சிவ. விஜயபாரதி
தாகத்திற்கு இறைஞ்சுகிறது
பாவப்பட்ட உயிர்.
கைககளை
அகல விரிக்கின்றன
ஞானமிகு பழைமைகள்.
தற்காலிக
கதையொன்றினை அளந்து
ஒருக்களித்து நகர்கிறார்கள்
நிலைமை உணர்ந்த யாவரும்.
குரல்வளை நெறிக்கின்றன
கையளிக்கப்பட்ட நீரினை
கேட்டு வரும்
அலையழைப்புகள் .
வற்றும் முன் வழிந்தோடிய
உப்பு நீர்த்தடங்கள் குறித்து
அதன் சிற்றுயிர்கள்
எழுப்பும் வினாவிற்கு
உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள்
விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ
மலங்க மலங்க
விழிக்கிறதந்த உயிர்
மங்கும் விழிகளோடு
மரங்களிடம் இறைஞ்ச
அசைந்து அது மேலேப் பார்க்க
வானத்தில் திரண்டிருக்கிறது மேகம்.
…………………………..
…………….
விளக்கு அணைக்கப்பட்ட அறைக்குள்
பூச்சிகளின் சத்தங்கள் கேட்காதபடிக்கு
இரைச்சலூடே சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி
சாளரத்தின் வழி வரும்
ஈரக்காற்று சொல்கிறது
எங்கோ பெய்யும் மழையை
மீன்கள் பூக்காது அடர் இருளைப்
பூசியிருக்கிற வானம்
இங்கேயும் பொழியலாம்
புழுக்கத்துடன் நகர்கின்ற இவ்விரவில்
பூனையொன்று பாத்திரத்தை தள்ளி
பாலைச் சப்புக்கொட்டியபடி தாவுகிறது
அடுத்தடுத்தாய் உதிர்கிறது பூ
ஆயிரம் களிறுகள் நெஞ்சில்
மிதிக்கும் இரணத்துடன்
அழுது கொண்டிருக்கிறது செடி
புரண்டு புரண்டு நீண்டு கொண்டே இருக்கிறது.
Leave a Reply