– க. இராசன் பிரசாத்
செயற்கை மேல் மோகம் கொண்டு
இயற்கைதனை அழித்ததனால்
தயக்கந்தான் எதுவுமின்றி
இயற்கைதான் வெகுண்டெழுந்து
தண்டனைதான் தந்ததன்றோ- முன்பு
கண்டறியாத நோய்வடிவில்
கண்ணறியாக் கிருமியாலே- மக்கள்
எண்ணற்றோர் மாண்டனரே
சீனாவில் உருவாகிச் சிலகாலம் வளர்ந்ததுவே
தானாக இடம்மாறித் தரணியெலாம் சென்றதுவே
ஏனென்று கேட்குமுன்னே எட்டடிதான் பாய்ந்ததுவே
வானமே எல்லையென்று வலம் வந்து வருத்தியதே
கொரோனா என்றதுமே குலைநடுங்கச் செய்ததுவே
வராதீர் அருகினிலே என்றுரைக்க வைத்ததுவே
ஒரேயொரு உறவானாலும் தூரநிற்கச் செய்ததுவே
துரோகிகள் பலபேர்க்குத் துணையாக நின்றதுவே
அன்னைக்கு நோய்தாக்கி சிகிச்சைக்குச் சென்றதால்
தன்னலமாய் யோசித்த தந்தையெனும் தறுதலையால்
அன்னையொடு தானுமொரு அநாதையாய் ஆகிவிட்ட
சின்னஞ்சிறு மலர்கள் எத்தனை எத்தனையோ?
அம்முல்லை மலர்கள் செய்திட்ட தவறென்ன?
விம்மியழும் நெஞ்சுடன் வாழுகின்ற நிலையென்ன?
அம்மாவும் ஆயாவும் மட்டுமே சொந்தமென
நம்பிவாழும் நிலைகண்டு துடிக்காத நெஞ்சுண்டோ?
வாடிநின்ற முல்லைக்குத் தேர்தந்தான் பாரியன்று
கூடிவாழ உறவின்றித் தவிக்கின்ற முல்லைதனை
வாடாமல் காத்திடவே தேர்தருவார் யாரிங்கே?
நாடிவந்து உதவுபவர் இருந்தாலே கூறிடுவீர்.
Leave a Reply