மகத்துவம் மிக்க மகிழம் பூ

மகத்துவம் மிக்க மகிழம் பூ

  • By Magazine
  • |

அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ (நாட்டு மருந்து கடைகளிலும், பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் தாராளமாக கிடைக்கும்.)

மகிழம் பூவானது சூடுவதற்கானது மட்டுமல்ல;  பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலைவலி போக்கும். அமைதியான தூக்கம் தரும் போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்;

மன மகிழ்ச்சிக்கு  என்று ஒரு  மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும், அதன் மணத்தை முகர்ந்தாலும் இன்னமும் அது மனதை  மகிழ்விக்கிறது .

பூ  என்றாலே மணம் தான், மணம் இல்லாத  பூக்கள் பயனற்றவை !

அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. இது பற்றி நிறைய இலக்கிய குறிப்புகளும், வரலாறும் கொண்டது.

அடர்த்தியான கரும்பச்சை இலைகளைக் கொண்டது மகிழம் மரம். இதன் தாவரவியல் பெயர் Mimusops elengi (Bakula)  இதன் பூ சந்தன நிறத்தில் இருக்கும் மகிழம்பூ.  மேலும் அதன் நறுமணம் அதிகரிக்கும். அதனால் தான் கடவுள்களுக்குக் கூட. காய்ந்திருந்தாலும் மகிழம் பூவினை மாலையாக அணிவிக்கிறார்கள்.

மகிழ மர தல விருட்சம் உள்ள கோயில்கள்…

திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர் திருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழம் மரம் தல மரமாகக் காணப்படுகிறது.

சைவ, வைணவ தொடர்பு மட்டுமல்லாது, புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று.

சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில் தான் ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது .

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.

இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.

இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது

இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்து கொள்வர். இதன் பூவின்  சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், நறுமண-எண்ணெய், மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

மகிழம் மரத்தின் காய், பழம், இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

மகிழம் காய்

மகிழம் காயை பல்லில் வைத்து மெல்லும்போது அதிலிருந்து ஒரு பால் வரும். அப்படியே சாப்பிடலாம். அந்த காய் நல்ல துவர்ப்பாக இருக்கும். மகிழம் காயை சாப்பிட்டால் உடனடியாக பல் வலி குறையும்.

15 நாட்கள் அல்லது ஒரு மாதம் தினமும் ஒரு மகிழம் காயை சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும். ஈறுகள் இறுகி பல் ஆடுவது நிற்கும்.

மகிழம் பழம்

மகிழம் பழம் நல்ல வாசனையாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும். மகிழம் பழம் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி குறையும். தசைகளின் இறுக்கம் கொஞ்சம் தளர்வதால் தலைவலி நீங்குவதோடு நல்ல தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவையும் நீங்கும். ஒன்று அல்லது இரண்டு பழங்கள் வரை சாப்பிடலாம்.

மகிழம் பூ

மகிழம் பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீரை அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கற்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர, உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.

பூ 50 கிராம், 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிமை பெறும்.

மகிழம் பட்டை

மகிழம் பட்டையை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீரை அரை டம்ளர் அளவுக்கு குறையும் (வற்றும்) வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக கருப்பை பலப்படும். இந்த கஷாயம் பருக காய்ச்சலும் குறையும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும்.

மகிழம் மரத்தின் பாகங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உடையவை. அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர பாத வெடிப்புகள் குறையும். தோல் வறட்சிக்கும் இப்படி செய்து வர தோலில் உண்டாகும் வறட்சி நீங்கும்.

கருவேலம்பட்டை போல் மகிழம் பட்டைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது. மகிழம் பட்டைகளை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வர வாய்ப்புண் குறையும்.

மகிழம் இலைகள்

மகிழம் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய நீரை கொண்டு உடலை துடைக்க உடல் வெப்பம் குறைந்து காய்ச்சல் குறையும். மகிழம் இலைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை, மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோள்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக்.

காய்ந்த மகிழம் பூவை அரைத்து பொடி தயாரிக்கலாம். இதன் பட்டையையோ, பட்டை கொண்ட குச்சியையோ கொண்டு பல் துலக்கினால் ஆடும் பற்கள் நிலைத்து நிற்கும், ஈறு நோய்கள் குணமாகும், பல் சுத்தமாகும், பயோரியா நோய் குணமாகும், வாய்ப் புண்கள் மறையும். பல் பாதுகாப்புக்கான தலைசிறந்த தாவரங்களில் இது ஒரு முக்கியமான தாவரம். நமது சிறுநீரகத்திலும், சிறுநீர்க் குழாய்களிலும் அதிக அளவு சளி போன்ற பொருட்கள் சுரப்பதை இதன் பட்டைத் தூளை உட்கொள்வது தடுக்கிறது. மேலும், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் வியாதிகள், கருப்பைக் கோளாறுகள் மற்றும் பலமின்மை, ரத்தச் சோகை, புண்கள் போன்றவற்றை மகிழம்பட்டை குணப்படுத்துகிறது.

– ஜன.ஓம்மகிழ்நன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *