ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம்
தமிழில்: நாணற்காடன்
பெரிய மிக அழகான தந்தூர் ரொட்டி இருந்தது. ஆனால், வெஜிடபிள் கிரேவியால் தொட்டுக் கொண்ட கவளம் வாய்க்குப்
பிடிக்கவில்லை.
“இவ்வளவு காரம்…” நானும் என் குழந்தைகளும் ஆ… ஊ… என்று அலறிக் கொணடிருந்தோம்.
“இங்கே ஆட்களின் நடமாட்டம் அதிகம். இந்தப் பகுதியில் ஒரே ஒரு மதுபானக் கடைதான் இருக்கிறது. ஆட்கள் நன்றாகக் குடித்துவிட்டால் ?நல்ல காரமான கிரேவி தான் கேட்பார்கள்.” தந்தூரி கடைக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இங்கே… சாராயம்…” “ஆமாம் எல்லோரும் மது அருந்துவார்கள். யாரையாவது கொலை செய்து விட்டு வந்தால்,
கொஞ்சம் அதிகமாகவே குடிப்பார்கள்.”
“இங்கே அப்படியெல்லாம் நடக்கின்றனவா…”
“நேற்று முன்தினம், ஐந்தாறு பேர் வந்தார்கள். ஒருவனைக் கொன்று விட்டு வந்திருக்கிறார்கள். நிறைய மது அருந்தியிருந்தார்கள். கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். பாருங்கள், என் மூன்று நாற்காலிகள் உடைந்து விட்டன.
போலீஸ்காரர்களை கடவுள் தான் ஆசீர்வதிக்க வேண்டும். போலீஸ்காரர்கள் அவர்களைப் பிடித்துச் சென்றனர். அவர்கள் மட்டும் விரைந்து வராமல் போயிருந்தால், என் அடுப்பில் ஒரு செங்கல் கூட மிஞ்சியிருக்காது. ஆனால், நாங்களும் அவர்கள்
சம்பாதிப்பதைச் சாப்பிடுகிறோம்.”
கௌசல்யா நதியைக் காண வேண்டும் என்று அன்றைய தினம் மனம் போன போக்கில் நான் சண்டிகரில் இருந்து வேறொரு
கிராமத்திற்குப் போயிருந்தேன். நண்பர்களுடனான பேச்சுக்குள் மது அருந்துவது பற்றியும் வந்துவிட்டது. மதுவிலிருந்து இரத்தம் சிந்துவது வரை. எனவே, அந்தக் கிராமத்திலிருந்து என் குழந்தைகளுடன் விரைவாகத் திரும்பி வந்துவிட்டேன்.
நன்கு பூசி மெழுகப்பட்ட தந்தூரி அடுப்பு திறந்த நிலையில் உள்ளே இருந்தது. உள்ளே ஒரு பக்கம் ஆறு-ஏழு காலி சாக்குத்
துணிகளால் ஆன திரைச்சீலை நீட்டப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் மூன்று கட்டில்கள் கிடந்தன. அவை தந்தூரி
உரிமையாளரின் குழந்தைகளும் மனைவியும் கூட அங்கே வாழ்ந்து வருவதாகக் காட்டின. அவ்வளவு ஆபத்து இல்லை என்று
நினைத்தேன். இங்கு பெண்கள் மரியாதையாக வாழலாம் போலத் தான் இருக்கிறது.
ஒரு பெண் சாக்குத் துணிகளை மடித்தாள். வெளியே எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்து என் அருகில் நின்றாள்.
“அக்கா, என்னை அடையாளம் தெரியவில்லையா?”
“இல்லையே…”
எளிமை நிறைந்த இளம் பெண். நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் என் நினைவுக்கு வரவில்லை.
“நான் உங்களை அடையாளம் கண்டுகொண்டேன். நீங்கள் கடந்த ஆண்டும், சொல்லப் போனால் அதற்கு முந்தைய ஆண்டும் கூட வந்தீர்கள்!”
“ஆமாம் வந்திருந்தேன்.”
“முன்னால் மைதானத்தில் ஒரு திருமண ஊர்வலம் கூட நடந்ததே” “ஆமாம் அது எனக்கு நினைவிருக்கிறது.”
“அங்கே பல்லக்கில் உட்கார்ந்திருந்த எனக்குப் பணம் கொடுத்தீர்கள்.”
எனக்கு ஞாபகம் வந்து விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சண்டிகர் சென்றிருந்தேன். அங்கு புதிய வானொலி நிலையம் திறக்கப்பட இருந்தது. முதல் நாள் கூட்டத்தில் கவிதை வாசிப்பதற்காக எனது டெல்லி அலுவலகம் என்னை அனுப்பியிருந்தது.
ஜலந்தர் நிலையத்திலிருந்து மோகன் சிங்கும் ஒரு ஹிந்திக் கவிஞரும் வந்திருந்தனர். கூட்டம் விரைவில் முடிந்தது. நாங்கள்
மூன்று-நான்கு எழுத்தாளர்கள் சண்டிகரில் இருந்து இந்த கிராமத்திற்கு கௌசல்யா நதியைப் பார்க்க வந்திருந்தோம்.
நதியை அடைய சுமார் ஒன்றரை மைல் கீழ் நோக்கிப் போக வேண்டும். திரும்பி ஏறும் போது ??நாங்கள் அனைவரும் ஒரு
கோப்பை சூடான தேநீர் குடிக்க விரும்பினோம். மிகவும் சுத்தமான மற்றும் திறந்த வெளி கடையாக இது இருந்தது. இங்கு தான்
ஒரு கோப்பை சூடான தேநீர் குடித்தோம். அன்றைய தினம், இந்தக் கடையில் இறைச்சி, தந்தூரி ரொட்டிகள் மற்றும்
இனிப்புகள் நிறைய சமைக்கப்பட்டிருந்தன. தந்தூரி விற்பவர் சொல்லிக் கொண்டிருந்தார். “இன்னைக்கு என் மருமகளின்
பல்லக்கு இங்கே கடந்து போகும். நானும் ஏதாவது செய்ய வேண்டும் இல்லையா…”
பின்னர் பல்லக்கு எதிரே இருந்த மைதானத்தில் இறங்கியது. பல்லக்கு முந்தைய ஏதோவொரு கிராமத்தில் இருந்து வந்தது.
அது முன்னால் செல்ல வேண்டியிருந்தது. வழியில் மாமா வரவேற்றார்.
“திருமணம் என்பதும் ஒரு விசித்திரமான விசயம் தான். வரும் போதும் வண்ணமயமாக இருக்கிறது. போகும் போதும்” என்று
எங்களில் யாரோ ஒருவர் கூறினார். தேநீர் மிடறுகளுடன் வண்ணத்தின் தத்துவமும் சூடாக உள்ளே இறங்கியது.
“இருங்கள், புது மணப்பெண்ணின் முகத்தைப் பார்த்துவிட்டு வருகிறேன். இன்று அவள் முகத்தில் அப்படி என்ன வண்ணம் இருக்குமோ..” என்று நான் அப்போது சொன்னது ஞாபகம் வந்தது. பிறகு நண்பர்கள், “எங்களை யாரும் பல்லக்கிடம் போக விடமாட்டார்கள்.
நீங்கள் போய்ப் பார்க்கலாம். ஆனால், வெறுங்கையுடன் போகாதீர்கள்” என்றனர்.
நான் சிறு புன்னகையுடன் பல்லக்கின் அருகே சென்றேன். பல்லக்கின் திரைச்சீலை ஒரு பக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தது.
அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம், “நான் மணமகளின் முகத்தைப் பார்க்கலாமா?” “தாராளமாகப் பாருங்கள் – நம் மணமகள்
கைப்பட்டால் அழுக்காகிவிடுவாள்…” உண்மையில், அவளின் அழகான மூக்குத்தியில் ஒளிவீசிப் புன்னகைக்கும் முகத்தை மறைப்பது அவ்வளவு எளிதானது இல்லை.
நான் ஒரு ரூபாயை அவள் உள்ளங்கையில் வைத்தேன். நான் திரும்பி வரும்போது, ??என் நண்பர்கள் சொன்னார்கள், “கொஞ்சம் நேரம்
முன்பு நீங்கள் கவிதை வாசித்தபோது, உங்கள் கையெழுத்தை வாங்குவதற்காக எத்தனைக் கல்லூரி பெண்கள் ரூபாய் நோட்டுகள்
நீட்டினார்கள்.”
அந்தப் பணத்தைக் கொடுத்தது யார் என்று அந்த மணப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் அவளும் கையெழுத்துக்
கேட்டிருப்பாள்.
இது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. எனக்கு முழுமையாக நினைவுக்கு வந்துவிட்டது. “நீ – அந்தப் பல்லக்கிலிருந்த பெண்ணா?”
“ஆமாம் அக்கா!”
இரண்டே வருடத்தில் இளம் பெண்ணாக இருந்தவளை முழுமையான பெண்ணாக மாற்றி விட்ட நிகழ்வு என்னவாக இருக்கும்? அந்த
நிகழ்வின் அறிகுறிகள் அவள் முகத்தில் தெரிந்தன. ஆனாலும் அவளிடம் அதைப் பற்றி எப்படிக் கேட்பது என்று
தெரியவில்லை?
“அக்கா நான் ஒருமுறை அல்ல, இரண்டு முறை உங்கள் படத்தைச் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். இங்கே வரும் பலரும்
செய்தித்தாள் வைத்திருப்பார்கள். அவர்கள் ரொட்டி சாப்பிட்டு விட்டு இங்கேயே வைத்து விட்டுப் போய் விடுவார்கள்.
“உண்மைதான் நீ என்னை அடையாளம் கண்டு கொண்டாயா?” “அந்த நிமிடமே நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் அக்கா
உங்கள் படத்தை ஏன் அச்சிடுகிறார்கள்?”
என்னால் விரைவான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி ஒரு கேள்வியை இதுவரை யாரும் என்னிடம்
கேட்டதில்லை. சற்றே வெட்கத்துடன், “நான் கவிதைகள், கதைகள் எழுதுகிறேன்….” என்றேன்.
“கதைகளா? அக்கா அந்தக் கதைகள் உண்மையானவையா, பொய்யானவையா?”
“கதைகள் உண்மையானவை தான். ஆனால் அதில் வரும் பெயர்கள் பொய்யானவை. எனவே கதைகள் உண்மையானவையா,
பொய்யானவையா என்று கண்டுபிடிக்க முடியாது.”
“என் கதையையும் எழுத முடியுமா, அக்கா?” “நீ சொன்னால், கண்டிப்பாக எழுதுவேன்.”
“என் பெயர் கர்மான்வாலி (அதிர்ஷ்டசாலி). என் பெயரை நீங்கள் பொய்யாக எழுதாவிட்டாலும், நான் எந்தப் பொய்யையும்
கூறமாட்டேன். நான் எப்போதும் உண்மையைத் தான் பேசுவேன் – ஆனால், யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை.”
அவள் என் கையைப் பிடித்து சாக்குத் துணிகளுக்குப் பின்னால் கிடந்த கட்டிலுக்கு அழைத்துச் சென்றாள்.
“திருமணம் நிகழவிருந்தபோது, ??என் மாமியார் வீட்டிலிருந்து இரண்டு பெண்கள் எனக்கு அளவெடுக்க வந்தனர். அதில் ஒரு பெண்
என் வயதுடையவள். என்னைப் போலவே இருப்பாள். அவள் தூரத்து உறவு வகையில் எனக்கு நாத்தனார் முறையாக இருக்கலாம்.
என் சல்வார்-கமீஸ் அளவுகள் அளந்த பிறகு, 'முற்றிலும் என் அளவுகள் தான் உங்களுக்கும். அண்ணி, கவலைப்படாதீங்க. நான்
தைக்கும் உடைகள் உங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.”
“நிஜமாகவே அவள் தைத்துக் கொடுத்த எல்லாத் துணிகளும் எனக்குக் கச்சிதமாக இருந்தன. அவள் என்னோடு சில மாதங்கள்
தங்கியிருந்து வேறு துணிகளும் தைத்துக் கொடுத்தாள். என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும். 'அண்ணி, நான் ரெண்டு மாசம் கழிச்சு வந்தாலும் சரி, ஆறு மாசம் கழிச்சு வந்தாலும் சரி. வேறு யாரிடமும் துணிகளைத் தைக்கக் கொடுக்காதீங்க” என்று என்னிடம்
சொல்வாள்.
“எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஆனால், அவளிடம் எனக்குப் பிடிக்காத ஒரே ஒரு விசயம். அவள் எனக்காக எந்த
ஆடைகளைத் தைத்தாலும், அதை அவள் முதலில் அணிந்து பார்ப்பாள். 'எனக்கும், உங்களுக்கும் ஒரே அளவு பாருங்கள். எனக்கு
எப்படிக் கச்சிதமாக இருக்கிறது? உங்களுக்கும் கச்சிதமாக இருக்கும்.” என்று சொல்வாள்.
“எந்த ஆடைகளை அணியும் போதும் ??இது தான் என் நினைவுக்கு வந்தது. புதிய ஆடைகளாக இருந்தாலும் கூட, அவை அவள்
போட்டுக் கழற்றியவை தான், இல்லையா?”
கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட சாக்குத் திரையும், மூங்கிலில் செய்யப்பட்ட தளர்வான கட்டில் ஒன்றும் இருந்தது. போர்வை
மொத்தமாகவும், மென்மையாகவும் இருந்தது. அந்தப் பெண் அப்பாவியாகவும், படிப்பறிவற்றவளாகவும் இருந்தாள் –
ஆனால், அந்த எண்ணம், மிகவும் நுட்பமாக, மென்மையானதாக இருந்தது. நான் வியப்படைந்தேன்.
“ஆனால் அக்கா, நான் என் உணர்வுகளை வெளிக்காட்டவே இல்லை, அந்த அப்பாவிப் பெண்ணின் மனம் சுருங்கிப்
போய்விடுமில்லையா?”
“அப்புறம்?”
“அதன் பிறகு, ஒன்றரை வருடங்கள் கழித்துத் தான் யாரோ எனக்குச் சொன்னார்கள். அவளுக்கும் என் கணவருக்குமிடையே காதல்
ஏற்பட்டிருக்கிறது. தாத்தா-பேரன் உறவு முறையில் சகோதரன் போல் தெரிகிறது. ஆனால் அவளது உடன்பிறந்த சகோதரன்
இதை விரும்பவில்லை. அவன் தன் சகோதரியின் கழுத்தைக் கழற்றி வீசி விட்டான்.”
“தோட்டத்தில் களை பறித்து வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்தக் காதல் பொருத்தம் ஏற்பட்டது என்று யாரோஎன்னிடம் சொன்னார்கள்.” கண்ணீரில் நனைந்த கர்மான்வாலி என் கையைப் பிடித்துக் கொண்டாள். “அக்கா, நான் சொல்வதை தயவு
செய்து புரிந்து கொள்ளுங்கள். என்னால் போட்டுக் கழற்றியதை அணிந்து கொள்ள முடியாது – எனது கோடா கரைகொண்ட
சல்வார்கள், நட்சத்திரம் பதித்த சிவப்பு நிற புடவைகள் மற்றும் எனது பட்டுச் சட்டைகள் – அனைத்தும் அவள் 'போட்டுக்
கழற்றியவை”. என் கணவரும் கூட என் ஆடைகளைப் போலவே”
கர்மான்வாலியின் குரலுக்கு முன்னால் என் பேனா தலைவணங்கியது. எந்த எழுத்தாளனால் இப்படி ஒரு வலியை எழுதிவிட முடியும்?
“நான் அந்த ஆடைகளை எல்லாம் கழற்றி எறிந்து விட்டேன். என் கணவரையும் தான். நான் இங்கே என் மாமா மற்றும் அத்தையிடம்
வந்து விட்டேன். நான் அவர்களின் வீட்டைச் சுத்தம் செய்கிறேன். மேஜையைக் கழுவுகிறேன். மேலும் நான் தையல் இயந்திரமும் வைத்திருக்கிறேன். நாலு துணி தைத்துக் கொடுத்து என் வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன். அது கதர் துணியோ காடா
துணியோ நான் யார் கழற்றிப் போட்டதையும் அணிவதில்லை.”
“என் மாமா சமாதானம் செய்ய முயற்சி செய்து பார்க்கிறார். என் மனம் அவருக்குப் புரியவில்லை. என் மனம் என்ன
சொல்கிறதோ அப்படித் தான் நான் வாழ்வேன். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் என் எண்ணங்களை ஒரு முறை எழுதுங்கள்…!”
கதை நடந்த கர்மான்வாலியின் உடலை ஒருமுறை என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவளுடைய உடல் தான் எவ்வளவு வலிமையானது. அவளுடைய மனம் தான் எவ்வளவு வலிமையானது. கொஞ்ச நேரம் முன்பு இங்கே காரம் அதிகம், மது, கொலைகள் என்று இவற்றையெல்லாம் எண்ணி பயந்து கொண்டிருந்தேன். இங்கே தான் கர்மான்வாலி மிகவும் தைரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சிம்லாவிலிருந்து வரும் வண்டிகள் வெளியே சாலையில் கடந்து செல்வது வழக்கம். பட்டாடைகள் அணிந்த பயணிகள், ஒரு கோப்பை தேநீருக்காக, ஒரு சிகரெட் பாக்கெட்டுக்காக அல்லது சூடான தந்தூரி ரொட்டி சாப்பிடுவதற்காக இந்தக்
கடையில் ஒரு கணம் நிறுத்துவார்கள். அந்தப் பட்டாடைகள் யார் யாரெல்லாம் அணிந்து கழற்றியவை என்று யாருக்குத்
தெரியும். அவர்களுக்காக மேசைகளையும், நாற்காலிகளையும் துடைக்கின்ற கர்மான்வாலியின் உடம்பில் கதர் சட்டை தான் இருக்கிறது.
அவளின் உடம்பு போட்டுக் கழற்றிய துணிகளை அணிவதில்லை.
“உங்களுடைய அந்தப் பணத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் அக்கா.” “அப்படியா? இன்னமுமா?”
“ஆமாம் அக்கா! அந்தப் பணத்தை நான் என் தோழியிடம் அப்போது கொடுத்திருந்தேன் – மறுநாள் தான் உங்கள் படத்தைப் பார்த்தேன்.
பிறகு தான் அந்தப் பணத்தை அவளிடமிருந்து வாங்கி பத்திரப்படுத்தினேன். அக்கா, அந்தப் பணத்தில் உங்கள் கையெழுத்தைப்
போட்டுத் தாருங்கள். அப்புறம் நீங்கள் என் கதையை எழுதி, கட்டாயம் எனக்கு அனுப்ப வேண்டும்.”
கர்மான்வாலி எழுந்து போய் கட்டிலின் அடியில் வைத்திருந்த டிரங்க் பெட்டியைத் திறந்தாள். அதற்குள் ஒரு மரப்பெட்டி
இருந்தது. அதிலிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டை எடுத்தாள்.
“நான் என் பெயரை எழுதித் தருகிறேன் கர்மான்வாலி. நான் எத்தனையோ பெண்களுக்கு என் கையெழுத்தைப் போட்டுத் தந்திருக்கிறேன்.
ஆனால் இன்று என் நோட்டில் உன் கையெழுத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது. கதை எழுதுபவர்களை
விட கதையைத் தன் உடம்பில் தாங்கிக் கொண்டிருப்பவர்களே உயர்ந்தவர்கள் இல்லையா?”
“எனக்கு நன்றாக எழுதத் தெரியாது.” கர்மான்வாலி வெட்கப்பட்டு நெளிந்தாள். “கதையில் என் பெயரைக் கட்டாயம் எழுதுங்கள்.”
“ஆமாம், உன் கையால் எழுதிய உனது பெயரைத் தான் கதைக்குத் தலைப்பாக வைப்பேன்” பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டும்,
பேனாவும் எடுத்துக் கொடுத்தேன். கர்மான்வாலி! இன்று நான் உன் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த ரூபாய் நோட்டில் நீ எழுதிய உன் பெயர், இன்று இந்தக் கதையின் நெற்றியில் திலகமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கதை உனக்கு எந்த நன்மையும் செய்யாது. ஆனால் இந்த நம்பிக்கையை வைத்திரு கர்மான்வாலி யாருடைய குருதியின் நிறம்
இந்தத் திலகத்தின் நிறத்துடன் பொருந்துகிறதோ அவர்கள் இந்தத் தலைப்பை வணங்குவார்கள். அடுத்தவர் போட்டுக் கழற்றியவற்றை அணிந்து கொண்ட கழுத்துகளெல்லாம் இந்தத் தலைப்பின் முன் வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கும்.
Leave a Reply