மொட்டைக் கிறுக்கி

மொட்டைக் கிறுக்கி

  • By Magazine
  • |

குமரி உத்ரா

மொட்டைக் கிறுக்கியை என் சின்ன வயதில் பள்ளி செல்லும்  சமயங்களில்  பார்த்திருக்கிறேன்.

பல நேரங்களில் என் வீட்டிலும் அவளை கவனித்திருக்கிறேன். மூதாட்டியான அந்த உருவமும்  குட்டையாக வெட்டப்பட்டு  முட்கள் போல  விறைத்து நிற்கும் சாம்பலும் வெள்ளையும் கலந்த முடிகளும்… கருப்பு  நிற பற்களும்..  சின்ன இடுங்கிய பழுப்பு நிறக் கண்களும்.. இடுப்பில் கட்டி இருக்கும் லுங்கியும் மேலே அணிந்திருக்கும் சட்டையும் பெரிய பெரிய பாசிமணிகளால் அவள் போட்டிருக்கும் மாலைகளும்.. யானையின்  கால்கள் போல் தூண் போன்ற கால்களும்    யாரையும் அலட்சியம் செய்யாமல்  நிமிர்ந்த நடையும்…  காற்றுடன் பேசிக்கொண்டே நடக்கும்…, அவளை கம்பீரமாகவே காட்டும். பள்ளி விட்டு வரும்போது மாணவர்கள் அவளைத் தொடர்ந்து கூச்சலிட்டு வருவதும்… “ஏய் மொட்டக் கிறுக்கி “ என்று சத்தமாக அழைப்பதும்… அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

பள்ளிக்கூடத்தின் பக்கத்திலே உள்ள வேப்ப மர நிழலில் சில நேரம் மஞ்சாடி முத்துக்களையும் எங்கேயோ பறித்த குன்னி முத்துக்களையும்  குவித்து வைத்து ஏதோ பேசி கொண்டிருப்பாள்.சில நேரம் அடிக்கும் காற்றில் அசந்து தூங்குவாள்.

அவள் தூங்கும் சமயமாக பார்த்து சிறிதும் பெரிதுமான தகர டப்பாக்களை கயிற்றில் கோர்த்து  அவள் காலிலே கட்டி விடுவார்கள் சில குறும்புக்கார  சிறுவர்கள்.

அவள் தூங்கி முடித்து எழும்பி நடக்கும் போது  தகர டப்பாக்கள் பெரும் சத்தத்தோடு பின் தொடர்ந்து வர அவள் கலவரமாகி வேகமாக நடப்பதை பார்த்து.. விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அவளைப் பார்த்து எனக்கு பரிதாபமாக இருக்கும் அவள் எனக்கு ஒரு விதத்தில் பிடித்தவள். ஊரில் உள்ள வீடுகளுக்கு தினமும் காலை  பன்னிரெண்டு மணிக்கு சரியாக வந்து விடுவாள்.

கையில் ஒரு அலுமினிய தட்டும் தோளில் தொங்கும் இரண்டு துணி மூட்டைகளும்.., பக்கத்தில் தோளோடு சேர்த்து கயிற்றில் கட்டிய அலுமினிய டம்ளர் சகிதம் வந்து விடுவாள்.

 யாரும் பிச்சையிடும் வரை அந்த இடத்தில் நிலையாய் நின்று இருப்பாள்… ஏதும் வேலையாக அவளை கவனிக்காது இருந்தால் அமைதியாக நின்று கொண்டிருப்பாள்.

மொட்டை கிறுக்கிவந்திருக்கா…,  யாராவது குரல் கொடுக்க ஒவ்வொரு வீட்டிலும்  அம்மா தட்டு நிறைய சோற்றில் கொஞ்சம் குழம்பு விட்டு வந்து அவள் அலுமினிய பாத்திரத்தில் தட்டுவார்கள்.

அம்மா சம்பா சோறு தான் போடுவாள்… ஆனால் அவள் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி வந்த ரேஷன் அரிசி சோறுகளோடு, பெரும்பாலும்  கோதுமை  சோறும் இருக்கும். அவள் பாத்திரத்தை பார்த்து பக்கத்து வீடுகளில் என்ன சாப்பாடு என கண்டு பிடித்து விடலாம்.

  பாத்திரத்தில் சேரும் சோறு குழம்பு வகைகளை  கொண்டு  செல்லும் போது அது ஒருவித கதம்ப சாதமாக மாறிவிடும்.

சில நேரம் ரொம்ப பசியாக இருந்தால்  தான்.. அல்லது ரோட்டோரங்களில் உள்ள திண்டுகளில் உட்கார்ந்து சோற்றை குழைத்து சாப்பிடுவாள்.

 எல்லா வீட்டு குழம்புகளும் சோறும் சேர்ந்த ஒரு கலவையை  குழைத்து பெரிய பெரிய உருண்டைகளாக  வாயில் போட்டுக் கொள்வாள்.

 தண்ணீர் தாகம் எடுத்ததும்  ரோட்டோர குடிநீர்  குழாய்களில் கைகளை குவித்து வாய் வைத்து தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பித்து விடுவாள்.

 ஏனோ… அவளை பார்க்க பாவமாக இருக்கும் எந்த ஊர்…? எங்கிருந்து வந்திருக்கிறாள்..? அவளுக்கு யாருமே இல்லையா….? என  பல கேள்விகள் மனதில் குடையும் . ஆனால் யாரையும் அலட்சியம் செய்யாமல் தினமும் ஒரு நேரம் மட்டும் எல்லோர் வீடுகளிலும் ஆஜராகி விடுவாள்.

 “வந்துட்டா…. மொட்டக்கிறுக்கி… இங்க சாப்பாடா போடுறாங்க… சும்மா வந்துருவா”  முணுமுணுக்கும் சில வீடுகளிலோ  அல்லது கெட்டுப் போகும் உணவுகளை போடும் வீடுகளிலோ மறந்தும் கூட மறுபடி அவள் கால்கள் போகாது….!

 பெரும்பாலும் மௌனமாகவே இருப்பாள் சில நேரங்களில் சாலைகளில் செல்லும்போது… இரைந்து சண்டையிடுவது போல கோபமாக கைகளை காற்றில்  அடித்தபடி  நடப்பாள். வாய் எதையோ ஆவேசமாக பேசும். வார்த்தைகள் கடித்து துப்பியது போல துண்டு துண்டாக தான் வரும். என்ன பேசுகிறாள்…யாருக்குமே புரியாது.

                அவள் கோபமாக இருக்கிறாள் என்று மட்டும் புரியும். சில நாட்களில் சந்தோஷமாக சிரித்தபடி  நடப்பாள்…அவள் முகத்தில் அன்று ஒரு வெளிச்சம் இருக்கும். அவள் பேசுவதை கவனித்தால் அவள் தமிழ் பேசவில்லை.. பேசும் மொழியே வேறு என தெரியும்.

அவள் வரும் நேரங்களில் அவளைக் கவனித்து பார்ப்பேன். பிச்சை எடுக்க வருவதற்கு முன் லுங்கியை இடுப்பில் இருக்கி  கட்டி மேலே சில நேரம் சட்டையை அணிந்து இருப்பாள். கழுத்தில் சங்கினால் கோர்த்த மாலைகளை அணிந்திருப்பாள் மறுநாள் பெரிய பவளங்களால் கலந்த மாலைகளை அணிந்து வருவாள்.இன்று என்ன துணி அணிந்திருப்பாள் என எங்களுக்குள் ஒரு  போட்டியே நடக்கும். மழைக்காலங்களில்  அவளுக்கு குளிருமோ….,? ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று முழுக்கை சட்டைகளை அணிந்தபடி வருவாள்.

                சில நாட்களில் கையில் ஒரு தடியுடன் வருவாள் அவளுடைய நாட்டில்….. அவள்தான் எஜமானி என்பது போல கம்பீரமாய் நடந்து வருவாள்.

                அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் வந்து விட்டால்…,அவளுக்கு சோற்றுடன் குழம்பும் இரண்டு வகைக் கூட்டும் வைத்து அந்த அலுமினிய தட்டில் போட்டு விடுவேன்.ஒரு நாள் அவளுக்கு வாழையிலை போட்டு  சாப்பாடு கொடுக்கலாம் என  நினைப்பேன். ஆனால் அவளுக்கு அதை முறையாக சாப்பிட தெரியுமா என்றால் தெரியாது….

                சில நேரங்களில் ரொம்பவும் பசியான நேரங்களில்  முற்றத்தில் உட்காராமல் ஓரமாக போய் உட்கார்ந்து அலுமினிய தட்டில் உள்ள உணவை கவனமாக சேர்த்து  ஒரு பருக்கையை விடாமல் சாப்பிடுவாள். கை கழுவ ஒரு டப்பாவில் தண்ணீர் வைத்திருந்தால் அவளே  கழுவக்கூடிய தண்ணீரையே குடித்து கைகளையும் கழுவிக்கொண்டு டப்பாவை அதே இடத்தில் வைத்து தனது துணி மூட்டைகளை தோளில் போட்டு அவளுடைய அலுமினிய தட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

                எங்கே செல்கிறாள்… எங்கே தூங்குவாள் இந்த ராத்திரிகளில் அவளுக்கு பயம் இல்லையா…?

                மழை வந்தால் எங்கு செல்வாள்…? என்ற என் கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்காது. அம்மாவிடம் சொன்னால்  “அவ… எங்கேயாவது ஒதுங்குவா., நீ உன் வேலையை பாரு..” என்பார்கள். ஆனாலும் மனதின் மூலையில் அவளைப் பற்றிய எண்ணம் வந்து வந்து  போகும். சில நேரங்களில் அவளுக்கு பிச்சை இடும்போது அவள் கைகளை நீட்டி வாங்கும் போது குறுக்கும் நெடுக்குமாக ரேகைகள் ஓடும் அவள் கைகளை தொட்டுப்பார்த்து விட வேண்டும் போல இருக்கும்.

 ஆனால் ஏதோ ஒன்று தடுத்துவிடும் அவள் கோபப்படுவாளா இல்லையா..  தெரியாது அவளையே பார்த்துக் கொண்டு நிற்பேன் .

அவள் பழுப்பு கண்களால்…பூனையைப் போல என்னை ஆழமாய் பார்ப்பாள் அதில் நேசமா..,  சந்தோசமா.., கவலையா…., என கண்டுபிடிக்க முடியாது காலங்கள் ஓடினாலும் என்றும் அவள் அதே போல் தான் இருந்தாள்.

நான் தான் தாவணி போட்ட குமரியாகி விட்டேன். அவள் வந்து விட்டாள் என்றால் வீட்டில் உள்ளவர்களை முந்திச் சென்று அவளுடைய தட்டில் சாப்பாடு போடுவேன்.

வீட்டில் இருக்கும் மூன்று கூட்டு ரசம் சாப்பாடு  என….பாயாசம் வைத்தால் அதை ஒரு சிரட்டையில் வைத்து அவளிடம் கொடுப்பேன்.

சிரட்டையில் இருக்கும் பாயாசத்தை அந்த இடத்திலே நின்று ரசித்து சாப்பிடுவாள் யாரும் பார்க்காத நேரம் வீட்டில் உள்ள இனிப்பு வகைகளை எடுத்து ஒரு செய்தி தாளில் வைத்து கொடுப்பேன்.

அதுவே எனக்கு ஒரு நிறைவு… ஆனாலும் அதை எடுக்காது…சென்று விடுவாள். நாட்களும் போய்  எனது திருமண நாளும் வந்தது .

ஒரு வாரமாக மொட்டைக் கிறுக்கியை காணவில்லை. வீட்டில் வேலை செய்யும் அக்காவிடம் கேட்ட போது மொட்டை கிறுக்கி இப்ப கொஞ்ச நாளா வரல….

   “என் தங்கச்சி சொன்னா…அவ அழிக்காலில…பிள்ளைத் தோப்புல பிச்சை எடுத்துட்டு இருந்ததை பார்த்தாளாம்.  “அவ… இப்ப கடற்கரையில  உள்ள வீடுகளுக்கு  தான் போயிட்டு இருக்கா” என்றார்கள்.

எனக்கு ஏனோ அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது.  எனக்கு கல்யாணம் என அவளிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

வீடெல்லாம் உறவினர்கள் முறைச் சோறு போட வந்து விட்டார்கள்.பனிரெண்டு மணியாகி  விட்டது. அவளைத் தான்  காண வில்லை. அவளுக்கு ஒரு நாளாவது விருந்து சாப்பாடு கொடுக்க வேண்டும் போல தோன்றியது.

 ஆனால் எப்படி….யார் அவளிடம் சொல்வார்கள்…? எப்படி புரிந்து கொள்வாள் என்று தெரியவில்லை. “அக்கா… அவளை கண்டால் நம்ம ஊருக்கு வரச் சொல்லுங்க….”

ஆமா மொட்டைக்கிறுக்கி உனக்கு பதில் சொல்லப் போறா…. வேற வேலை இல்லையா உனக்கு….” வேலைக்கார அக்கா கடிந்து கொண்டாள்.

திருமணம் முடிந்து ஒரு மாதமாகி  மாப்பிள்ளையுடன் விருந்துக்கு திரும்பி வரும்போது… அக்கா மொட்டை கிறுக்கி வருவாங்களா… ? என ஆரம்பித்தேன்.

 மொட்டை கிறுக்கி சுகம் இல்லாம இருந்திருக்கா?அழிக்காலில் பெர்னாண்டஸ் வீட்டுல திண்ணையில் ஒரு நாள் செத்து கிடந்திருக்கா…. .

அந்த ஊர்க்காரங்க சேர்ந்து அவளை அடக்கம் பண்ணுனாங்களாம். அக்கா சொல்லிக்கொண்டே போக அம்மா “உச்” கொட்டி கதை கேட்க ஆரம்பித்தார்கள்.

                மொட்டை கிறுக்கி காலையிலே டா…ன்னு வந்துருவா… பாதி பேர் சாப்பாடு போடுவா.., பாதி பேர் விரட்டி விடுவா., ஆனா யாரையும் அவ தொந்தரவு பண்ண மாட்டா … நல்லவ…எந்த ஊர்ல  இருந்து எப்படி தான் இந்த ஊருக்கு வந்தாளோ…? யார் கண்டா….? வேலைக்கார அக்கா சொல்லிக்கொண்டே போக எனக்கு  மனதில் ஒரு பெரிய கனம் வந்து உட்கார்ந்தது.

சுகமில்லாம இருக்கும்போது  மொட்டைக் கிறுக்கியை ஒரு தடவையாவது பார்த்து இருக்கலாமோ…?  யாரும் சொல்லவில்லையே ..? மனம் கசிந்தது.

காலம் யாருக்காகவும் காத்திராமல் ஓடிக் கொண்டிருந்தது.  கணவர் குழந்தைகளோடு வாகனங்களிலோ…ரயிலிலோ பயணிக்கும் போது பிச்சை கேட்கும் எத்தனை பேரையோ  பார்க்கிறேன். மொட்டைக் கிறுக்கியின் முகம் இன்னும் யாரிடமும் கிடைக்கவில்லை….!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *