பிழைப்பு

பிழைப்பு

  • By Magazine
  • |

போதை தலைக்கு ஏறியது…

கிரிக்கெட் மட்டை, கம்பு, இரும்புக்கம்பி என்று கையில் எது கிடைத்ததோ எடுத்துக் கொண்டார்கள். பத்துபேர் நான்கு இரு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள்.

சமத்துவ கழகம் கட்சியின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திய இளைஞர்கள் கட்டையையும் கம்பியையும் எடுத்துக் கொண்டு வெறித்தனமாய் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.

யேய்… யாருப்பா நீங்க… என்ன பண்றீங்க… வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி பெரியவர்கள் வெலவெலத்து போனார்கள்.

போலீஸ்க்கு போன் போடுங்க… சுந்தரத்துக்கு போன் பண்ணி கூப்பிடுங்கப்பா…

நிலைமையை உணர்ந்து சட்டென சுதாரித்த கருணாகரன் தானும் கைபேசியை எடுத்தார்.

அதற்குள் முத்தரசன் கருணாகரன் கையிலிருந்த கைபேசியை தட்டி விட்டான்.

அடிச்சு உடைங்கடா… முத்தரசன் நண்பர்களுக்கு கட்டளையிட்டு விட்டு பெரியவர்களை கோபக்கனல் வீச பார்த்தான்.

போலீசுக்கு போன் போட்டீங்கன்னா கை இருக்காது. நீங்கெல்லாம் பெரிய மனுசனுங்களாய்யா… கட்டியிருக்கிற வெள்ளை வேட்டிய அவுத்து வீசுங்கய்யா…

“தம்பி… நீ பண்றது நல்லாயில்ல…!” சொல்லிக் கொண்டே கை நீட்டிய பெரியவரை அடிப்பதற்கு கட்டையை ஓங்கினான் முத்தரசன்.

கொன்னுப்புடுவேன் பாத்துக்க… எதுய்யா நல்லாயில்ல… உங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு இப்படி பண்ணுவீங்களா…

ஒன்னும் தெரியாத புள்ளைங்க தப்பு பண்ணுச்சின்னா புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்புவீங்களா… அத விட்டுட்டு தாலி கட்டி வச்சிருக்குறீங்க… மண்டைல ஏதாவ இருக்காய்யா…”

சின்னஞ்சிறுசுக ஆசைப்பட்டுருச்சிங்க… சாதிய காரணம் காட்டி பிரிச்சிருவீங்கன்னு தான் இங்க வந்தாங்க…

இது கட்சி ஆபீஸா, கல்யாண மண்டபமா…

அவங்கள ஒன்னும் செஞ்சிடாத தம்பி… எங்கயோ போய் வாழ்ந்துட்டு போகட்டும், ஏன் தம்பி இந்த காலத்துலயும் சாதி பாக்குறீங்க… மனுசன மனுசனா பாருங்கப்பா…

“நிறுத்துய்ய…”

கருணாகரனை மேலும் பேச விடாமல் இடைமறித்தான் முத்தரசன்.

“என்னய்யா இந்த காலத்துலயும் நொந்த காலத்துலயும்னுட்டு… உன் பையனுக்கு யார கட்டி வச்சிருக்கிற… உன் பொண்ணுக்கு  எங்க மாப்பிள்ளை தேடிட்டிருக்கிற… சமத்துவத்தையும் சமூக நீதியையும் மொதல்ல உன் வீட்ல கொண்டுவா… அப்புறம் ஊருக்கு சொல்லலாம்.

எங்க இருந்தாலும் புள்ளைய கொண்டு வந்து விட்டுருங்க… இல்ல உங்க வீட்லதான் காரியம் நடக்குற மாதிரி ஆயிரும்…?

வெளியே அதற்குள் கூட்டம் கூடி விட்டது. காவல்துறைக்கு தகவல் பறந்திருந்தது. சிலர் கைபேசியில் வீடியோ எடுத்தார்கள். முத்தரசன் வெளியே வந்தான்.

பட்டப்பகல்ல வந்து அராஜகம் பண்றீங்க… கேக்க ஆள் இல்லேன்னு நெனச்சீங்களா…

தயங்கி நின்ற கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார். “யோவ்… இதெல்லாம் நாடக காதல் கும்பல்யா… இவனுங்கள நம்பி ஏமாந்துராதீங்க… குடும்பத்த கலைச்சி கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணம் பறிக்கும் கோஷ்டி… கவனமாக  இருங்க…”

“நண்பர்கள் நொறுக்கி போட்டு விட்டு வெளியே வர அவர்களோடு முத்தரனும் கிளம்பினான்.

நாடக காதல்…ஒரு குறிப்பிட்ட சாதியை நோக்கி வீசப்படும் வன்மமான வார்த்தையாகிப் போனது. ஆனால் இந்த நாடக காதலுக்கு சாதி, மதமெல்லாம் இல்லை.

ஏமாற்றுகிற ஏமாற்றப்படுகிற எல்லா காதலுமே நாடக காதல்தான்.

சமூக நீதி பேசுபவன் தனக்கு கீழே இருப்பதாக நினைத்துக் கொள்ளும் சாதியில் சம்மந்தம் வைத்துக் கொள்ள மாட்டான்.

நாடகக்காதல் என்று சொல்பவன் தனக்கு மேலானவன் என்று நினைக்கிற சாதியில் காதல் வந்தால் நாடக காதல் என்று சொல்ல மாட்டான்.

அப்போது அவனிடமிருந்து சமூக நீதி கருத்துக்கள் வரும்.

“எங்கடா இருக்க…” அந்த இரவு வேளையில் முத்தரசனின் அப்பா சண்முக பாண்டியன் கைபேசியில் தொடர்பு கொண்டார். “நம்ம பண்ண வீட்ல தான் இருக்கேம்ப்பா…”

என்னடா பண்ணி வச்சிருக்க… டி.வி, பத்திரிக்கைன்னு எல்லாத்திலேயும் உன் செய்திதான் ஓடிட்டிருக்கு. போலீஸ் வீட்டுக்கும் வந்துருச்சு… உன்னதான் தேடிட்டிருக்காங்க… அங்கேயே இரு… சாப்பிட்டிங்களா… எத்தனை பேர் இருக்குறீங்க…

கேட்டவர் போகிற வழியில் உணவகத்தில் தேவையானதை வாங்கிக் கொண்டு பண்ணை வீட்டுக்கு விரைந்தார்.

அங்கிருந்தவர்களை சாப்பிட சொல்லி விட்டு எல்லாம் முடிந்து உட்கார்ந்த பிறகு சண்முக பாண்டியன் பேச ஆரம்பித்தார்.

“நாலு பேருக்கு தெரிஞ்ச விசயம் இப்போ நாலா பக்கமும் தெரியுற மாதிரி பண்ணியிருக்கிற…

கேவலப்படுத்திட்டேன்னு நெனைக்கிறீங்களாப்பா… கொஞ்சம் பொறுங்க… அந்த ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு இந்த கேவலத்தை தொடச்சி எறியுறேன். நடுரோட்டுல வெட்டிக் கொன்னாத்தான் அவனுவனுக்கு புத்தி வரும்…

கொன்னுட்டு ஜெயிலுக்கு போவ… அப்புறம்… “அதுக்காக இந்த அவமானத்தோடவே வாழச் சொல்றீங்களாப்பா…”

“ஒருத்திதான் பெத்தவங்க வேணான்னு போயிட்டா… நீயும் கொலைகாரனாகி ஜெயிலுக்கு போயிட்டா நானும் உன் அம்மாவும் அனாதையாக வேண்டியது தான்… இதுக்காடா உங்கள பெத்து வளர்த்து இவ்வளவு தூரம் வளர்த்து விட்டேன்.”

உனக்கு இன்னும் வயசு இருக்கு, இன்னும் பாக்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கு… போனவளுக்காக உன் வாழ்க்கையை கெடுத்துக்காத… ஒரு உயிர்ப்பலி எடுத்த பாவம் உனக்கு வேணாம்…”

“அப்பா… ஒரு ஜீன்ஸையும் டி-ஷர்ட்டையும் போட்டுக்கிட்டு மண்டைய பங்கர கொத்து கொத்திக்கிட்டு வந்து நம்ம பொண்ணுங்கள ஏமாத்தி கூட்டிட்டுப் போயிருவானுங்க… வேடிக்கை பாக்க சொல்றீங்களாப்பா…”

“ச்சீச்சீ… என்ன பேசுற நீ…”

சண்முக பாண்டியன் முத்தரசனை அதட்டினார்.

“நீ பேசுறது நம்ம பொண்ண நாமளே கேவலப்படுத்துகிற மாதிரி இருக்கு. இதெல்லாம் வயசுக் கோளாறுடா… படிக்கிற புள்ளைக்கு வெளி உலகம் என்னத்த தெரிய போகுது. நல்லவனா கெட்டவனான்னு என்ன தெரியும். மேலோட்டமா பாத்து , பேச்சுல மயங்கி கடைசியில இப்போ இத்தனை நாளா பெத்து வளர்த்து ஆளாக்குன நம்மளையே தூக்கி எரியுற அளவுக்கு போயிருது…”

சண்முக பாண்டியனின் பேச்சு நடுங்கியது. நான் சரியா வளர்க்கலையோன்னு தோணுது; அத விடு…நீ உன் வாழ்க்கையை பாரு, கம்ப தூக்குறேன், அருவாளை தூக்குறேன்னு அழகான ஒரு வாழ்க்கையை வீணாக்காதே… காலையில போலிஸ் ஸ்டேசனுக்கு போவோம்; எல்லா நான் பாத்துக்கிறேன்.

முத்தரசனிடமிருந்து பார்வையை மற்றவர்களிடம் திருப்பினார்.

நான் சொல்றது உங்களுக்கெல்லாம் புரியுதா… செத்து போனா நாறிப் போற உடம்பு… ஒண்ணுமேயில்லை… ஆனா சாவுறதுக்குள்ள வாழ்க்கையில நெறைய  நல்ல விசயங்கள் இருக்கு… அதெல்லாம் கெடுத்துக்க வேணாம். உசுப்பேத்துற வேலையை விட்டுட்டு சொல்லி புரிய வச்சு கூட்டிட்டு வாங்க…

சண்முக பாண்டியன் எல்லோரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்.

மறுநாள்…

காவல் நிலையத்திற்கு முத்தரசனையும் அவன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் சண்முக பாண்டியன்.

இன்ஸ்பெக்டரிடம் ஏற்கனவே சண்முக பாண்டியன் பேசி வைத்திருந்ததால் அவரும் கட்சிக்காரர்களிடம் பேசி காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியிருந்தார்.

“எல்லாம் பேசிட்டேன், நான் பாத்துக்கிறேன், இன்னொரு விசயம்…”

இன்ஸ்பெக்டர் அழுத்தம் கொடுக்க சண்முக பாண்டியன் அவரை கூர்ந்து பார்த்தார்.

“உங்க பொண்ணும் அந்த பையனும் இங்கதான் இருக்காங்க…”

இன்ஸ்பெக்டர் சொல்லி முடிப்பதற்குள் முத்தரசன் துள்ளினான்.

எங்க ஸார் இருக்காங்க…

“தம்பி… அவங்க பாதுகாப்பு கேட்டு வந்திருக்காங்க” சண்முக பாண்டியன் முத்தரசனை அடக்கி விட்டு இன்ஸ்பெக்டரை பார்த்தார்.

“என்ன ஸார்… எங்களுக்கு எதிரா புகாரளிக்க வந்திருக்காங்களா…” “ ஆமா ஸார்… கல்யாணமே முடிச்சுட்டாங்க…ஒரு கட்சி சார்பாக வந்திருக்காங்க…”

சண்முகபாண்டியன் சில நொடிகள் மௌனம் காத்து விட்டு இன்ஸ்பெக்டரிடம் கேட்டார்.

என் பொண்ணுகிட்ட பேசணும், வர சொல்றீங்களா…

இன்ஸ்பெக்டர் ஏட்டு நாகராஜை பார்க்க அவர் சுவருக்க அந்தப் பக்கம் சென்று விட்டு சில நிமிடத்தில் திரும்பி வந்தார்.

அனுப்ப மாட்டேன்றாங்க சார்… பிரிச்சுருவாங்க, கொன்னுருவாங்கன்னு பயப்படுறாங்க…

ஏட்டு சொல்ல சண்முக பாண்டியன் விரக்தியாய் சிரித்தார்.

“வெட்டி எறிஞ்சுட்டு இழுத்துட்டு வர்றேம்ப்பா…” முத்தரசன் திமிறினான்.

சும்மா இருடா… வெட்டுவேன் குத்துவேன் காட்டு பயல மாதிரி… எல்லாம் முடிஞ்சு போச்சு…இனி என்ன… நானே போறேன் சார்.

சொல்லிவிட்டு எழுந்தவர் மற்றவர்களை வர வேண்டாம் என்று சொல்லி விட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு போனான். கூடவே ஏட்டு நாகராஜ் வந்தார்.

தந்தையை பார்த்ததும் கதறி அழுது காலில் விழுந்து விட்டாள்.

“என்னை மன்னிச்சிருங்கப்பா… என்னை ஏத்துக்குவீங்களாப்பா…”

அவள் கேட்ட போது தங்கராசுவும் அவன் கூட்டமும் பயந்து தான் போனது, போய் விடுவாளோ என்று!

“எழுந்திரு மொதல்ல…” தோள் பிடித்து தூக்கினார்.

“ நான் ஏத்துக்கிட்டாலும் நம்ம சாதி சனம் உறவு ஏத்துக்காது. என்னால அதையெல்லாம் விட்டுட்டு வர முடியாது. நீ இப்படியே இருந்துக்க… உன் கிட்ட கேக்க ஒரு கேள்வி இருக்கும்மா…”

“நீ பொறந்தப்போ வீட்டுக்கு மகாலட்சுமி வந்துட்டான்னு சந்தோசப்பட்டோம். பசங்கள விட உன் மேலதான் உயிராக இருப்பேன். கொஞ்சலும் கெஞ்சலுமா தாலாட்டி, சீராட்டி வளர்த்து உன்னோட ஒவ்வொரு வளர்ச்சிலேயும் ஒரு சந்தோசத்த கண்டோம். பொண்ணதான் ரொம்ப நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். காரணம் படிப்பு ஒரு பொண்ண எப்படியும் காப்பாத்திரும்னு ஒரு நம்பிக்கை. சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குது. எல்லாத்தையும் விட்டுட்டு இதுதான் வாழ்க்கைன்னு வந்துட்ட…

நான் கேக்குறதெல்லாம் ஒன்னே ஒன்று தான். உயிரா வளர்த்தேனே…என்னை ஏமாத்திக்கிட்டு போக எப்படியம்மா உனக்கு மனசு வந்துச்சு…”

சண்முக பாண்டியனின் கண்கள் கலங்கி போய் நின்றது. ஓங்கி அழுதாள்.

“என்னை மன்னிச்சிருங்கப்பா… மன்னிச்சிருங்கப்பா…” கதறி அழுதாள்.

“ மன்னிச்சிட்டேம்மா… நீ என்னை எதிரியாக பாத்திருக்கலாம். என் உயிரா வளர்த்த உன்னை எப்படிம்மா நான் எதிரியா பாக்க முடியும். ஆனா இந்த வேதனையை மறக்க முடியாதே… நீங்களும் ஒரு பிள்ளையை பெற்று வளர்ப்பீங்கல்ல… இப்படித்தான் நம்மளையும் வளர்த்துருப்பாங்கன்னு ஒரு எண்ணம் வந்துச்சுன்னா அப்போ தெரியும் இந்த பெத்தவங்ககளோட வேதனை…”

எங்க இருந்தாலும் நல்லாயிரு. அந்தப் பக்கம் மட்டும் வந்துடாத… வீட்ல இல்லேன்னாலும் எங்கோ ஒரு எடத்துல இருக்குறியேன்னு நிம்மதியாய் போயிரும். வர்றேம்மா…

கண்ணீர் வடிந்து ஓட துடைத்துக் கொண்டே விலகி நடந்தார். ஒரு வாரம் கழிந்திருக்கும்… ஒரு தேனீர் கடையில் தங்கராசுவை பார்த்த ஏட்டு நாகராஜ் நலம் விசாரித்தார்.

“நல்லாயிருக்கியாப்பா…” நல்லாயிருக்கேன் சார்… என்ன வேலைக்கு போற… தேடி கிட்டுக்கிருக்கேன் சார். வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா இருக்க வேண்டாமேன்னு லோக்கல்ல பெயிண்டிங் வேலைக்கு போயிட்டிருக்கேன். வேலை இல்லை… சொந்த வீடு இல்லை… கல்யாணத்த முடிச்சாச்சு… அந்தாளுதான்ய பாவம்… பெத்த மகளாச்சே… எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும். மனசு உடஞ்சி போயிட்டாரு…

வேலை இருக்கா, பணம் இருக்கான்னு பார்த்து வர்றது இல்ல சார் காதல்… எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்க கூடிய சக்தி காதலுக்கு உண்டு. எப்படியும் பொண்ண இன்னொரு வீட்டுக்கு அனுப்பித்தான் ஆகணும். மனுசன மனுசனா பாக்க மாட்டேங்குறானுங்க… இந்தக் காலத்துலேயும் சாதி பாத்துட்டு அலையுறாங்க…

“மத்தவங்க எல்லாம் சாதி பாக்குறாங்க… நீங்க பாக்குறதில்லையா. அப்படின்னா மேக்க இருக்கிற ஊர்ல ஏன் நீங்க யாரும் சம்பந்தம் வச்சுக்கிறதில்ல… அவங்க உங்கள விட கீழானவங்களா… அப்போ சமூக நீதி, சமத்துவமெல்லாம் நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க வேண்டியது தான்.

விவரம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா… கலப்பு திருமணம் தான் சாதிய ஒழிக்கும். சாதி பாத்தா சார் காதல் வருது…

உங்களுக்கு கீழன்னு நெனைக்கிற சாதில சம்பந்தம் வச்சிக்க மாட்டீங்க… காதலும் வராது… ஆனா கலப்பு திருமணம் சாதிய ஒழிக்கும்ன்னு பேசுவீங்க… இனி நீங்க எதுக்கும் சாதிய பயன்படுத்த மாட்டீங்க… எந்த இடத்துலேயும் சாதிய பயன்படுத்த மாட்டீங்க… சாதிய ஒழிச்சிட்டீங்க… ஒழிக்கிறேன்னு ஒருத்தன், வளர்க்குறேன்னு ஒருத்தன், ரெண்டு பேருமே வன்மத்தை வளக்குற வேலையைத்தான் பாக்குறாங்க அரசியல்ல இருந்து சினிமா வரைக்கும்…

சாதிய சமத்துவம் மட்டும் தான் சாத்தியம்… இங்க யாரும் மேலேயும் இல்ல, கீழேயும் இல்ல… எனக்கு இருக்கிற வலி உனக்கும் இருக்கும். உனக்கு இருக்கிற உணர்வு எனக்கும் இருக்கும்.

சாதிப்பெருமை பேசலாம். தான் சார்ந்த சாதிய மேல கொண்டு வரப் போரடலாம். முன்னேறிப் போகணும். ஆனா அடுத்தவனை சாச்சிகிட்டு போகணும், அடிச்சிட்டு போகணும் என்று நினைக்க கூடாது. “நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க…”

தங்கராசு புரிந்தும் புரியாமலும் விழித்தான். நாம சாதி சண்டை போட்டுட்டிருப்போம். எனக்கு கீழதான்டா நீங்க எல்லாரும்னு ஒருத்தன் சிரிச்சிட்டிருப்பான். சாதிக்கு தலைமை தாங்குற எவனும் சாதாரணமாக வாழல… நல்லா சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு தேவைன்னா இன்னொரு சாதில சம்பந்தம் வச்சிப்பான். நாம வச்சோம்னா அரசியலாக்குவான்.

நம்ம சாதி மேல வரணும்னா நம்ம சாதிப் பொண்ண மேல கொண்டு வரணும். அத விட்டுகிட்டு கலவரம் உயிர் பலின்னு காலத்தை வீணாக்கிட்டு திரியுறீங்க…

பாத்து நடந்துக்க தம்பி… அந்த சண்முகபாண்டியன் நல்ல மனுஷன்… உங்க பாதுகாப்புக்காகத்தான் அந்தப்பக்கம் வர வேணாம்னு சொல்லியிருக்காரு… இந்த பொண்ண மட்டும் ஏமாத்திட்டான்னு கண்ண கசக்கிக்கிட்டு போய் நின்னுச்சோ… அருவாளோட அவரே வந்துருவாரு. பாத்துக்க… வரட்டுமா…!

ஏட்டு சொல்லிவிட்டு நடக்க தங்கராசு குழம்பிய மனநிலையில் தலையை சொறிந்து கொண்டிருந்தான்.   

– நாசரேத் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *