– வழக்கறிஞர் பி. விஜயகுமார்
வக்கீல்களுக்கு சில நிபந்தனைகள்
கணவன் – மனைவியிடையே நடந்த விவாகரத்து வழக்கு இது. மனைவி எதற்கெடுத்தாலும் கணவனிடம் தகராறு செய்யும் நிலையை கொண்டவராக இருந்தாள். இறுதியில் உச்சக்கட்டமாக கணவனிடம் உனது பெற்றோர்களிடமிருந்து பாகப்பிரிவினை செய்து சொத்து வாங்கவில்லை என்றால் நான் தூக்குப்போட்டு சாவேன் என மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தார். இதனால் கணவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் கலக்கத்தில் இருந்தனர்.
மனைவி தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லவே தாக்குப்பிடிக்காத கணவன் அவள் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தான். விசாரணையின் முடிவில் குடும்பநல நீதிமன்றம் கணவனுக்கு விவாகரத்தும் கொடுத்து விட்டது.
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மனைவியின் வக்கீல் தூண்டுதலால் பல வழக்குகள் கணவன் குடும்பத்தார் மீது தாக்கல் செய்யப்பட்டதாம். உதாரணமாக குடும்ப வன்முறைச்சட்டம் (DVC). வரதட்சிணை வழக்கு (Dowry Case) ஆகியவைகள் கணவன் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டதாம்.
கணவனை பழி வாங்குதற்காக சம்மந்தமில்லாத அவன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் மேற்படி வழக்குகளில் சேர்த்து விடுவர். கணவனின் தங்கையும், அண்ணனும் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பர். அவர்களையும் அனாவசியமாக இவ்வழக்கில் சேர்த்து விடுவர். இதனால் கணவன் குடும்பத்தாருக்கும் மனைவி குடும்பத்தாருக்கும் இன்னும் பகை வளரும். அடிதடிகள் நடக்கும். இரு குடும்பங்களிடையே தடிமமான வார்த்தைகள் பறக்கும்.
இதையெல்லாம் கவனித்த நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகள் நடத்தும் வக்கீல்கள் முதற்கட்டமாக கணவன்- மனைவியிடையே சமாதானம் பேசி இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு வழிவகைகள் காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் சில வக்கீல்கள் விவாகரத்து வழக்கிலிருந்து பல கிரிமினல் வழக்குகள் கணவன் மனைவியிடையே வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். சில வக்கீல்கள் கணவன்- மனைவியிடையே உள்ள சிறுசிறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி விடுகின்றனர் என்று நீதிமன்றம் கருதுகிறது. தமது ஆதாயத்திற்காக இரு குடும்பத்தை பிளவுபடுத்துகிறார்கள் என நீதிமன்றம் கருதுகிறது. கட்சிக்காரர்கள் பொய் வழக்கு போடச் சொன்னாலும் வக்கீல்கள் அதை செய்யக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
இது விஷயமாக நீதிமன்றம் சில வழிமுறைகளை வக்கீல்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு கடைப்பிடிக்காத வக்கீல்கள் மீது பார் கவுன்சில்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த வழிகாட்டுதலில் நீதிமன்றம் தமது கருத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியமானதா என்றால் அது கேள்விகுறிதான்.!
Leave a Reply