பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.
எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். ஆனால் நான் பிறந்தபகுதி, இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என்பதால், எனக்கு இயல்பாக இயற்கை நாட்டம் இருந்தது. அதற்கு இணையாக அறிவியல் ஆர்வமும் இருந்தது.
எனவே,பி.எஸ்.சி.,தாவரவியல் பயின்ற நான் பின்னர் எம்.எஸ்சி., உயிர்த்தொழில் நுட்பவியல் படித்தேன். தொடர்ந்து, ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றேன். 16 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டேன்.
களியக்காவிளை மலங்கரா கத்தோலிக்க கல்லூரியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தேன்.
பின்னர் என் கவனம், தொழில்முனைவு, அது தொடர்பான வழிகாட்டலில் திரும்பியது.
தொழில்முனைவு மேம்பாட்டுப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியாளராக நான் ஒன்றிய அரசின் சான்றிதழைப் பெற்றிருக்கிறேன்.
எனவே, மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள், இளையோர் நலிவடைந்த பிரிவினர், வணிக ஆர்வம் கொண்டவர்களுக்குத் தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை, வழிகாட்டலை வழங்கத் தொடங்கினேன்.
ஒரு தொழிலுக்கான அடிப்படைத் திட்டவரைவு தொடங்கி, அதற்கான நிதி ஆதாரத்தைப் பெறுவது, தொழிலை வளர்த்தெடுப்பது வரை நான் விரிவாக எடுத்துரைப்பேன்.
தொழில்துறையினரும் நிறுவன நிர்வாகிகளும் தங்கள் தொழில், பணியை மேலும் சிறப்பாகச் செய்யவும் பயிற்சி அளிக்கிறேன்.
பெண்களுக்குத் தொழில்முனைவுத் திறன் பயிற்சியுடன், அவர்கள் நிதிநிலை, சுய ஆரோக்கியத்தைப் பேணும் விசயம் வரை எடுத்துச் சொல்கிறேன்.
எங்களின் பேச்சிப்பாறைப் பகுதியில் காணி பழங்குடியின மக்கள், குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் ஆண்டு முழுவதும் கடுமையாக உழைப்பார்கள்; நிறைய விளைபொருள்களை உற்பத்தி செய்வார்கள். ஆனால், சரியான விற்பனை விவரங்கள் தெரியாமல் வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிக்கொண்டே இருப்பார்கள்.
சிறுவயதிலேயே என் மனதில் அது ஆழமாகப் பதிந்து விட்டது. ஆக, அவர்களைப் போன்றவர்களும் வளத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் நான், தொழில்முனைவு வழிகாட்டலில் ஈடுபட்டதற்கு ஒரு முக்கியக் காரணம்.
முதல் தலைமுறைப் பட்டதாரியாக, பல்வேறு தடைகள், துன்பங்களைத் தாண்டித்தான், கல்வியில் ஒருநிலைக்கு நான் வந்தேன்.
தகவல் தொழில்நுட்பம் வெகுவாய் வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, நமதுமாணவ மாணவியாரிடம் பொதுவாகக் குறைவாகவே உள்ளது. எனவே மாணவர்களுக்கு என ஒரு நிறுவனம் தொடங்கி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கிறேன். ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு வழிகாட்டுகிறேன்.
நான் உளவியலில் பட்டயப் படிப்பு பயின்றுள்ளதால், உளவியல் அடிப்படையிலும் மாணவர்களின் தேவை, திறமை அறிந்து அதற்கு ஏற்ப வழிகாட்ட முடிகிறது.
இன்றைய மாணவர்களிடம் மனஅழுத்தமும், சிறிய பிரச்சனைக்கும் அதீத முடிவெடுக்கும் அவசரமும் பரவலாகக் காணப்படுகின்றன. அதை மாற்றவும் நான் முயல்கிறேன்.
இளையோரின் இணையற்ற சக்தியை, விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வ செயல்களில் திருப்பவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கேற்ப, எனது முயற்சியில், மாவட்ட அளவிலான ஓரு ஆக்கி தொடர் நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் திட்டம். சமூக சேவையிலும் எனக்கு மிகுந்த நாட்டமுண்டு.
நான் அழகியமண்டபம் முசுலீம் கலைக் கல்லூரியில் சிறப்பு உதவிப் பேராசியராகப் பணிபுரிந்தேன். மேலும் பல்வேறு கல்லூரிகளில் வருகைதரும் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன்.
மாணவர்களுடன் கலந்துரையாடுவதும் அவர்கள் பிரச்சினையாகக் கருதும் செய்திகளைக் காதுகொடுத்துக் கேட்பதும் அதற்குத் தீர்வு கூறுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் என்னால் ஒளிரமுடிகிறது.
எனது தன்னம்பிக்கைப் பயிலரங்குகளில் பங்கேற்போர், உடனடியாகத் தமது கருத்தைக் கூறுவார்கள். உடனே எதுவும் கூறாமல், பின்னர் பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் போது கண்களாலேயே நன்றி சொன்னவர்களும் ஏராளம்.
நான் உளவியலுடன், இயற்கை மருத்துவப் பட்டயப்படிப்பையும் பயின்றுள்ளேன். அதன் அடிப்படையில், சொந்தமாக ஒரு நலவாழ்வு, இயற்கை மருத்துவ மையத்தை நடத்தி வருகிறேன்.
எனது அனுபவத்தில், மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இப்போது அதிகரித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறேன். முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய தலைமுறைக்கு வாய்ப்புகள், வசதிகள் அதிகம் தான். அதே அளவுக்கு மனநெருக்கடிகளும் அதிகரித்திருக்கின்றன.
அதற்கு, அன்பான, அக்கறையாக எடுத்துச் சொல்லும் பெரியோர்கள் இல்லாமல் நமது வீடுகள் சுருங்கிப் போனதும் அவர்களின் இடத்தைக் கைப்பேசிகள் எடுத்துக் கொண்டதும் முக்கியக் காரணம்.
குழந்தைகள் இயல்பாக, நல்ல விதத்தில் வளர்வதில் பெற்றோருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. பெற்றோரின் பேச்சை அல்ல, அவர்களின் செயல்களைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே பெற்றோரின் சொல் வேறு, செயல் வேறாக இருப்பதால் பயனில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அதேபோல, குழந்தைகளிடம் சில விசயங்களில் ‘இல்லை’ என்று சொல்வதற்கும் பெற்றோர் தயங்கக் கூடாது. எதிர்பாராத எதையும் தாங்கும் மனவலு இல்லாத பூஞ்சைகளாக அவர்களை வளர்த்து விடக்கூடாது.
பெங்களூருவில் உள்ள அறிவியல் கழகம் எனக்குக் கடந்த 2012-ஆம் ஆண்டு ‘பெல்லோசிப்பு” வழங்கியது.
அதற்கு அடுத்த ஆண்டில், தைவான் நாட்டின் பொறியியல், தொழில்நுட்பப் பல்கழைக்கழகம் என்னை அங்கு ஆராய்ச்சிப் பணிக்குத் தேர்ந்தெடுத்தது. அந்த ஆண்டு உலக அளவில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரில் ஒருத்தி நான். ஆனால், என்னால் அப்போதைய சூழலில் அங்கு செல்ல முடியவில்லை.
எனது அறிவியல் படிப்பு, பணிகளில் ஓர் இடைவெளி விழுந்து விட்டது உண்மை. தற்போது, நீர்நிலை போன்ற இயற்கை அமைப்புகள் தொடர்பான ஆய்வுப் பணிகளில் இணைந்து செயல்பட ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிலும் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நமது வார்த்தைகள், பிறரது வாழ்வை மலர வைப்பதைப் போல மகிழ்ச்சி எதுவும் உண்டா? அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், தன்னம்பிக்கைப் பேச்சாளராக எனது பயணத்தை முதன்மையாகத் தொடர நினைக்கிறேன்.
ஏராளமான, கல்வி, தொழில்துறை இளந்தலைவர்கள், தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.
_ பூ.வ. தமிழ்க்கனல்
Leave a Reply