– கஸ்தூரிபா ஜாண்ஸன்
வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச்சுருள் நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட உடற்பருமன், பரம்பரை, வயது போன்றவை காரணங்களாகும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு காலில் இரத்தக் குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப் போய் தென்படும்.
உட்கார்தல், நிற்றல் என்று மாறி மாறி செயல்படாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதிக நேரம் நிற்க நேரிட்டால் ஒரு மேஜையில் சாய்ந்து கொள்ளலாம் அல்லது ஒரு ஸ்டூலில் காலை சிறிது நேரம் வைத்துக் கொள்ளலாம். ஒரே இடத்தில் நிற்காமல் அப்படியே சுற்றிச் சுற்றி வரலாம். சம்பளகால் போட்டு அதிக நேரம் உட்கார வேண்டாம்.
கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் இப்படி உட்கார்வது உங்கள் கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் அழுத்தத்தைக் கொடுக்கும். ஏற்கெனவே வீங்கி புடைத்திருக்கும். இரத்த குழாய்களுக்கு அழுத்தத்தினை கொடுக்கக் கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சேர்த்து இரத்த ஓட்டம் செல்வதால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதே நேரம் இடுப்பிலிருந்து கால்களுக்கு இரத்த ஓட்டம் குறையத் தொடங்கி விடும். இதனால் அங்கே இரத்தக் குழாய்கள் வீங்கி தடிமனாகின்ற வாய்ப்புள்ளது.
உடற்பருமன்
நம் உடலுக்கு தேவை இல்லாத அதிகமானக்களவு உடல்பருமன் இருக்கும் போது அதிக அளவு அழுத்தத்தை உடலுக்கு கொடுக்கிறது. எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அனுப்ப இதயமும் கூடுதலான அளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் கால்களில் அழுத்தம் ஏற்பட்டு அந்த இடத்தில் இரத்தக்குழாய் புடைத்து வீங்க வாய்ப்பு இருக்கிறது.
இவற்றுக்கென்று நிறைய வீட்டு வைத்தியங்கள், மூலிகை வைத்தியங்கள் மற்றும் அலோபதி மருந்துகள் உள்ளன. இவற்றுக்கான சில மருந்துகளை காண்போம். எங்கு உட்கார்ந்தாலும் கால்களை உயர்த்தி வைத்து அமர்ந்தால் கால்களில் உள்ள இரத்தம் மற்ற பகுதிகளுக்கு எளிதாக பாய்கிறது. இதன் மூலம் அழுத்ததத்தைக் குறைக்கலாம். தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகளை அணியும் போது உங்கள் இரத்த ஒட்டத்தை தடைபடுத்த வாய்ப்புள்ளது. எனவே தளர்வான ஆடை அணிந்து செல்லுங்கள். சூடான வெந்நீர் குளியல் வேண்டாம். சூடான வெந்நீரில் குளிக்கும் போது சிரை இரத்தக்குழாயை பெரிதாக்க வாய்ப்புள்ளது. இதனால் கால்களுக்கு இரத்த ஓட்டம் மெதுவாகும்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
சில மூலிகை வைத்தியங்கள்
இந்த நோயை குணப்படுத்த குதிரை செஸ்ட் நட் விதைகளை பயன்படுத்துகின்றனர். இது மருந்து வடிவில் மாத்திரையாகவும், ஜெல் போன்றும் மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.
இந்த நோய் உள்ளவர்களுக்கு கால் அரிப்பு, புண்கள் ஏற்படும். மந்தாரை மரத்தின் இலைச்சாற்றை காலை, மாலை 30 மில்லி வைத்து தடவிவர சுகம் கிடைக்கும்.
வெரிகோஸ் வெயினுக்கு அழுத்தம் கொடுக்கும் காலுறைகள் உள்ளன. அதை வாங்கி மாட்டிக் கொள்ளலாம். இது காலில் தடைப்பட்டுள்ள இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது.
அறுவை சிகிச்சைகள்
மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு புடைத்த இரத்தக்குழாய்களை நீக்குகின்றனர். வெரிகோஸ் வெயின் புடைத்திருக்கும் தீவிரத்தை பொறுத்து, சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. லேசர் சிகிச்சை புடைத்த இரத்த சிரைகளை லேசர் கதிர் கொண்டு சூடேற்றி அடைத்து விடுகின்றனர்.
நரம்புசுருள் நோய்க்கான ஒரு சூப் அத்திப்பட்டை 100 கிராம், மிளகு ½ தேக்கரண்டி, சீரகம், ½ தேக்கரண்டி, சிறிது இஞ்சியும் சேர்த்து அரைத்து 200 மில்லி நீரில் போட்டு ½ தேக்கரண்டி மருதம்பட்டை சேர்த்து கலக்கி இந்துப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி 60 மில்லி காலை, மாலை 48 நாட்கள் குடிக்கவும். இரத்தநாளங்கள் வெடித்து இரத்தம் வடிந்தால் தான் இரத்தம் சுத்தமாகும்.
Leave a Reply