நல்ல வார்த்தை பேசுங்க

நல்ல வார்த்தை பேசுங்க

  • By Magazine
  • |

இரா.சிவானந்தம்

நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. எப்போது யாரிடம் எதை பேசினாலும் நல்ல வார்த்தைகளாகவே பேசுங்கள்.

ஒரு உறவினர் உடம்பு சரியில்லாத ஒரு கவிஞரைப் பார்க்கச் சென்றார். அவரிடம் எங்க தெருவிலும் ஒருவர் இதே போன்று தான் உடம்பு சரியில்லாமல் இருந்தார். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறார்.

மற்றொரு நாள் ஒரு கிராமத்து நண்பர் வந்து நலம் விசாரித்து விட்டு, இதெல்லாம் சரியாகி விரைவில் குணமாகி விடுவீங்க. உங்கள் நல்ல குணத்திற்கு ஒரு குறையும் வராது என தைரியம் சொல்லிச் சென்றார்.

ஒரு மருத்துவர் திறமையானவர். ஆனால் தன்னிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களிடம் நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல முற்படுவதில்லை. உரிய பணமும் வாங்கி மருந்து மாத்திரைகளும் கொடுத்து விட்டு இந்த மாத்திரைகளை நான்கு நாள் சாப்பிட்டு பாருங்கள். பிறகு பார்ப்போம். போயிட்டு வாங்க என்பதே ரெடிமேடு  வார்த்தையாக இருக்கும். வியாதிக்கு நான்கு நாள் சாப்பிட்டு பார்க்கவா அவரிடம் மருத்துவத்திற்கு வர வேண்டும்.

ஆனால் மற்றொரு மருத்துவரோ இந்த மருந்தை சாப்பிடுங்கள் குணமாகி விடும். நலமாய் சந்திப்போம் என்று எப்போதும் நோயாளிகளிடம் கூறுவார். அவரது வார்த்தைகளிலே பாதிநோய் குணமாகி விடும்.

வெளியே ஊருக்குப் போகும் போது போகிறேன் என்று சொல்லாதீர்கள்…போயிட்டு வருகிறேன் என்று சொல்லுங்கள். வெளியே போகிறவர்களை போ என்று சொல்லி வழியனுப்பாதீர்கள். போயிட்டு வாங்க என்று சிறப்பான வார்த்தைகளை சொல்லுங்கள். வள்ளுவரும் அதனால் தான்

இனியா உளவாக இன்னாதக் கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார்.

ஒரு வார்த்தை கொல்லும்… ஒரு வார்த்தை வெல்லும். கோபத்தில் கூட ஒருவரை சபிக்காதீர்கள். அவர் உணரும்படி சொல்லிப் பாருங்கள்.

ஒரு தொடர் சொற்பொழிவாளர் இராமாயணம்,  மகாபாரதம் ஒரு மாதம் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் ஒவ்வொரு நாள் நிகழ்வின் நிறைவிலும் கதையின் ஒரு பாகமான ஒரு நல்ல பகுதியை சொல்லியே நிறைவு செய்வார்கள். பெருந்தலைவர் காமராஜர் யார் என்ன கேட்டாலும் அது கடினமான கோரிக்கையாக இருந்தாலும் முடியாது என்று சொல்ல மாட்டார். ஆகட்டும் பாக்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறி அனுப்புவார். ஒரு நண்பர் கைபேசி அழைப்பை எடுத்தவுடன் வாழ்க வளமுடன் என ஆரம்பித்து நிறைவில் நலமுடன் வாழ்க என கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் மணவிழா போன்ற மங்கள விழாக்களில் விழாவிற்குரியவர்களை வாழ்த்துவதை தவிர்த்து எதிர் கட்சியினரை தாக்குவதற்கு அந்த நிகழ்வினை பயன்படுத்துவதை என்ன சொல்வது? அதிலும் கடுமையான வார்த்தைகள் வேறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *