உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை

உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை

  • By Magazine
  • |

பயணக்கட்டுரை

– கிருஷ்ணகோபால்

கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  கோழிக்கோட்டிற்கு  அனுப்பி  வைத்தாள்… கோழிக்கோட்டில் நின்றிருந்த ஒரு மாத காலம்  கிடைத்த அனுபவம் வாழ்க்கையில்  எப்போதுமே  மறக்க முடியாதது.

 இயற்கை அழகால் நிரம்பி வழியும்  அந்த  மண்ணின் மீதும்,  வசீகரிக்கும் அந்த மொழியின் மீதும், வாசனை திரவியங்கள் பூசி சூழலை மணம் பரப்பி சாலையில் என் அருகாமையில் கடந்துச் செல்லும்  இஸ்லாமிய இளம் பெண்கள் மீதும் ஒரு தீராத ஈர்ப்பு உருவாகியிருந்தது. சிறுவயதில் மனதில் படிந்த அந்தக் காட்சிப் படிமங்கள்தான்  இன்னும் என்னை உயிர்ப்பித்து வழி நடத்துகிறது என்று நம்புகிறேன்.

 பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு  தென்மேற்கு பருவமழை  தீவிரமடைவதற்கு முன்பு சென்று வர வேண்டும் என்ற எங்கள் விருப்பத்திற்கு அனுசரணையாக இயற்கை வழி விட, அந்த இதமானச் சூழலில்  வடகேரளமான மய்யழி, கண்ணூர், கோழிக்கோடு போன்ற இடங்களுக்குச் சுற்றுலாச் சென்று வந்ததென்பது புது அனுபவத்தைக் கொடுத்தது.

 திருவனந்தபுரத்திற்குச் சென்று  இரயில் ஏறி இரவு முழுக்க பயணம் செய்தபடி காலையில் மாஹி என்னும் மய்யழியில் சென்று  இறங்கினோம். அதற்கு முன்பு மய்யழியின் சூழலைப் புரிந்துக் கொள்வதற்காக, மலையாள நாவலாசிரியர்  எம்.முகுந்தன் எழுதிய மய்யழிக்கரையோரம்  என்ற நாவலை வாசித்திருந்தேன்.

 மய்யழியில் சென்று இறங்கியதும்  அந்த நாவலில் உள்ள அடையாளங்களை கண்கள் தேடின. (அன்று பாரதிராஜாவின் ‘ கடலோர கவிதைகள்’ படம் பார்த்து விட்டு முட்டத்தில் இரயில்வே நிலையத்தை தேடிச் சென்ற கதைப்போல் ஏமாற்றமே மிஞ்சியது.) சட்டென்று எனக்கு அந்த ஊரில் எதுவுமே புதுமையாகவோ ஆர்வம் கொள்ளக் கூடியதாகவோ இல்லை.. மய்யழி  ஒரு காலத்தில் பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டப் பகுதியாக இருந்திருக்கிறது.

 இப்போது அது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஒரு  பகுதியாக இருக்கிறது. விசேஷமாகச் சொல்வதாக இருந்தால்  மய்யழியின்  ஒரு கிலோ மீட்டருக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 64 வெளிநாட்டு மதுபானக்கடைகள் இருக்கின்றனவாம். தரமாகவும், அதே வேளை விலை குறைவாகவும் கிடைக்கிறது என்பதால் கண்ணூர், கோழிக்கோடு   போன்ற மய்யழியின் அருகாமையில் அமைந்துள்ள கேரள மாவட்டங்களிலிருந்து குடிமகன்கள் பஸ் ஏறி வந்து குடித்து விட்டுச் செல்கிறார்கள். நாங்கள் சில இடங்களுக்கு போக   எதிர்ப்படும் நபர்களிடம் வழி கேட்கும் போது அவர்கள்  கேரள குடிமகன்களாக இருந்தார்கள்.. அந்த குடிமகன்களுக்கு மதுபானக் கடைகளுக்குச் செல்லும் வழியைத் தவிர மய்யழியைப் பற்றி கூடுதலாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை..

 அன்று காலையில் மலபாரின் தவிர்க்க முடியாத  காலை உணவை  (பத்திரி, புட்டு…) சாப்பிட்டோம். பிறகு மய்யழியின் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான    தேவாலயத்தில் பிரார்த்தனைச் செய்து பயணத்தை ஆரம்பித்தோம்… எனக்கு ‘மய்யழி கரையோரம்’ நாவல் வாசித்ததில் நெஞ்சில் தங்கியிருந்ததும், பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவலை ஏற்படுத்தியிருந்ததுமான இடங்கள் இரண்டு. அதிலொன்று மாதா தேவாலயமும் கடற்கரையை ஒட்டிய பொழிமுகமும்தான்..மய்யழி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மய்யழிகரையோரம் நாவலின் முதன்மை கதாபாத்திரங்களை மையப்படுத்தி சுவர்களில் மியூரல் புடைப்புச் சிற்பங்கள் சுவர் முழுக்க நீண்டுக் காட்சியளித்தன. நூறுவருடத்திற்கு முந்தைய வரலாறினை நாவலில் வாசித்த கதாபாத்திரங்கள் வழியே ஞாபகத்திற்கு கொண்டு வர புடைப்புச் சிற்பங்கள் உதவின. , கடலுக்குள் கண்ணீர் துளிப் போன்ற ‘வெள்ளியாங்கல்’ என்னும் இடத்தில் உயிர்கள் தட்டான்களாக பறந்து திரிகின்றன போன்ற தொன்மங்கள்  காட்சிகளாக விரிவதைப் பார்த்ததும் அந்த இடத்தின் மீது ஈர்ப்பு உருவாகியது. கடலுக்குள்  கூர்ந்து நோக்கினேன். தாசனும் குறம்பியம்மாவும் தும்பிகளாக பறந்து திரிந்தார்கள்.

எம்.முகுந்தனை பார்க்க ஆர்வப்பட்டு விசாரிக்கும் போது அவர் இங்கிருந்து பள்ளூர் என்னும் இடத்தில் சமீபத்தில் தான் குடியேறியதாக கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும்    என்ற யோசனையை தற்காலிகமாக தள்ளி வைத்தோம்..பிறகு மய்யழியில்  ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்த  ஒரு நூலகத்தில் நுழைந்தோம். அங்கு பல்வேறு வாழ்வியல் பரப்பாக காட்சியளித்த  ஓவியங்களை பார்வையிட்டப் பிறகு  தலச்சேரிக்குப் பயணப்பட்டோம்.

அங்கு ஆங்கிலேயர்கள் கட்டியிருந்த பழமையான  பெரியக் கோட்டை (Fort) ஒன்றை பார்த்தோம். பழமையான தேவாலயங்களையும்; ஆங்கில அதிகாரிகளின் கல்லறைகளையும் பார்வையிட்டோம். பிறகு  அங்கிருந்து நடந்துச் சென்று  85 வருட பாரம்பரியமிக்க தலச்சேரி  பாரிஸ் பிரியாணிக் கடைக்குச் சென்று மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு அது செரிமானமாவதற்காக  எல்லோரும்   சுலைமானி (பால் கலக்காமல் தேயிலை தூளுடன், ஏலக்காய், கிராம்பு, இஞ்சி போன்றவைக் கலந்த  மூலிகைத்  தேனீர் எனச் சொல்லலாம்) குடித்தோம். முதலில் சுலைமானி குடித்து முடித்த நண்பர்கள் சிலர் எதிரே அவர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த  இஸ்லாமிய பள்ளிவாசலைப் பார்க்கச் சென்றார்கள். திரும்பி வந்து அது உருவான வரலாறைச் சொன்னார்கள். அது டச்சுகாரர்கள்  காலத்தில் கரும்புத் தோட்டமாக இருந்ததென்றும் பிறகு இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மூசா காக்கா என்பவர் தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட  வரலாறை விவரித்தார்கள்.

இது  ‘ஓடத்தில்’ பள்ளி வாசல் என அழைக்கப்படுவதாகவும்,பள்ளியின் கட்டடக்கலையானது  கேரள இந்துக் கோயில்களைப் போன்று உள்ளதாகவும், உச்சியில் இந்துக் கோயில்களில் உள்ளதுப் போன்று  ஐந்து கலசங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று தங்கத்தால் ஆனதென்றும் இப்போதும் அதை வழிவழியாக   மூசா காக்கா  குடும்பம்தான் பராமரித்து வருவதாகவும் அவர்கள் சொன்ன சுவாரஸ்யமான  தகவலைக் கேட்டு பிரமிப்பாக இருந்தது . அதன் பிறகு அங்கிருந்து சிறிது தூரம்  நடந்துச் சென்று  தலச்சேரி பேருந்து நிலையம் வந்தடைந்தோம். பிறகு  கொடுவள்ளிக்கு பேருந்து ஏறினோம். தமிழ்நாட்டில் கால்டுவெல் எப்படி பார்க்கப்படுகிறாரோ அதே போல் ஜெர்மன்காரரான ‘ஹெர்மன் குண்டர்ட்டும்’ கேரளாவில் பார்க்கப்படுகிறார்.

மலையாளத்தில் எழுத்தச்சனுக்கு அடுத்தபடியாக கேரள இலக்கணம் மற்றும் கேரள வரலாறு உருவாக்கத்திற்கு உழைத்தவர்  குண்டர்ட். அவரை பெருமைப்படுத்தும் விதமாக கேரள அரசு அவர் வாழ்ந்த இடமான ‘இல்லிக்குன்னு’ என்னுமிடத்தில் அவர் பெயரில் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. கேரள சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை மியூசியத்தில்  பார்வையிட்டோம். அங்கு ஜெர்மன் மொழி புத்தகங்கள் மட்டுமே அடங்கிய நூலகம் ஒன்றும் உள்ளது.ஹெர்மன் குண்டர்ட்டின் பேரன்தான் ‘சித்தார்த்தா’ என்னும் நாவல் எழுதிய ‘ஹெர்மன் ஹெசே ‘என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு அங்கிருந்து  நகர்ந்து பழைய கடற்கரை நகரமான தலச்சேரி கடல் பாலத்திற்கு வந்தோம். அங்கு கைவிடப்பட்ட பண்டகச்சாலைகளின்  சுவர்களில் வரையப்பட்டிருந்த  ஓவியங்களை ரசித்த படியும்,  ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தத்துவச் செறிவுள்ள வாக்கியங்களை வாசித்து உள்வாங்கியப்படியும் நடந்துக் கொண்டிருந்தோம். அந்த இடத்தில் நிறைய ஓவியங்கள்  வரையப்பட்டிருந்தன.

 இதெல்லாம் ஒரு மலையாளப் படப்பிடிப்புக்காக வரையப்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அதன் பிறகு ஏற்கனவே சந்திக்க திட்டமிட்டிருந்தபடி  மொழிபெயர்ப்பாளர் ஷாஃபி செறுமாவிளை கடல் பால கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.பிறகு அவரோடு தலச்சேரி கடற்காற்றை அனுபவித்தபடி சுலைமானி குடித்தவாறு  இலக்கியம் சார்ந்து நீண்ட உரையாடலை நிகழ்த்தினோம்.அவர் தமிழிலிருந்து மலையாளத்திற்கு பிரபலமான பல தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அவர் ஒரு கட்டட தொழிலாளியும் கூட… நடந்துக் கொண்டிருக்கும் போது  எழுத்தாளரும்  நண்பருமான செல்வராஜின் கையில்  திடீரென்று எங்கிருந்தோ வந்து அடைக்கலமாகி ஊர்ந்துச் சென்ற பச்சைப்புழுவை ரசித்து விட்டு அதை கசங்காமல்  கையில் எடுத்து  அதன் வாழ்விடமான செடிகளைத் தேடி  படர விட்ட பிறகு அதே தலச்சேரி வீதியில் இராகேஷ் என்னும் ஓவியரை சந்தித்தோம். ஆட்டோ மொபைல் பணி செய்து கொண்டே ஓவியங்களில் தனித்தன்மையோடு இயங்குபவர் அவர். தமிழ்நாட்டைப் போல்  கேரளாவிலும்  எழுத்துக் கலைஞர்களாக இருந்தாலும் சரி ஓவியம் மற்றும் பிற  கலைஞர்கள் பலரும் வேறு ஏதோ தொழில் செய்து விட்டு தீவிரமான கலைச் செயல்பாட்டோடு இயங்குபவர்களே..

 ஆனால் என்ன கேரளாவில் கலைகள் பாதுகாக்கப்பட அரசுக்கு அக்கறை இருக்கிறது. கலைஞர்கள் மதிக்கப்படுகிறார்கள் . தமிழ்நாட்டில் கலைகள் பராமரிக்கப்படாமல் நலிந்து சிதைந்துப் போகவே சபிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர்கள் கண்டுக் கொள்ளப்படாமல் வறுமையில் வாடி இறந்துப் போகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்…இதில் சினிமா நட்சத்திரங்கள் விதி விலக்கு… பிறகு அங்கிருந்து ஷாஃபியிடம்  விடைவாங்கிக் கொண்டு தலச்சேரியிலிருந்து மய்யழிக்கு பேருந்து ஏறினோம்.. அங்கு போய்சேரும் போது இரவாகி விட்டது . மய்யழிக்கு வந்து விட்டு மது அருந்தாமல் சென்றால் மய்யழியை குறிப்பாக பிரஞ்சு சமூகத்தை அவமதித்ததாகி விடும் என  வியாக்கியானம் கொடுத்தபடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பழமையான  நகரில் மது அருந்தப் போகிறோம் என்ற எண்ணம் தூண்டப்பட்டதும் நண்பர்கள் சுறுசுறுப்பானார்கள்.  அவரவர்களின் உடல் ஆரோக்கியத்தை அனுசரித்து  மலிவான அதே நேரம் தரமான  மது வகைகளை  வாங்கி அருந்தி விட்டு ஆடல் பாடல் கொண்டாட்டத்தோடு அரசியல், கலை, சினிமா, இலக்கியம் மற்றும் வரலாறு  குறித்து தாறுமாறாக விவாதம்  நடத்தினோம்..

அடுத்தநாள் காலையிலேயே பரபரப்பாக எழுந்து  குளித்து தயாராகி, அறையை காலி செய்து விட்டு கண்ணூர் நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். கண்ணூரில் நிறைய இடங்களை பார்ப்பதற்கு தீர்மானித்திருந்தோம். ஆனால் இடையிடையே பெருமழையும், சிறு மழையும் குறுக்கிட்டதால் நாங்கள் திட்டமிட்டிருந்த இடங்களை பார்க்க முடியாமல் போய்விடுமோ என பதட்டமானோம். இருப்பினும் மழையங்கி (rain coat) மற்றும் குடைகளை பிடித்தபடியே நண்பர்கள் எல்லோரும் முதலில் அரக்கல் மியூசியத்திற்குச் சென்றோம். கேரளாவில் குறுநில மன்னர்களின் ஆட்சியில் ஒரே ஒரு முஸ்லீம் அரசக் குடும்பமான ‘அரக்கல் அலி’ மன்னர் குடும்பத்தின் ‘அரக்கல் கட்டு’ என்று அழைக்கப்படும் அரண்மனையை கேரள அரசு மியூசியமாக மாற்றியிருக்கிறது.அந்த மியூசியத்தை சுற்றிப் பார்த்து விட்டு.. அங்கிருந்து கண்ணூர் கோட்டைக்கு வந்தோம்.

இந்தியாவில் முதன் முதலில் காலடியெடுத்து வைத்த ஐரோப்பியர்களான போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டதும், டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டதும்..பின்பு ஆங்கிலேயர்களால் மேம்படுத்தப்பட்டதுமான இந்தக் கோட்டை, கண்ணுக்கு இதமான புல்வெளியோடு, ஆர்ப்பாட்டத்தோடு கூடிய கடற்கரையைத் தொட்டு காதலர்களின் புகலிடமாக, ஒரு வரலாற்று சாட்சியாக நிற்கிறது..

 பிறகு கண்ணூரில், நாட்டார் வழக்காற்றியல் அருங்காட்சியம் ஒன்றை பார்த்து பிரமித்துப் போனோம்.. கண்ணூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் சிறக்கல் என்னுமிடத்தில்  மியூசியம் உள்ளது. சிறக்கல் அரசக்குடும்பத்தின் அரண்மனை ஒன்றை  1995- ஆம் ஆண்டு கேரள அரசு  நாட்டார் வழக்காற்றியல் மியூசியமாக மாற்றியிருக்கிறது.

பெருங்கதைகள் மீண்டும் புனைவுகளை  உயிர்பிக்கும் இடம் போல் அந்த அருங்காட்சியம் தோன்றியது.தெய்யம் என்னும் கலை உட்பட இந்திய பண்பாட்டின் அடையாளமான பல கலைகளின் அரணாகவும் அந்த மியூசியம் திகழ்கிறது. ஓவியரும், நண்பருமான கணேஷிடம் தமிழ்நாட்டில் இது போன்று நாட்டார் வழக்காற்றியல் அருங்காட்சியகம் இருக்கிறதா எனக் கேட்டேன்.’ இது போன்று இல்லை ஆனால் நாட்டார் வழக்காற்றியல் குறித்து பெரிய நூலகம் ஒன்று பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் உள்ளது’ எனச் சொன்னார்.தமிழகம் பண்பாட்டின் பிறப்பிடம் மொழியின் இருப்பிடம்  என அரசியலுக்காக கூச்சல் போட்டுக் கொண்டு எதையுமே ஆத்மார்த்தமாகச் செய்யாமல் விளம்பர அரசியல் செய்வதை மட்டுமே கருத்தில் கொண்டு  ஆயிரக்கணக்கான மதுபானக் கடைகளை திறப்பதிலேயே ஆர்வமாக இருந்து தமிழகத்தை ஆண்ட மற்றும்  ஆளும்  திராவிட ஆட்சியாளர்கள்  கண்ணூரில் உள்ளது போல் நாட்டார் வழக்காற்றியல் மியூசியம் ஒன்றை உருவாக்குவதில் கவனத்தை செலுத்தாதது தமிழர்களின் துரதிஷ்டமே..

உண்மையில் அங்கிருந்து நகர மனமில்லாது பல கோணங்களில் அலைபேசியில் புகைப்படமெடுத்துக் கொண்டோம். வட கேரளாவின் பிரதானப்பட்டக் கலையான தெய்யம் என்னும் நிகழ்த்துக்கலை 400 வகை உள்ளதாக சான்றுகள் பகர்கின்றன. டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை வட கேரளத்தில் பெரும்பாலான ஊர்களில் உள்ள கோவில்களில் தெய்யம் நிகழ்த்து கலை தெய்வங்களுக்கு முன் நிகழ்த்தப்படுகிறது.

பொதுவாக இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் பண்டைய பழங்குடிகளின்  கொலையுண்ட  மூதாதையர்களின் ஆவி நம்பிக்கையை காலம்காலமாகக் உள்வாங்கிக் கொண்டுக் கடத்தும் பல்வேறு கலைகளைப் போலவே தெய்யமும் ஒன்று.

வட தமிழகத்தில் கூத்து கலையைப் போல் தென் மாவட்டங்களான குமரி ,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்   சுடலை மாடன் கோவிலில் நிகழ்த்தப்படும் கணியாட்டு மற்றும் முத்தாரம்மன் கோவிலில் நிகழ்த்தப்படும் கரகாட்ட கலையைப் போன்றது என்றாலும் நிகழ்த்து முறையில் சற்று வேறுபாடு உள்ளது. தெய்யம் ஆட்டத்தில் கலையை நிகழ்துபவரே அருளாளராக   உருமாறி மக்களுக்கு  ஆசி வழங்குபவராகவும் ஆகி விடுகிறார் என்பதுதான் இதில்  சிறப்பு… தசரா விழாவில் காளிவேசம் இடுபவர் அருளாளராக மாறிவிடுகிறார் அல்லவா …?அதுபோல் ஒரு புரிதலுக்காக  அதோடு தெய்யத்தை இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம்…

மியூசியத்தில் வாசித்துப் பார்த்துக் தெரிந்துக் கொண்ட  தெய்யம் குறித்த வரலாறை , நேரடியாக  பார்க்க அது நிகழும் இடமான பரசினிக்கடவு முத்தப்பன் ஆலயம் நோக்கி பயணப்பட்டோம். அங்கு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தெய்யம் கலை நிகழ்த்தப்படுவதாகச்  சொன்னார்கள்.

 தெய்யம் ஆடும் கலைஞர்கள் துடிப்பான வர்ணங்களைப் பூசி, சிக்கலான வடிவங்களை கொண்டு, மயக்கும் பாரம்பரிய இசைக்கேற்ப  ஆடியதை நாங்கள் நேரடியாக பார்த்து பிரமிப்படைந்தோம்.. முத்தப்பன் முன்பு முத்தப்பனே தெய்யம் ஆடும்  கலைஞனின் உடலில் ஏறி மக்களுக்கு  அருள்பாலிக்கும் தரிசனத்தையும் நேரடியாகப் பார்த்து பரவசப்பட்டோம்..கூட்ட நெரிசல் அதை முழுமையாக பார்த்து ரசிக்கும் அனுபவத்தை  குறைத்தது. சனி ஞாயிறு மற்றும் சபரிமலை சீசன்களில் பரசினிகடவுக்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் வந்தால்  காலை மற்றும் மாலை வேளைகளில்  இரண்டு மணி நேரம் நடக்கும் தெய்யத்தை நிதானமாகப்  கண்டு களிக்கலாம் என அங்கு ஏற்கனவே  வந்து அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.

 பரசினிக்கடவு அனுபவத்தை சாகித்ய அகாடமி விருது பெற்ற  மூத்த  தமிழ் எழுத்தாளர் பொன்னீலனோடு பகிர்ந்துக் கொண்ட போது அவர்  இளம் பிராயத்தில் அங்குச் சென்றிருப்பதாகவும் , பிரசாதமாக கொடுக்கப்படும் தென்னங்கள்ளை இருபது முறை வாங்கிக் குடித்திருப்பதாகவும்  ஒரு குழந்தையைப் போல்  குதூகுலத்தோடு பகிர்ந்துக் கொண்டார்.

அங்கிருந்து மறுபடியும் பஸ் ஏறி கண்ணூர் பேருந்து நிலையத்திற்கு அருகே நாங்கள் தங்கியிருந்த  விடுதிக்கு  வந்து சேர்ந்தோம். நாங்கள்  வந்துச் சேரும் போது பேருந்து நிலைய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இரவு எட்டு மணிக்கே ஏன்  இந்த நகரம் தூங்கச் செல்கிறது என யோசித்தவாறு இரவு உணவுக்கு அலைந்தோம். பிறகு ஆட்டோ எடுத்துக் கொண்டு இரயில் நிலையம் அருகேச் சென்று இரவு உணவு வாங்கி வந்து சாப்பிட்டோம். அடிக்கடி கண்ணூரில் அரசியல் கொலைகள் நடப்பதால் சீக்கிரமே கடைகள் அடைக்கப்பட காவல் துறை  உத்தரவுள்ளதோ எனத் தெரியவில்லை..?

ஆனால் அதிகாலையிலேயே கண்ணூர் நகரம் விழித்து விட்டது. காலையிலேயே பெய்த  சாரலில் நனைந்தபடியே  பேருந்து நிலையத்தின் கடை ஒன்றில் ஒரு கட்டன் சாயாவுக்குச் (பால் கலக்காத தேனீர்) சொல்லியபடியே பரபரப்பாக இயங்கும் மக்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்… சற்று குளிர்ந்த தேகத்திற்கு தொண்டையில் இறங்கிய தேயிலையின் இளம் சூடு ஆறுதலாக அமைந்தது. தேயிலையின் நிறத்தையும் குணத்தையும் மணத்தையும் முழுமையாக  அனுபவிக்க வேண்டுமென்றால் கேரளாவில் தேனீர் அருந்தினால் மட்டுமே அது சாத்தியம்…

இப்போது எங்கள் பயணத் திட்டப்படி கோழிக்கோடிற்குப் பயணப்பட வேண்டும். கண்ணூரிலிருந்து கோழிக்கோடு செல்லும் இரயிலுக்காக இரயில் நிலையம் வந்தடைந்தோம். மழையில் நனையும் இரயில் நிலையத்தை பார்ப்பதைப் போல் ஆனந்தம் உலகில் வேறெதும் உண்டோ?

மழையில் நனைந்தபடியே வந்துச் சேர்ந்த இரயிலில் ஏறி  இடம் பிடித்து  கோழிக்கோடு பயணித்தோம். ஒரு மணிநேரம் பிடித்தது.. பேருந்து, நடை, ஆட்டோ, இரயில்  என மாறி மாறி பயணித்து நிறைய  அனுபவத்தை வழங்கிய இப்பயணம் பல  நேரங்களில் நாங்கள் நினைத்ததுப் போல் அமையவுமில்லை..

கோழிக்கோடு வந்தடைந்ததும் வயநாட்டை தன் ஆட்சியிடமாக கொண்டு ஆண்டிருந்த பழசிராசா மியூசியம் பார்க்க ஆட்டோவில் பயணப்பட்டோம்..பழசிராஜா மியூசியம் அருகே அமைந்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த கலைக் கூடத்தை (Art Gallery) பார்ப்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பராமரிப்புப் பணி நடந்துக் கொண்டிருந்ததால்  பார்க்க இயலாமல் போய்விட்டது… பழசிராஜாவை சுட்டுக் கொன்ற ஆங்கிலேய கலெக்டர் தங்கியிருந்த இடத்தைத்தான் கேரளா அரசாங்கம் மியூசியமாக மாற்றியிருந்தது..

பழசிராஜா மியூசியம் பார்த்து விட்டு ஏற்கனவே நண்பர்கள் திட்டமிட்டப்படி  மதிய உணவுக்காக கோழிக்கோட்டில் பிரபலமான ரஹ்மத்  பிரியாணி கடையில் மலபார் பிரியாணியை சுவைத்தோம். அந்த சுற்று வட்டாரத்தில்  மிகவும் புகழ்ப் பெற்ற பிரியாணிக் கடையென்பதால் கூட்டம் அலைமோதியது. நெடுநேரம் வரிசையில் காத்திருந்துதான் பிரியாணி சாப்பிட  முடிந்தது. சாப்பிட்டு முடித்ததும்  எதிர்பட்ட கடையில்    சுலைமானி குடித்து விட்டு,  அங்கிருந்து பொடி நடையாக நடந்துச் சென்று  S.M (Sweet Meet) Street என்றழைக்கப்படும் மிட்டாய் கடைத் தெருவுக்கு வந்துச் சேர்ந்தோம். அங்கு தெரு வாசலில் மலையாள இலக்கியவாதிகளில் ஒருவரான எஸ்.கே. பொற்றேகாடின் மார்பளவுச் சிலை ஒன்று உள்ளது (தமிழின் முன்னோடி எழுத்தாளரான புதுமைப் பித்தனுக்கு நெல்லையில் மார்பளவு சிலை வைக்க நெல்லை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வருடம் ஒன்றாகிறது..இன்னும் சிலை வைத்தப்பாடில்லை) இவர் மிட்டாய் கடைத் தெருவை பின்ணணியாக  வைத்து’ ஒரு தெருவின் கதை ‘என்ற நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருதுப் பெற்றவர். எனவே அவரை கவுரவிக்கும் விதமாக கேரள அரசு அந்த நாவலின் பிரதான நிகழ்வுகளை மியூரல் புடைப்பு சிற்பங்களாக  உருவாக்கி  பார்வைக்கு வைத்திருந்தது.

இப்போது எனக்கு மய்யழியில் பார்த்த புடைப்பு சிற்பங்கள்  ஞாபகத்திற்கு வந்தன. மிட்டாய்த் தெருவில்தான் முதன் முதலில் கோழிக்கோட்டு அல்வா  அறிமுப்படுத்தப் பட்டிருக்கிறது.  இப்போது மிட்டாய் கடைத் தெரு முழுவதுமே துணிக்கடைகளாகக் காட்சியளித்தன. கோழிகோட்டு ஜனங்கள் மொத்தமும் இந்த தெருவில் அகப்பட்டுக் கொண்டார்களோ என்பதுப் போல் பெரும் கூட்டம்.. நாம்  அரபு நாடு  கடைவீதி ஒன்றுக்குள் நுழைந்து விட்டோமோ என்று பிரம்மையில் இருப்பதாகச் நண்பர் ஒருவர் சொன்னார். பல விதமான இரைச்சல்கள், பேச்சுகள்,பாடல்கள் ..சிறு தூரல் பிறகு கொஞ்சம் வெய்யில் …. துணி வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அழைக்கும் சப்தமும்..பெண்கள் மற்றும் ஆண்களின் உடலிலிருந்து வியர்வை கலந்து    பலவிதமான வாசனைத் திரவியங்களின் கலவையாக வெளிவரும் குழம்பிய  மணம் ஒருவித மயத்தில் எங்களை ஆழ்த்தியிருந்தது.  பெயரளவிற்கு அல்வா கடைகளும், மிட்டாய் கடைகளும் இருந்தன. சில நண்பர்கள் அல்வா மற்றும் ஆயுர்வேதம் கலந்த மாலத்தீவு மிட்டாயை வாங்கி சுவைப் பார்த்துக் கொண்டனர். பிறகு நண்பர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

S.M தெருவிற்கு நேர் எதிரே இருந்தது கோழிக்கோட்டு மாநகரின்  பண்பாட்டு அடையாளமாகத் திகழும் மானாஞ்சிற பூங்கா. இது திருவனந்தபுரம் ‘மானவியம்’ வீதியைப் போல கலைஞர்கள் எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடுமிடமும் கூட.

அங்கு பல சிற்பங்களைக் கண்டோம். அனைத்தும் மலையாள நாவலாசிரியர்களின் நாவலின் ஆன்மாவை வெளிப்படுத்தும் சிற்பங்களே..கோழிக்கோட்டு மாநகரை நடந்தும், பேருந்திலும், ஆட்டோவிலும், கடந்துச் செல்லும்  போது மானாஞ்சிறக் குளம், முதலைக் குளம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட குளங்களைக் கண்டேன். கேரளாவில் சூழலியல் புரிதலோடு குளங்கள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் எந்த இயற்கை சார்ந்த புரிதலுமின்றி  குளங்களை  நிரப்பி  கட்டடங்களையும் பேருந்து நிலையங்களையும் எழுப்புகின்றனர்.

ஊருக்கு திரும்புவதற்காக கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இரயில் ஏறினோம். இரயிலுக்குள் நண்பர்களில் சிலர் சமகால அரசியல் குறித்து தீவிர  விவாதத்தில் இருந்தனர்… திடீரென்று நாங்கள் இருந்த கம்பாட்மெண்டின் ஒரு ஓரத்தில் நெடுநேரமாகவே சிறு சலசலப்பு கேட்டுக் கொண்டிருந்தது. நண்பர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்தனர். ஏழு மணி இருக்கும், ஒரு கும்பல் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்கும் நிகழ்வை கொண்டாடும் விதமாக கோழிக்கோட்டு அல்வாவை பயணிகளுக்கு கொடுத்தபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அதே கும்பல் எங்களிடமும் அல்வாவை நீட்டியது. மோடி சார்ந்த கட்சியின் கருத்தியலை ஏற்றுக் கொள்ளாத நண்பர் ஒருவர் சர்க்கரை வியாதி எனச் சொல்லி அல்வாவை பெற்றுக் கொள்வதிலிருந்து தப்பித்தார்.நண்பர்களில் பிறர் அல்வாவை வேண்டா வெறுப்பாக வாங்கிச் சாப்பிட்டனர். அதிகாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைந்தோம். பிறகு அங்கிருந்து நண்பர்கள் அவரவர் ஊருக்கு செல்ல பஸ்சிலும் இரயிலும் பயணப்பட தலைப்படும்போது எல்லோருக்குள்ளும் பிரிவின் வேதனை தைத்தது. இந்த சுற்றுலா வழியே  நாங்கள் பல அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் குறிப்பாக சூழலியல் அறிவோடும், கலைப் பண்பாட்டைக் காப்பாற்றும் அக்கறையோடும் செயல்படும் கேரளாவிடமிருந்து தமிழ்நாடு  நிறைய கற்றுக் கொண்டு மாற்றமடைய வேண்டியதிருக்கிறது என்பதை உணர்ந்தோம்.. நண்பர் கேட்டார் தமிழகத்திலிருந்து கேரளாவில் கற்றுக் கொள்ள ஒரு நல்ல விஷயம் கூடவா இல்லை…? அப்பொழுது குபீரென வெளிசாடிய சிரிப்பை அடக்கிக் கொண்டு நண்பரைப் பார்த்தேன்.. நண்பர் அர்த்தபூர்வமாக சிரித்தார்.. எதற்காகவோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *