மனதின் சக்தி

மனதின் சக்தி

  • By Magazine
  • |

– சஜிபிரபு மாறச்சன்

மனோசக்தி இருந்தால் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடியும். எப்போதும் தன்னைத்தானே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளுதல் கூடாது. இவ்வுலகில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல. சக மனிதரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கைகளில் இருக்கிறது. அதை உங்களைத் தவிர யாரும் தட்டிப் பறித்திட முடியாது. உங்களுக்கு நண்பனும் நீங்கள் தான். உங்களுக்கு எதிரியும் நீங்கள் தான். உங்களுக்கு எஜமான் நீங்கள் தான். மனிதனாக பிறந்த அனைவருக்கும் இறைவன் அற்புத சக்தியை கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்றால் போராட்டம் இருக்கத்தான் செய்யும். அதற்காக வாழ்வை குறை கூறி நேரத்தை வீணாக்கி கொண்டிருக்காதீர்கள். இவ்வுலகில் எது வேணும் என்றாலும் சம்பாதிக்கலாம். ஆனால் கடந்து போன நேரத்தை நாம் விலைக்கு வாங்க முடியாது.  எந்த நிலையிலும் அச்சமில்லை என்று துணிவோடு எழுந்து நில்லுங்கள். நீங்கள் எந்த வகையிலும் யாருக்கும் தாழ்ந்தவரோ, இளைத்தவரோ, சளைத்தவர்களோ அல்ல. இதை நீங்கள் உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

உலகில் சிலர் அனைத்து வசதிகளையும் அமோகமாக பெற்றிருப்பார்கள். கார், பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் முகத்தை தொங்கப் போட்டு கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ எவ்வித வசதிகள் இல்லாமலிருந்தும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

முகத்தை தொங்கப் போட்டவர்கள் இல்லாததையும், பொல்லாததையும் மனதில் திணித்துக் கொண்டு திண்டாடுவார்கள். ஆனந்த நிலையில் இருப்பவர்கள் தங்கள் மனதை சுத்தம் செய்து நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டாடுவார்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்கள் மனதை அவ்வண்ணம் தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

எதிலும் எப்பொழுதும் பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் நிதானத்தை கடைபிடியுங்கள். ஆரவாரம் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் பொறுப்புகளைச் சீராக நிறைவேற்றுங்கள். இத்தனை ஆற்றலும் உங்கள் மனதிலிருந்து எழுபவை தான். அதனால் உங்கள் முன்னேற்றத்துக்கு உங்கள் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பு. நீங்கள் தான் என்றால் உங்கள் மனம் தான்.

 உங்கள் மனதில் அவசியமற்ற சுமைகளை ஏற்றிக் கொண்டு திண்டாடாதீர்கள். விவேகம் வேண்டும். கடுகடுப்பும், சிடுசிடுப்பும் இல்லாமல் உங்கள் முகத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். மனோசக்தியை நன்கு அறிந்து அதை உங்கள் வாழ்வில் செயலாற்றி பார்போற்ற வாழுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *