உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”

உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”

  • By Magazine
  • |

நமது மூலிகை மருத்துவர்

இலவு மரம், ஏரிக்கரை ஓரம், தரிசு நிலம், சாலை ஓரங்கள் மற்றும் மலைசார்ந்த நிலங்களில் தானாகவே வறட்சியை தாக்கு பிடித்து வளரும் மரவகை ஆகும்.

இதனை விதை மூலம் நடவு செய்யலாம். 3 முதல் 5 வருடங்களில் காய்கள் உண்டாகி பலன் கொடுக்கும். வறட்சி மற்றும் பூச்சி தொல்லைகளை தாக்கு பிடித்து பராமரிப்பு செலவு இன்றி வளர்கிறது.

இம்மரம் நேராக சுமார் 70 அடி வரை வளரும். முள் இலவு மரத்தின் தண்டில் தட்டையான, கனமான முள் இருக்கும். இலைகள் கைவிரல் போன்ற அமைப்புடன் ஏழு இலைகள் கூட்டாக பெரிய காம்பில் இணைந்திருக்கும்.

பூக்கள் செந்நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும். காய்கள் பச்சைநிறத்தில் கூம்பு வடிவில் இருக்கும். காய் முதிர்ந்து பழுப்பதில்லை. மாறாக காய் உலர்ந்து வெடித்து பஞ்சுடன் விதைகள் வெளிவரும்.

இதன் பஞ்சு மென்மையாக வெண்ணிற பட்டு போன்று காணப்படும். இதன் பஞ்சில் வலிமை இல்லை. ஆகவே நூல் நூர்க்க முடியாது. மேலும் தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையது. பருத்தி பஞ்சை போன்று நீர் உறிஞ்சும் தன்மை இதற்கு இல்லை.

இலவு மரம் இந்தியா, பர்மா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் நன்கு வளர்கிறது. இலவமரம் என்றாலே அதன் பஞ்சு தான் நினைவிற்கு வரும். ஆனால், இம்மரத்தின் அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

தாவரவியல் பெயர் :

Bombax malabaricum

ஆங்கில பெயர் :

Shalmali, semal tree, Red silk, Cotton tree, silk cotton tree, Indian bombax

வேறுபெயர்கள்

முள் இலவு, சான்மலி, பூரணி, பொங்கர், இலவமரம், கோங்கிலவுமரம், சிரஞ்சீவிமரம்

இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்

பூ    – Apigenine, cosmetine, xanthones, coumarins

பிசின் – Gallic Acid, Tannic acid

பட்டை – Lupeol

விதை – Myristic acid, palmitic acid, linoleic acid etc.

முள் இலவு மரத்தின் மருத்துவபயன்கள்

1. முகப்பருவிற்கு

முள் இலவு மரத்தின் முள்ளை பொடித்து பாலில் கலந்து முகப்பருவில் பூசி வர முகப்பரு மாறும்.

2. மலச்சிக்கல் மற்றும் பெரும்பாட்டிற்கு

உலர்ந்த இலவம்பூ, கசகசா வகைக்கு 5 கிராம் எடுத்து பொடித்து பாலில் கலந்து தினம் இருவேளை வீதம் குடித்து வர மலச்சிக்கல், மூலம், பெண்களுக்கான பெரும்பாடு குணமாகும். மேலும் உடல் குளிர்ச்சியடையும்.

3. வாய்ப்புண் மாற

இலவம் பட்டையை கசாயமிட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மாறும்.

4. இடுமருந்து விஷம் மாற

இலவம்பட்டையை புதிதாக எடுத்து அரைத்து (எலுமிச்சங்காய் அளவு) புளித்த நீர் ஆகாரத்தில் கலந்து ஆகாரத்திற்கு முன் குடித்துவர இடுமருந்து விஷம் மாறும்.

5. நீர்க்கடுப்பு மற்றும் பெரும்பாட்டிற்கு

இலவம் பட்டையை பொடித்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும். இப்பொடி ஒரு கரண்டி எடுத்து தினம் இருவேளை பாலில் கலந்து சாப்பிட, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், வெள்ளைபடுதல் குணமாகும்.

மேலும் இப்பொடியை மோரில் கலந்து தினம் இருவேளை குடிக்க பெரும்பாடு குணமாகும் அல்லது இலவம்பட்டை சாற்றை 20 மில்லி எடுத்து பால் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.

6. ஆண்மைகுறைவு மற்றம் தாது பலகீனத்திற்கு

இலவம் பிசின், வேலம்பிசின், முருங்கைபிசின் இவைகள் வகைக்கு  50 கிராம் அளவு எடுத்து தனித்தனியே பசுநெய்யில் வறுத்து கொள்ள வேண்டும். ஏலக்காய் 10 கிராம் இவைகளை சேர்த்து பொடித்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கரண்டி சூரணத்தை சூடான பாலில் போட்டு அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து தினம் இரவு குடித்துவர ஆண்மை குறைவு, தாதுபலகீனம் மாறி வீரியவிர்த்தி உண்டாகும்.

7. உடல் காந்தல், நீர் எரிச்சல் மாற

இலவம்பிசிளை நெய்யில் வறுத்து பொடித்து கொள்ள வேண்டும். இப்பொடி 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து தினம் இருவேளை குடித்துவர உடல்காந்தல், நீரி எரிச்சல், நாட்பட்ட வெள்ளைபடுதல் மாறும்.

8. புண்கள் ஆறுவதற்கு

முள் இலவு மரத்தின், மரபட்டையை அரைத்து புண்களின் மீது பூச அவை மாறும் அல்லது இலவம் பிசினை பொடித்து நெய்யில் கலந்தும் பூசலாம்.

9. நல்ல தூக்கத்திற்கு

இலவம்பஞ்சு உடல் சூட்டை தணித்து நல்ல தூக்கத்தை உண்டாக்கும். “இலவம் பஞ்சில் துயில்” என அவ்வையார் கூறியிருக்கிறார்.

ஆகவே இலவம்பஞ்சு மெத்தை, தலையணை தூக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

10. மராட்டி மொக்கு

     சமையலுக்கு பயன்படுத்தப்படும் மராட்டி மொக்கு என்பது Cebia pentandra என்னும் ஒருவகை இலவமரத்தின் உலர்ந்த மொட்டு ஆகும். இதனை Kabok buds என்பர். இது சமையலுக்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும். மேலும் உடல் பலகீனம், விந்தணு குறைவு இவற்றிற்கும் சிறந்தது.

11. கவனிக்க வேண்டியவைகள்

  1. அதிகமாக பயன்படுத்தினால் மலச்சிக்கல், அஜீரணம் உண்டாகலாம்.
  2. விதையில் Cardenolide என்னும் நச்சுப்பொருள் இருப்பதால் அதிக அளவில் பயன்படுத்த கூடாது.

கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின் படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *