– கே. பி. பத்மநாபன்
கோழி கூவும் நேரத்தில்
குடிசை வீட்டில் எழுந்திடுவான்;
மேழி தன்னை எடுத்திடுவான்;
மேட்டு வரப்பில் நடந்திடுவான்;
ஆழி சூழ்ந்த உலகினிலே
அனைத்து மாந்தர் பசியாற
நாழி உணவைப் பெறுதற்காய்
நன்றாய் நிலத்தை உழுதிடுவான்;
தாழி தன்னில் கொண்டு வந்த
தண்ணீர் மோரும் கலந்திட்ட
கூழினையே குடித்திடுவான்;
கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்;
கீழிருக்கும் ஆழ்மண்ணைக்
கீழ் மேலாக ஆக்கிடுவான்;
பூழிச்சேற்றில் காலூன்றிப்
பொழுதும் நன்றாய் உழைத்திடுவான்;
ஏழு நாள்கள் வாரத்தில்;
எல்லா நாளும் உழைத்திடுவான்;
வாழும் உயிர்தம் பசியாற்றும்
வள்ளல் அவனை வாழ்த்திடுவோம்!
பாழில்லாமல் பண்படுத்திப்
பயிரைக் காக்கும் உழவனையே
வாழி வாழி என்றே நாம் வாழ்த்திப் போற்றி வணங்குவோமே!
Leave a Reply