக்கீல்கள் இருக்கிறார்கள் என பதில் சொல்லும். இன்னும் இதுபோன்ற சில கேள்விகள் கேட்கப்பட்டு குழந்தைகள் ஓரளவு சரியான பதில் சொல்லும் பட்சத்தில் நீதிபதி குழந்தையை சாட்சி கூண்டில் ஏற்றி வழக்கை விசாரிக்க ஆரம்பிப்பார். இந்த விசாரணை 3 முதல் 18 வயதுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நடத்தப்படும். 3 முதல் 7 வயது குழந்தைகள் சரியான பதில் சொல்லத் தடுமாறும். இருப்பினும் நீதிமன்றம் அவர்களை சாட்சி சொல்ல அனுமதித்து விடும்.
இந்த குழந்தைகள் சாட்சிச் சொல்லும் போது நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டிருக்கும். நீதிமன்றத்தின் நீதிபதி, குழந்தை, அரசு வக்கீல், குற்றவாளி வக்கீல் என இவர்கள் மட்டுமே இருப்பர். குற்றவாளி, குழந்தைகளுக்கு தெரியாத வண்ணம் குற்றவாளி கூண்டு முழுவதும் திரைச் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மறைக்கப்படுவதற்குக் காரணம் என்னவென்றால் குழந்தையை குற்றவாளி பார்க்க நேரிட்டால் குழந்தைக்கு சில சமயம் சில நெருடல்கள் ஏற்படலாம். இதனால்தான் இந்தத் திரைச்சீலை மறைப்பு.
குழந்தை சாட்சியம் அளிக்கும் போது குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது நெருங்கிய உறவினர் எவரேனும் நீதிமன்றத்திற்குள் குழந்தைக்கு பக்கபலமாக இருக்க அனுமதிக்கப்படுவர். குற்றவாளித் தரப்பு வக்கீலிடமும் நீதிமன்றம் சாட்சியை மிரட்டும் தொணியில் கேள்வி கேட்கக் கூடாது என வலியுறுத்தும். குழந்தைகள் பாதிக்கப்படும் வழக்கில் நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளும். ஆதலால் குழந்தைகள் மீது வக்கிரப்புத்தி கொண்டுள்ள ஆண்கள் அவர்கள் மீது பாலியல் தீண்டல் செய்வதை மொத்தமாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் 20 வருடம் 30 வருடம் ஜெயில்தான்.
Leave a Reply