எம்.முகுந்தன். மலையாள நாவலாசிரியர்.
தமிழில் :கிருஷ்ணகோபால்
இரயில் ஒரு வாகனம் மட்டுமல்ல அனுபவம் கூட தான். பல வேளைகளிலும் அது வீட்டு நினைவுகளும் நிறைந்ததே…
என்னுடைய வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கென தனியொரு இடம் உண்டு.
அரை நூற்றாண்டிற்கும் மேலாக நான் தொடர்ந்து இரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.அந்த அலைச்சலைக் குறித்து ஒர்மை வரும் போது சென்னை நகரத்தைக் குறித்து சொல்லாமல் கடந்துச் செல்ல இயலாது.
மய்யழியில் புகைவண்டி நிலையத்தை அடுத்துத்தான் என்னுடைய பழைய காலத்து வீடு. அன்று அது ஒரு சின்ன அளவிலான நிலையமாக இருந்தது. வீட்டிலிருந்து புகைவண்டி நிலையத்திற்கு நடந்துச் செல்லலாம். பத்து பன்னிரண்டு நிமிடங்களில் அங்குப் போய் சேர்ந்து விடலாம். மேலும் புகைவண்டி நிலையத்தின் வழியேச் செல்லும் புகை வண்டியின் சப்தத்தை நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.
நிசப்தமாக இருக்கும் போது சின்ன ஒலியும் பெரிதாக கேட்கும் அல்லவா அப்படித்தான் இரவு செல்லும் வண்டிகளின் ஒலி பேரிரைச்சலாகக் கேட்கும்.
முதன் முதலில் மய்யழியிலிருந்து கோழிக்கோட்டிற்கு புகைவண்டியில் ஏறிச் சென்றேன். இங்கிருந்து கோழிக்கோட்டிற்குச் செல்லும் தூரம் அறுபது கிலோ மீட்டர்தான். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். அப்பாவோடு வண்டியில் ஏறி இறங்கும் போது புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைவதை உணர்ந்தேன்.
வண்டி கிளம்பிச் செல்லும் போது புத்துணர்ச்சி பொங்க அப்பாவோடுச் சொன்னேன். ‘அப்பா தென்னை மரங்கள் பாய்ந்து செல்கின்றன.’
அது எனக்கு வியப்பாக இருந்தது. வண்டி வேகம் செல்லும் போது தென்னைமரங்கள், வயல்கள், வீடுகள், சிறு குன்றுகள் என எல்லாம் பின்பக்கமாக பாய்ந்துச் சென்றன. நான் அதிசயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்போதிருப்பதுப்போலுள்ள புகை வண்டிகளல்ல அப்போது இருந்தது. உண்மையிலேயே அவைகள் புகைவண்டிகளாக இருந்தன. புகையையும் தீயையும் துப்பிக் கொண்டு ஆவி வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. சில வேளைகளில் தண்ணீர் நிரப்புவதற்காக அந்த வண்டிகள் மய்யழியில் நிறுத்தப்படும்.
வண்டி வரும் போது ஆகாயத்தில் நாம் முதலில் காண்பது புகைக் கூட்டத்தைத் தான். தூரத்தில் தெரியும் மரங்களின் ஊடே புகை வந்துக் கொண்டிருக்கும். பிறகு வண்டியின் இரைச்சல் கேட்கும். அதன் பிறகேதான் வளைவுகளில் கடந்து வரும் வண்டியைக் காண முடியும். பிறகு அது ப்ளாட்பாமில் வந்து நிற்கும்.
1960- களின் தொடக்கத்தில் நான் முதன்முதலில் டெல்லிச் சென்றேன்… எனது வாழ்க்கையில் மய்யழியில் என்னும் கிராமப்புறத்திலிருந்து தேர்வு எழுத பெரிய நகரத்தை நோக்கியப் பயணப்பட்ட தருணம் அது. இயல்பாகவே அந்தப் பயணம் புகைவண்டியாக இருந்தது.
மய்யழியிலிருந்து புகைவண்டியில் ஏறி அடுத்த நாள் மதியவேளையில் மதராசில் வந்திறங்குவேன். அன்று சென்னை மதராஸ் என்ற பெயரில்தான் அறியப்பட்டிருந்தது. அதனால் இப்பொழுதும் என் மனது அந்த நகரத்தை மதராஸ் என்றே அழைக்கிறது. டில்லிக்குச் செல்லும் புகைவண்டி அடுத்தநாள் காலையில்தான் இங்கிருந்துப் புறப்பட்டுச் செல்லும் என்பதால் மதராசில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது. எனது தங்கல் எப்போதும் மதராஸ் சென்ரல் நிலையம் அருகில் உள்ள ஏதோ ஒரு தங்கும் விடுதியில் தான் இருக்கும். அந்த நேரத்தில் எனது உடைமைகளை தங்கும் விடுதியில் வைத்து விட்டு, குளித்து புத்துணர்வடைந்து வெளியே கிளம்புவேன். மூர் மார்கெட்டை சுற்றி நடப்பேன். அது வியப்பளிக்கும் ஒரு வியாபார ஸ்தலம். அங்கு கிடைக்காது என எந்தப் பொருட்களும் இருக்க முடியாது. இன்றைய மால்கள், பெரு நிறுவன அங்காடியின் ஆதி வடிவம்தான் மூர் மார்க்கெட்.,
அன்று மதராசிலிருந்து டில்லிக்கு இரண்டு வண்டிகள் மட்டுமே இருந்தன.’க்ரான்ஸ் ட்ராங் எக்ஸ்பிரஸ்’ என்ற வேகமாகச் செல்லும் வண்டியைத்தான் எல்லோரும் விரும்பினார்கள். இரண்டு முழுநாட்கள் அதில் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாடு ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் என எல்லாம் கடந்துச் செல்லும். சுருங்கச் சொன்னால் மய்யழியிலிருந்து கிளம்பி நான்காம் நாள்தான் டெல்லிச் சென்றடைய முடியும். அப்போது நாக்பூரில் தாராளமாவும் மலிவாகவும் கிடைக்கும் ஆரஞ்சுப் பழங்களை வாங்கிக் கொள்வேன். கொள்ளைக்காரர்களின் இருப்பிடமான சம்பல்காடுகளின் ஊரை வண்டி கடந்துச் செல்லும் போது நாடி நரம்புகளில் பயம் தொற்றிக் கொள்ளும். இதையெல்லாம் அனுபவித்துத்தான் நிறைவில் டெல்லி வந்தடைவேன்.
அதன் பிறகு இந்தியாவின் பல பாகங்களிலும் புகை வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். எனது எல்லா பயணங்களின் நினைவுகளில் புகைவண்டி நிறைந்து நிற்கிறது. காலம் கடந்துச் சென்றது.. கொங்கன் இரயில்வே வந்தப் பிறகு இப்போது டில்லிக்குச் செல்ல வேண்டுமென்றால் மதராஸ் வழி செல்ல வேண்டுமென்பதில்லை. இவ்வாறு தான் எனது டெல்லி பயணங்களில் மதராஸ் காணாமல் போனது.
இப்போது தீயும் புகையும் உமிழ்ந்து ஆவி பறக்கும் புகை வண்டிகளல்ல. அதற்குப் பதிலாக மின்சாரமோ டீசலோ பயன்படுத்தி அதிவேகமாக குதித்தோடும் இரயில்கள் வந்து விட்டன. மதராசும் இப்போது இல்லை இப்போது இருப்பது சென்னை. மூர் மார்க்கெட்டும் இல்லாமல் போனது. இருப்பினும் என் மனதில் இப்போதும் மதராஸ் சென்ரல் நிலையமும் அதனைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகளும்; மூர்மார்கெட்டும் உண்டு. அதெல்லாம் எங்கேயும் போகவில்லை. போகப் போறதுமில்லை..
Leave a Reply