தலையங்கம்
– இரா. அரிகரசுதன்
அண்ணா பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்த புதிய முடிவை அறிவித்திருக்கின்றது. அதன்படி உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறையை 20.11.2024 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருப்பதை அறியமுடிகின்றது.
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த சுற்றறிக்கையின் மூலம் இனிமேல் நிரந்தர உதவிபேராசியர்களோ, அலுவலர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் ஆசிரியர் அல்லாத பதவிகள் ஏராளமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் அண்மையில் தேசியக் கொள்கை 2020 தொடர்பான கருத்தரங்கிற்காக சென்னை வந்திருந்தபோது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று அறிவுறித்தியிருந்தார்.
இத்தகையச் சூழலில் இந்த அறிவிப்பு கல்வியாளர்களிடையேயும் பேராசிரியர் பெருமக்களிடமும் பேராசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களிடையேயும்கூட மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு சமூகத்தின் இளையோர்களின் திறன் மேம்பாட்டிற்கும் அறிவாற்றலுக்கும் காரணகர்த்தாக்களாக இருக்கின்ற ஆசிரியப் பெருமக்களின் அன்றாட வாழ்விற்கும் பணி உரிமைக்கும் கேடு விளைவிக்கும் இவ்வறிவிப்பு எந்த வகையிலும் நாட்டின் மேம்பாட்டிற்கு பயன்தராது.
எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கல்வியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கின்ற காரணம் அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியை தன்கையிலிருந்து அரசு கைகழுவுவதும், முழுக்க தனியார்மயப்படுத்தி பணம்கொடுத்து நுகரும் பண்டமாக மாற்றுவதும் துயரத்தை தலையில் வாரிபோடுவதே ஆகும்.
ஏற்கனவே சரியான அரசு உயர்கல்விக்கூடங்கள் அமையப்பெறாத பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருங்கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு கல்லூரிகளின் பல்கலைக்கழகங்களின் புழங்குச்சூழல் குறைகள் தீர்க்கப்படாமலும் புதியக் கட்டமைப்புகள் ஆமைவேகத்திலும் அல்லாடிக்கொண்டிருக்கின்றன. சரியான ஆசிரியர்கள் இல்லை மாணவர்களை அதிக எண்ணிக்கையில் எடுப்பதற்கான திட்டமோ வகுப்பறைகளை அதிகப்படுத்தும் திட்டமோ, புதிய துறைகளையும் இருக்கைகளையும் வருடந்தோறும் ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஏதேனும் இருக்கினறனவா? என்பதும் தெளிவாக தெரியாமல் இருக்கின்றோம்.
இது இவ்வாறே செல்வது தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்புடையது ஆகாது. எனவே, அரசும் சம்பந்தப்பட்டவர்களும் முதற்கண் தமிழகம் தழுவிய அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் நியமனத்தில் அக்கறை கொண்டு நிரந்தரப்பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். புதிய அரசு கல்லூரிகள் ஆரம்பிப்பது, புதியத் துறைகளை ஆரம்பிப்பது போன்ற விடயங்களை எதிர்கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு குறைந்தப்பட்சமாக ஐந்தாண்டு திட்டங்களாக வேணும் தீட்ட வேண்டும். இதற்காக கல்வியிற் பெரிய, அனுபவத்தில் சான்ற அறிஞர்பெருமக்களின் ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Leave a Reply