– ஓஷோ
ஜப்பானில் ஒரு கதை சொல்லுவார்கள். அதை இங்கு தருகிறோம்.
ஜப்பானில் வெள்ளை எலியை நல்ல சகுனம் என்பார்கள். திடீரென ஒரு வெள்ளை எலியை யாராவது பார்த்து விட்டால் உடனே வெகு மகிழ்ச்சி தான். என்னவோ நல்லது நடக்கப் போகிறது.
ஒருநாள் ஒரு தந்தையும் மகனும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். திடீரென தந்தையின் முதுகுக்குப் பின்னால் ஒரு வெள்ளை எலியை மகன் பார்த்தான். சட்டெனத் திரும்பி விடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் ஒரு விருந்தாளி இருக்கிறார். நல்ல சகுனம். மெதுவாகத் திரும்பி பாருங்கள் என்றான்.
அப்படியே அவரும் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் வெள்ளை எலி. இருவருக்கும் ஏக மகிழ்ச்சி. நல்ல சகுனம் தான். என்னவோ அருமையானது நடக்கப் போகிறது.
அந்த எலி அப்படியே நகர்ந்தது அவர்கள் அதற்குத் தொல்லை ஏதும் தராததால் நடனமாட ஆரம்பித்தது. நடனத்தில் குலுங்கிய போது அது சாதாரணப் பழுப்பு எலியாகி விட்டது. உண்மையில் அது ஒரு மாவு டின்னுக்குள் விழுந்து விட்ட பழுப்பு எலி தான் (பழுப்பு நிற எலி) மாவு அப்பிக் கொண்டிருந்த வரை வெள்ளையாகத் தெரிந்தது. நடனமாட ஆரம்பித்தவுடன் பழுப்பாகி விட்டது. தந்தையும் மகனும் கண்களை மூடிக் கொண்டார்கள். நல்ல சகுனம் மறைந்து போய்விட்டதே! கண்களை
மூடினாலும் பழுப்பு நிற எலிதான் அங்கே இருக்கிறது.
அருமையான கதை. இப்படித்தான் எல்லாமும் நடக்கிறது. மகிழ்ச்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்காதே. அப்பிய மாவு சிதறி விழுந்து விடும். திடீரென ஓ! இது பழுப்பு நிற எலி என்று சொல்வாய். தவிர்த்துவிடு. உனக்குப் பின்னால் ஒரு வெள்ளை எலி குதித்து ஆடிக் கொண்டிருக்கட்டும். ஆனால் அதை குறிப்பாகப் பார்க்காதே. நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்காதே. ஏனென்றால் வாழ்வில் மகிழ்ச்சியும், துயரமும் வெவ்வேறானவை அல்ல. பகல் இரவாகிறது. இரவு மீண்டும் பகலாகிறது. அரு ஒரு வட்டம். வண்டியின் சக்கரம் போலச் சுழல்வது. மீண்டும் மீண்டும் அதே ஆரக்கால் மேலே வந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
Leave a Reply