– முனைவர் முல்லைத்தமிழ்
வாறிளகி வர்மம்
சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம்.
கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு
வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே
தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த
உள்வளைவில் உறங்குகின்ற வாறின் மேலே
கோனென்ற கொடுவர்மமிது
……………………………………….. தானாச்சு”.
– வர்ம சூக்ஷ நிதானம்
மேலும்,
“வலுவாக கொண்டிடுகில் கேளு
நானென்ற மேனி நிலை தளர்ந்து போச்சே
போச்சென்ற பஞ்சவர் கருத்தயர்ந்து
பதட்டமுடன் தடுமாறி மூச்சயரும்
கூச்சென்ற கூகையைப்போல மாறும் மேனி
கூத்தனவன் கூடுவிட்டோடினாற்போல்
வாச்சென்ற வன்குறிகள் வந்துற்றுமே
அலைக்கழிக்கு அவனியுள்ளே
நாச்சென்ற நாள்வரைக்கும் பழுத்தப்பழம்
போலாகும் பார்த்தறிந்து கொள்ளே”.
– வர்ம சூக்ஷ நிதானம்
“கொள்ளவே நாட்சென்றாலங்கு
தொட்டவுடன் கரகரத்துயிருமலாகும்
மெள்ளவே மூச்சுமுட்டு மேனியழல்
மிச்சியே வருகும் பாரே
எள்ளவே சொன்னதில்லை எடுத்திருத்தி
இருபுறமும் தடவித்தாத்து
அள்ளவே இளகுதற்கு அகம் புறமும் ஏற்றி
இறக்கி தடவியே யடங்கல் செய்யே”.
– வர்ம சூக்ஷ நிதானம்
“செய்யவே அடங்கல் தன்னை செப்புவேன்
இனியும் கேளாய் பள்ளையுடன் தட்டு
பகரவே வாரிகோரி வாங்கியே பேன்குழியும்
ஏற்றியிறக்கி இருபுறமும் தடவி
நய்யவே சிப்பிச்சக்கரம் சேரவே பக்கதாரை
தடவியே வலித்துப்பின்னி சுழற்றியே
நகரவே நால்வசமும் தடவியே நல்
உச்சி உள்ளங்கால் ஓங்கல் செய்யே”.
– வர்ம சூக்ஷ நிதானம்
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
வாறிளகி வன்மம் இஃது வழங்கு சீப்பெல் அகவரிசார்
மாறியதன் கீழ் வாறிளகி நின்றதொரு தலமதுவாமிஃது
தேறிய தாக்கமதால் கடம்தளர்ந்து மூச்சிரைத்து முடக்கம்
நீரிழகித் தொடருமாம் வலியுடன் வியர்வை குத்துமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
முதுகில் பின்பக்கம் புயத்துடனிணைந்த ஆடை எல் அல்லது பலகை எல் எனப்படும் எலும்பின் கீழ்முனையின் முதுகெலும்பு சார்ந்த வரியில் உள்ள வார் (தசைக்கட்டு) கட்டு இளகிக் காணப்படும் இடமே வாறிளகி வர்மம் எனப்படும். இந்த இடத்தில் தாக்கம் கொண்டால் உடனே உடல் தளர்ந்து, மூச்சிரைப்பு உண்டாகி அடைத்துவிடும். அத்தலத்தில் நீர் கட்டு உண்டாகி தொடர்ந்து வலியுடன் வியர்வையும் குத்துவலியும் உண்டாகும்.
குத்துண்டாம் வாறிளகிக்ககம் ஊக்கம் கொண்டால்
மத்துண்டாம் தலைதனில் உள்நடுங்கி விறைக்கும்
தத்துண்டாம் நாளறுபதுக்குள் அகம்தளர்ந்துபழுக்கும்
தெத்துண்டாம் நாவும் குளறும் படபடப்புமென்னே.
-வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வாறிளகி வர்மம் அகந்தாவி ஊக்கமாகக் கொண்டால் தலைப்பாரம் உண்டாகும், உள்நடுக்கமும் விறையலும் தோன்றும். அறுபது நாள் அவதிக்குள் உடல் தளர்ந்து பழுத்த பழம் போல் ஆகிவிடும். தொடர்ந்து நாவும் குளறும் என்பதாம்.
வன்மம் வாறிளகிக் கொண்டங்கு குணம்வரினும்
தன்மம் பாகம் தவறிடிலோ வந்திடும் குணம்பலது
பன்மம் பறைந்திடில் மூச்சடரும் மடைக்குமிஃது
குன்மம் குளப்பம் கூடியேயழிவுறும் சடமே.
விளக்கம்
வாறிளகி வர்மத்தில் தாக்குண்டவர்க்கு மருத்துவம் செய்து குணம் வந்தாலும் கைபாகம் மெய்பாகம் தவறி முழுமையான மருத்துவம் செய்யாமல் விட்டுவிடில் பலவித குறிகுணங்கள் பின்னாட்களில் உண்டாகும். அதைப்பற்றிப் பேசும்போது மூச்சிரைப்பு, மூச்சடைப்பு, மனக்குளப்பம் கூடி உடல் தளர்ச்சையுற்று உடலும் அழிவடையும் என்பதாம்.
வாறிளகி வர்மந்தன்னை வகையுணர்ந்து தூண்டுறில்
மாறிடும் இரைப்புடன் அசதியும் இருமலும் இணையிலா
தேறிடும் வகையிதாம் சடமதும் உற்றிடும் வாந்தியுடன்
ஆறிடும் அகமதன் விறையல் தளர்ச்சையும் எனலே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வாறிளகி வர்மத்தை முறைப்படி அறிந்து தூண்டிக் கொடுக்கும்போது மூச்சிரைப்பு, உடல் அசதி, தீராத நாட்பட்ட இருமலும் மாறி உடலும் தேர்ச்சியடையும். மேலும் வாந்தியும், உள்நடுக்கமும், உடல் தளர்வும் மாறிவிடும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், உடலில் வலிமை குறைந்து, பஞ்சபூதங்களும் தங்கள் இயக்கங்களில் மாற்றமுற்று பதட்டமுறும். எனவே மூச்சு தடுமாறி அயர்ந்து போகும். கூகை அலறுவதுபோல் மூச்சிரைப்புடன் சத்தமிடும். உடலிலிருந்து உயிர் பிரிவது போல் உள்கொழுத்தும், அச்சமும் உண்டாகும். வியர்வையுடன் கூடிய பரபரப்பு, படபடப்பு உண்டாகும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது கஷ்டங்களை உண்டுபண்ணிக் கொண்டேயிருப்பது இவ்வர்மத்தின் குணங்களில் ஒன்றாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் எதிர்புறம் தட்டி, வர்மாணி தடவுமுறைப்படி தடவி, அடங்கல்களை தூண்டி உச்சியில் அமத்தல் செய்ய சுகம் வரும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவது கஷ்டங்கள் உண்டாவதுடன், தொண்டை கரகரப்பு, இருமல், மூச்சிரைப்பு போன்ற பின்விளைவுகளில் ஒன்றோ பலவோ உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை தகுந்த தூண்டுமுறை நுட்பங்களைப் பயன்படுத்தி தூண்டிவர, தொண்டை நோய்கள், வாதம், வாதவலிகள், இழுப்புநோய், இருமல், முதுகுவலி, கழுத்துவலி, தளர்ச்சி, உடல்சூடு, வாந்தி, அதிவியர்வை, கோபம் போன்ற நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply