– இரா. அரிகரசுதன்
“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது.
பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு வந்த காலத்தில் உணவைச் சோறும் கறியும் என இரண்டாக வகுத்து நெல்லரிசியைச் சோறாக சமைத்தும் கறி அல்லது குழம்பு வகைகளைச் சுவையூட்டுவனவாகவும் உடலை வலுப்படுத்துவனவாகவும், நோய் வராது தடுப்பனவுமான பல வகை மருந்துகளை மசாலையாகச் சேர்த்து ஆக்கியும் உயர்வாக உண்டு வந்த பெருமை தமிழனதாகும் என்பார் தேவநேயப்பாவாணர்.
“கட்டையன் நெட்டையன் காடக்கழுத்தன்
கருமிளகு செம்மிளகு காத்தாடி முண்டன்
கட்டிக் கடுமன்னாள் கடிதாவிக் காரி
கோடநரியன் முட்டகம் செந்நெல்
தட்டார வெள்ளை செம்பு மார்த்தாண்டன்
சடையானி சீவிற்கு சம்பா சீரழகி
பொட்டல் விளையும் புழுதிபுரட்டி
புனுகு சம்பா கடும்பாறை பிளப்பான்
வெட்டையில் முட்டி முட்டக்குறுவா
விரிபடகங்கன் வாசறு முண்டன்
திட்டமுடன் அயிக்கிராலி முதலாய நெல்லுகள்
தமிழ் நாடெங்கும் சீராய் விளைந்ததே
செங்கோடி வாலிபர் கண்டுமகிழ்ந்து
ஆடவும் பாடவும் களியலடிக்கவும்..” என்று வித, விதமான நமது நெல் இரகங்களைக் கூறி நெல்லுக்குத்தும் போது பாடி “களியலாட்டம்” ஆடும் வழக்கம் இருந்ததாக கல்லறைவிளை ஜார்ஜ் அவர்கள் தகவல் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் 65,000 வகை நெல் இரகங்கள் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தானியங்கள், எண்ணெய் வித்துகள், கோதுமை காய்கறி, பழங்கள் என 2 லட்சம் பாரம்பரிய விதைகள் இருந்திருக்கின்றன. ஆனால் இப்போதோ விவசாயம் அழிக்கப்பட்டு, மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு பகாசுர கம்பனிகளின் இரக்கமற்ற லாபக் கொள்கைகளுக்குள் சிக்கிக் கிடக்கின்றது.
விவசாயிகளின் நிலையை யாரும் காதுகொடுத்து கேட்பாரில்லை. 1934- இல் வங்கத்தில் நிலவியப் பஞ்சம் மிகக் கொடுமையானது. இப்பஞ்சத்தின்போது 3 கோடி இந்தியர்கள் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் “உழுபவனுக்கே நிலம்” என விவசாயிகளுக்கு வாக்குறுதி தரப்பட்டது. காந்தியின் சீடர் “வினோபாவே” பூமிதான இயக்கத்தை மேற்கொண்டார். அதன்பின்னர் விவசாயம் வளர்ச்சிப்பெற கூட்டுறவு சங்கங்களும், கூட்டுப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. 1940 களில் 0.5% மாக இருந்த வேளான் வளர்ச்சி 2.5% மாக 5 மடங்கு வளர்ச்சி அடைந்தது. முதல் ஐந்தாண்டு திட்டம் 33% நிதியை விவசாயத்திற்காக ஒதுக்கியது. அதன்பிறகு ஐந்தாட்டுத் திட்டங்கள் விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை மறந்துவிட்டன. 1980 -களில் நமது வேளாண்மைப் பொருளாதாரம் மிகக்டுமையான நெருக்கடிக்குட்பட்டது. முதலிரண்டு ஐந்தாண்டு திட்டங்களைத் தவிர ஏனைய ஐந்தாண்டுத் திட்டங்களில் வேளாண் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை அரசு புறக்கணித்து வந்தது.
உழைப்புக்கேத்த கூலி, உழுவதற்கு நிலம், இருப்பதற்கு இடம், மருத்துவம், கல்வி இவை கிடைக்காமல் அல்லல்படும் நம் மக்கள் ஒருவாய் கஞ்சியாவது குடிக்கலாம் என நினைத்தால், இருக்கும் விவசாய நிலங்களையும் அழித்தல், இயற்கை பேரிடர் என விவசாயிகளின் வாழ்வு ஆலையில் அகப்பட்ட கரும்பே தான்.
ஒவ்வொரு தை பிறப்பின்போதும் தைபிறந்தால் வழிபிறக்காதா என ஏங்கிக் கிடக்கும் நமது விவசாயிகளின் குரல்கள் கேட்கப்பட்டு அரசும் மக்களும் முதன்மையாக தங்கள் ஆதரவை விவசாயத்திற்கு தரவேண்டும் என இத் தைப்பொங்கலில் நமது எண்ணத்தையும் முன் வைக்கின்றோம்.
அவ்வகையில் விவசாயத்திற்காக தன்னலமற்று தன் வாழ்நாளை தந்த பெருமைமிகு நமது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களை நினைக்காமல் நம்மால் தமிழ்நிலத்தின் விவசாய வளர்ச்சியை திட்டமிட இயலாது-
நம்மாழ்வார்
கோ. நம்மாழ்வார் (10 மே 1938 – 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன் வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டவர். துணை விஞ்ஞானியாக கோவில்பட்டி மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். நாடெங்கும் பசுமைப் புரட்சி துவங்கியக் காலத்தில் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பதற்காக தான் பார்த்துவந்த அப்பணியை உதறியவர். காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர். மேலாடை போடாது பச்சை துண்டு ஒன்றை போர்த்திக் கொள்ளும் நம்மாழ்வாரிடம் அவர் நலம் விரும்பிகள் கார் வாங்கித் தருகிறோம் என்ற போது, “என்னால் முடிஞ்ச வரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுகுறேனே” என்று தவிர்த்து விட்டவர்.
ஜே. சி. குமரப்பாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். “டிராக்டர் நல்லாத்தான் உழும், ஆனால் சாணி போடாதே!” என்ற ஜே.சி. குமரப்பாவின் வாக்கை அடிக்கடி குறிப்பிடக்கூடியவர்.
இலட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சிக் கொடுத்து தமிழகத்திலும் நாட்டிலும் நாம் இழந்துபோன மரபான விவசாயமுறையை காப்பாற்றித் தந்தவர். பாரம்பரிய விதை இரகங்களை அதிகம் நேசித்தவர். 22,972 பாரம்பரிய நெல் இரகங்களை வெளிநாடுகளின் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்த மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003 -இல் அரசு ஒப்படைத்த போது கண்ணீர் விட்டு அழுதவர்.
கேடுவிளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார் நமது பாரம்பரிய ஒட்டு ரகங்களை ஆதரித்தார். 1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்தபோது. கலப்பினம் மற்றும் வீரிய இரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல, மாறாக இரசாயண உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு என்று அன்றே சொன்னவர் நம்மாழ்வார்.
ஆனால் பலரும் நினைப்பது போல் அவர் தொழில் நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல. உயிர்தொழில்நுட்பத்தின் அத்தனை பரிமாணங்களையும் தன்னுடைய விரல் நுனியில் வைத்திருந்தவர்தான் நம்மாழ்வார். இளைஞர்களின் மனதை வென்றவர். பேச்சு அல்ல வாழ்க்கை என்பதை உணர்ந்த பல இளைஞர்கள் குறிப்பாக தொழில்நுட்ப இளைஞர்கள் அதிகமாக அவர் வழிநடத்துதலிலும் அவர்தம் வழியிலும் அணி திரண்டனர். அவர்தம் வானகம் பண்ணையில் 6000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.
நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். “சோலைக்காடுகள் இல்லை எனில் ஆறுகள் உற்பத்தி கிடையாது. சோலைக்காடுகள் இல்லையெனில் மனிதனுக்குச் சோறு இல்லை” என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.
“நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு” என்று எல்லாக் கூட்டத்திலும் பேசக்கூடியவர். நல்ல குரல்வளம் கொண்ட நம்மாழ்வாருக்கு வயலில் இறங்கி விட்டால் பாட்டு தானாக வரும். பாரதி, பட்டுக்கோட்டை என பாடிக் கொண்டே இருப்பார். இவரை மக்கள் ஒரு விவசாய ஆன்மீகவாதியாகவே பார்த்தார்கள்.
பூச்சி கொல்லிகள், மீத்தேன் வாயு திட்டம், மரபணு சோதனைகள், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி, வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல் போன்ற விவசாயத்திற்கு எதிரான அத்தனை திட்டங்களையும் எதிர்த்தவர்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு, இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல், 60-க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். “தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தவர்..
உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே, மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், களை எடு போன்ற நூல்களை எழுதிய நம்மாழ்வாரை பாராட்டி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.
தமிழகம் மற்றும் உலகம் முழுக்க உள்ள இயற்கை விவசாயிகளின், பாமரர்களின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த ஒரு மாபெரும் மனிதர். நம் மண்ணின் பாரம்பரிய விவசாயத்தை காக்க இறுதிவரை போராடிய அந்த விவசாயப் பெரியவர் நம்மாழ்வாரின் மறைவின் ஆற்றாமை இன்னும் தீந்தபாடில்லை.
உழவை, பாரம்பரியத்தை போற்றுதல் செய்யும் தமிழ் மண்ணின் கலை, பண்பாட்டுவிழாவான பொங்கல் திருநாளில் தமிழ்வருடப்பிறப்பில் நாம் உழவையும் இப்பெரியவரையும் போற்றுவோம். மேலும் பாரம்பரிய உணவு முறைகள், விளையாட்டுகள், பாரம்பரிய விவசாயமுறை, மரபான நற்பண்புகள், கூட்டு குழும வாழ்வியல், கலையோடியைந்த கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற விழைவதன் மூலம் நம் வாழ்வையும் பிழைத்தலையும் மீட்டெடுக்க வேண்டும் எனும் அன்பானை வேண்டுதலையும் உங்கள் முன் வைக்கின்றோம். அதனையே புதிய தென்றலும் முன்மொழிகின்றது.
Leave a Reply