– முனைவர் முல்லைத்தமிழ்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம்.
“ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம்
தும்மி என்ற வர்மம்”.
– வர்ம குருநூல்
“வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ்
தும்மிக்காலம்”.
– வர்ம அகஸ்தியசாரி
“பண்பான தும்மியதன் காலம் கேள்
தொடரான பித்துக்காய் பிறமேதானே”.
– கால வர்மநூல்
மேலும்,
போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்
பொறியிலே தும்மிக்காலம் கொண்டால்
வாங்கியால் கமிழும் ஒருபுறம் சரியும்
விழி முடக்கும் வரும் இருமல் தும்மலுண்டாம்
மன்னனை கடிகையது மூவாறுக்குள்
மகத்தாக முந்நூறில் இரத்த காயம்
உண்டாகும் நெஞ்சதிலே குத்துமாகி
உடல் வாடும் உண்மையாய் சொன்னேன் காணே.
–வர்ம தாண்டவம்-500
தனித்த தும்மிக்காலத்தின் குணத்தைக் கேளு
தரித்து குடல் மலமது விழும் சொன்னோம்
துணித்த உடல் குன்னுமிது குறுகிக்காணும்
தூக்கியே யிளக்கிவிடு யிளகாவிட்டால்
கணித்த பதினெட்டுக்குள் பறிக்கும் சீவன்
கருதியே சாத்தியமானாலும் கேளு
குணித்த குத்தான ஆனந்தவாயுவுண்டாகும்
இரைநோய் நார் நோய்போம் பற்பம் கொள்ளே.
–வர்ம கருவிநூல்-500
“ஈடழியும் பித்துக்காயதின் பின்பக்கம்
என் சொல்வோம் தும்மி என்ற காலம் தன்னை
கூடழியும் என்று சொல்லி ஊன்றித்தாக்கில்
குடல் குலுங்கும் கபகாசத் தும்மலாகும்
பாடழியும் பரதாப இருமல் குன்னல் பலமான
கொழுத்துக்குத்து வாய்வு மலக்கட்டாம் சீதம்
வீடழியும் பஞ்சவர்ண குலையில் குத்தி
விக்கல் கக்கல் கர பேத சுரத்தால் சாகும்”.
– வர்ம குருநூல்
“நில்லெனவே தும்மிவர்மம் கொண்டதானால்
நிச்சயமாய் செய்குணத்தை நிகழ்த்தக்கேளு
சில்லெனவே கொட்டாவி விட்டு தும்மலுண்டாம்
சிறப்பான வயிறூதும் வாயு விம்மும்
நல்லெனவே நாழிகைதானஞ்சுக்குள்ளே
நலமாக செய்துவிடு கருதானாகும்
கல்லெனவே கடிகையது கடந்துதானால்
கண்டிதமாய் அசாத்தியமாகுந்தானே”.
– வர்ம அகஸ்திய சாரி
“தும்மிச்சதுர் தலமென்பார் மேலோர் அஃது
விம்மிக்கும் மூச்சு விட முட்டிமுட்டிக்கட்டிருமல்
வம்மிக்குமதனாலேயாயுளுக்கூனமாச்சிஃது மாற
சொம்மிக்கும் மணிகறக்கி வாரியறந்து கோரி
நம்மிக்கும் பேன்குழியில் பதித்து விரல் பதமறிந்து
உம்மிக்கும் உச்சியிலோரடியடித்து உள்ளும்புறமும்
கம்மிக்க ஒத்தனுக்கித் தடவி மெள்ள அவுசதங்கள்
செய்ய சுகமாகுமென்று மேலோருரை செய்தார் தானே”.
– வர்ம குருநூல்
“தும்மியென்ற வர்மமது இளக்குதற்கு
வணக்கமுடன் முதுகு விலாத்தடவித் தாத்து
அம்மி என்ற அடிவயிற்றில் அடங்கல் செய்து
நுணுக்கமுடன் மேலேந்தி தட்டடங்கல்
தம்மி என்ற விரலேற்றி தடவி மெல்ல
விதவிதமாய் செய்துவிடு வினைகள் தீர
நம்மி என்ற நலம் வரவே உச்சி தட்டி
நட்பாக செய்திடுகில் நலமாம் பாரே”.
– வர்ம கால நூல்
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
தொடராக்கும் தும்மியெனும் வன்மம் முன்பின்
அடராக்கும் நீர்கோபம் அதனாலே இன்னுமது
படராக்கமுறும்பலங்கெட்டுபரிதவிக்குமூச்சிரைத்து
விடராக்க விதியிதானால் வன்மமிது விள்ளலாச்சே.
–வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தொடர்ந்து வரும் பலபிணிகளை உண்டுபண்ணும் கபநோய்களை உருவாக்கும் தும்மிவர்மம் உடலின் முன்னும் பின்னும் அமைந்து காணப்படுகிறது. நீர் கோபம் அடர்வதால் உண்டாகும் தும்மல், இருமல் போன்ற நோய்களை உண்டாக்குவதாலேயே தும்மி வர்மம் என்று அழைக்கப்படலாயிற்று. இத்தகைய நீர்கோப நோய்கள் உடல் முழுவதும் பரந்து காணும் ஆக்கமாகிய ஆற்றலை பலங்கெடச் செய்து விடுவதோடு மூச்சிரைப்பையும் உண்டாக்கும் விதியினாலேயே தும்மி என்று அழைக்கப்படலாயிற்று.
விள்ளுறும் வன்மம் தொண்டைக்குழியிலாமொன்று
உள்ளுறும் வன்மம் தூசி மேலாறு விரலிலாமொன்று
அள்ளுறும் வன்மம்பலகையெல்லிருவிரல் கீழொன்று
தெள்ளுறக் கதைத்தனமிஃது மூன்றெனக் குறித்தே.
–வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
விளங்குகின்ற தும்மிவர்மம் தொண்டைக்குழியில் ஒன்று. அகமாக ஆற்றல் பெறும் மற்றொரு வர்மம் மார்பிலமைந்த தூசிக வர்மத்தின் ஆறுவிரல் மேல் ஒன்று. கொண்டவுடன் அடைத்துப் பிடித்தாற்போல் மூச்சை அடக்கும் பலகை எல்லின் கீழ் இருவிரல் மேல் அமைந்த வர்மம் ஒன்று எனத் தெளிவாக முன்னோர்கள் மூன்று தும்மி வர்மங்களைச் சொல்லியுள்ளார்கள்.
துன்னலுறும் பின்னலதாய்த் தொடரும் தும்பிவன்மமது
கன்னலுறக்கொண்டிடிலோ அன்னமதடைத்தாற்போல்
பன்னலுறப்பரிதவிக்கும் பவனமுறுமூச்சுப் பழிகேடாய்
உன்னலுறும் உட்குடலுமடைத்தறுமெனலே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சிறு சிறு நாடிகளோடும் இணைந்து ஆற்றல் பெற்றியங்கும் தும்மி என்ற வர்மமானது அகம் வரைக்கும் இரத்தம் கசியும் வண்ணம் தாக்கம் கொண்டால் உண்ணும்போது உணவுக்குடல் அடைத்தாற்போல் நம்மை இயக்குவதற்காய் உடலில் இயங்கும் மூச்சானது பழிகேடாய் அடைத்து மூச்சு விடமுடியாமல் தயக்கமுறுவதோடு குடலுமடைத்து விடும் என்பதாம்.
என்னுமிந்த வன்மமது தும்மியதுவாம் பலகைஎல் கீழ்
கொன்னுமிந்த வாய்க்குளறிக்கொழுத்துடன் படபடத்து
வின்னுமந்த விக்கலுடன் விறைத்துகடன்நடுக்கலுற்று
நன்னுமந்த மாத்திரையில் நாட்குறியும் காணே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
பலகை எல்லின் கீழ் அமைந்த தும்மி என்ற வர்மத்தில் தாக்கம் கொண்டால் வாயின் வார்த்தைகளில் விக்கல் தோன்றுவதோடு, நாக்குக் குளறி அகம் கொழுத்தி படபடப்புண்டாகும். வின்னுமென்ற வேதனையால் மிஞ்சி விக்கலுடன் விறையலும் நடுக்கமும் உடலில் மிஞ்சிவிடும். தெளிவான மாத்திரைக் கணக்கை பொறுத்து அவதி நாட்களிலும் பல்வேறு குறிகுணங்கள் உண்டாகும் என்பதாம்.
பின்னுறும் தும்மி பிராணச்சிக்கல் போக்கும் மூச்சும்
வின்னுற விளங்குறும் அடைவுறுகபம் கலைந்துறும்
வன்னுறும் வாந்திநடுக்கமும் களைப்புடன் இரைப்பும்
நின்னுறும் கைவகைக்கணக்கறிந்துறில் எனலே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
முதுகின் பின் அமைந்த தும்மி வர்மத்தினை சரிவரத் தூண்டிக் கொடுத்துவர பிராணச் சிக்கல் தீர்ந்து மூச்சியக்கம் சிறப்படையும். உட்பக்கமாக நுரையீரலில் அடைத்துக் காணப்படும் கபமும் கரைந்துவிடும். வன்மையாக உண்டாகும் வாந்தி, உடல் நடுக்கம், களைப்பு, மூச்சிரைப்பு தீர்ந்துவிடும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், கொட்டாவி விடும், தும்மல் உண்டாகும். வயிறு பெருமி வாயுவால் நிறையும். பித்தப்பை, சிறுநீரகம், ஒட்டீரல், குடல் பகுதி இவைகளை இவ்வர்மம் உள்ளடக்கமாக கொண்டுள்ளமையால் பாதிக்கப்பட்ட உடனே பிராண ஆற்றலானது மேற்கண்ட தூல உறுப்புகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குடலில் கலக்கம் தோன்றும்.
கபம் மிஞ்சி இருமல், தும்மலும், நெஞ்சு படபடத்து கொழுத்தும், வாயு மிஞ்சி வயிறுபெருமல், கொட்டாவியும் உண்டாகும். பரதாபம், குளிர், நடுக்கம்போல் தோன்றி, மலச்சிக்கல், விக்கலுடன் வாந்தி வரும். இவ்வேளை சுரம் தோன்றினால் அசாத்தியமாகும். இதற்கு நாழிகை ஐந்து என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் முதுகு, விலா இவைகளை நன்றாக கீழ்நோக்கி தடவி, அடங்கல்களை தூண்டி, உச்சியில் கை பிணைத்து தட்டி, தகுந்த மருந்துகள் கொடுக்க சுகம் வரும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பித்தப்பை, சிறுநீரகம், ஒட்டீரல், குடல் பகுதி இவைகளில் பிராண ஆற்றல் பாதிப்படைவதுடன் இருமல், மூச்சடைப்பு, கொழுத்துவலி ஆகிய பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, இருமல், படபடப்பு, வாந்தி, நுரையீரல் நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply