– முனைவர் மோகனா, பழனி
நம் தாயகம் பால்வழி மண்டலம்
நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன். உங்கள் ஊரில் வாய்ப்பு இருக்கிறதா. இல்லை எனில், மின் ஒளி இல்லாத ஓர் இடத்துக்கு வந்து பாருங்கள். தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அது தானுங்க நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இப்ப மழை பெய்து இருப்பதால், வானம் இன்னும் கூடுதலாக, பளிச்சென்று தெரியும். இதில் வைரத்தைக் கொட்டிப் பரப்பியது போல எக்கச் சக்கமான விண்மீன்கள் உள்ளன.
கலீலியோவின் கண்டுபிடிப்பு
நமது பால்வழி மண்டலம் என்பது 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன்களின் வட்டைக் கொண்ட ஒரு சுழல் விண்மீன் தொகுதி (Spiral Galaxy) ஆகும். இது இரண்டு பெரிய , ஸ்கூட்டம்-சென்டாரஸ் மற்றும் பெர்சியஸ் கைகள் மற்றும் இரண்டு சிறிய கைகள் எனப்படும், நார்மா மற்றும் தனுசு. தனுசு மற்றும் பெர்சியஸ் கைகளுக்கு இடையில் உள்ள சிறிய கையான ஓரியன் கையில்தான் நமது சூரிய மண்டலம் அமைந்துள்ளது. இதனை இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி 1610-ஆம் ஆண்டு ஒரு தொலைநோக்கி மூலம் கண்டறிந்தார். பால்வீதியை ஆய்வு செய்தார். மேலும் அது பல மங்கலான விண்மீன்களால் ஆனது என்பதைக் கண்டுபிடித்தார். இப்போது பால்வழி மண்டலம்பற்றிபார்ப்போமா ?
இங்கே சுமார் 100-400 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ ஆடாமல் அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் நமக்குத் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் வாழும் பால்வழி மண்டலத்தின் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி? எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்து கொள்வது போன்றுதான்.
நிற்பதுவே ..நகர்வதுவே …பறப்பதுவே
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பது தெரியும். அதான் பள்ளிப் பாட புத்தகத்தில் போட்டிருக்கிறதே என்கிறீர்களா? ஆமாம். ஆனால் பூமி சுற்றிவரும் சூரியனும் சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது. யாரை.. அதான்பா, அதன் தாய் வீடான பால்வழி மண்டலத்தை..சூரியன் சுற்றுகிறது என்ற விஷயம் நிறைய பேருக்குத் தெரியாது. இதைப் பற்றி, நமது பள்ளி பாடத்திட்டத்தில் இதனைப்பற்றி மூச்சுகூட விடவில்லை. ஆனால் நம் சூரிய குடும்பமும் இடைவிடாமல் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை சூரிய குடும்பம் ஒரு முறை சுற்றி முடிக்க 240 கோடி ஆண்டுகள் ஆகின்றன .இதுவரை சூரிய குடும்பம் தனது தாய்வீடான் பால்வழி மண்டலத்தை 20 சுற்றுகள் சுற்றி பயணம் செய்துள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா., என்றால் அதுதான் இல்லை. அதுவும் ஓயாமல் ஓடி ஓடி நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா?
பிரம்மாண்டமான ராட்சத குடைராட்டினம் போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும். எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்திலும், பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 583. கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே..வெகு வேகமாய் பறந்து கொண்டே இருக்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கு இடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 100-கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் ஒவ்வொருவரும் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு சுமார் 583 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நண்பா… என்ன ஆச்சரியமாக இருக்கிறதா… இதுதான் உண்மை.
அண்ட ஆண்டு
பால்வெளி விண்மீனைச் சுற்றி சூரியனின் சராசரி வேகம் வினாடிக்கு 230 கிலோமீட்டர் ஆகும். இது ஒளியின் வேகத்தில் 1/1300 ஆகும். சூரியன் பால்வீதியின் மையத்தை தோராயமாக வட்டப்பாதையில் சுற்றி வருகிறது, ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டம் galactic ஆண்டு/அண்ட (Cosmic) ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் சுற்றுப்பாதை பால்வழி மண்டலத்திலிருந்து, சுமார் 60 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. சூரியன் பால்வழி மண்டலத்தின் வழியாக நகரும் போது, அது சுமார் 60 மில்லியன் வருட காலத்துடன், வட்டு வழியாக மேலும் கீழும் ஆடிக்கொண்டே நகருவது போல தோன்றுகிறது.
பால்வழி மண்டலத்தின்/ கேலக்ஸியின் வேகம்
வேகம் ஒரு மணி நேரத்திற்கு 2.1 மில்லியன் கிமீ.,பயணித்து நம்மை வியக்க வைக்கிறது! சிம்மம்(77.5 ஒளியாண்டுகள்) மற்றும் கன்னியின் (250 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்களால் வரையறுக்கப்பட்ட விண்வெளியின் திசையில் நாம் தோராயமாக நகர்கிறோம்.
பால்வீதியில் வேகமான நகரும் பொருள்
பால்வீதியில் வேகமான நகரும் விண்மீன்கள் உள்ளன. ஆனால் அவற்றின் சூழல்கள் சற்று வித்தியாசமானவை. விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையைச் சுற்றி வரும் விண்மீன்கள் நம்பமுடியாத வேகத்தை எட்டும்; அதன் நீண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அதிவேகமாக வினாடிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
சொகுசான பயணம்
இந்த குடைராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி… எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடிக் கொண்டே நகர்ந்து செல்கின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது..? வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 120 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 828,000 கி.மீ.( ஒளியின் வேகத்தில் 1/1300.) தூரத்தை கடக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை…தெரிகிறதா ..? எவ்வளவு சொகுசான பயணம் இது!! இது எப்படி?பூமி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 107,000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. நமது சூரியக் குடும்பம் பால்வழி மண்டலத்தைச் சுற்றி மணிக்கு சுமார் 700,000 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை மணிக்கு 828,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இருப்பினும், பால்வீதியைச் சுற்றி ஒரு சுற்றை முடிக்க நமது சூரிய குடும்பம் சுமார் 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. ஏனெனில், பால்வீதியானது சுமார் 100,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட ஒரு பரந்த விண்வெளி பரப்பு ஆகும்.
எல்லையில்லா தொடர் பயணம்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம்தான் நமது சூரிய மண்டலத்தின் எல்லை எனக் கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினோம்.. ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ இன்னும் இன்னும் மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒரு கால் நமது அண்டம் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்… இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க யாராவது சொல்வார்களா? அது முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி…தொடரும் தொடரும் தொடர்ந்த முடிவில்லா பயணம் இது..! நேற்றும் போல் இன்று இல்லை.. இது உண்மையா? உண்மைதாங்க.. அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! மணிக்கு சுமார் 828,000 கி.மீ வேகத்தில் நீங்கள் அத்தனை தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் ? எப்படி நீர் நிறைந்த புவி மக்களுடன், மரம் செடி கொடிகளுடன், எந்த வித ஆதாரமும் இல்லாத பூமிப்பந்தில் தலைகீழாய் நிற்கும்போது கூட கீழே விழாமல், கடல் நீர் கீழே கொட்டாமல். இது இப்படி..எப்படி..? எல்லாம் பூமியின் ஈர்ப்பு விசைதான் இதன் ரகசியம். அதற்கு மேலே.இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்…பயணம்..பயணம், பயணம்.. நாம் பயணத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். முடிவில்லா பயணம்,
Leave a Reply